20 ஓவர் கிரிக்கெட்: கெய்ல் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி- நியூசிலாந்தை வீழ்த்தியது

நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தில் உள்ள லவ்டர்வரில் மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. கிறிஸ் கெய்ல் 52 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்னும் (அவுட் இல்லை), பொல்லார்ட் 29 பந்தில் 63 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 18.3 ஓவரில் 153 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 56 ரன்னில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தொடக்க வீரர் நிக்கோல் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரீன் 3 விக்கெட் கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

5:05 PM | தலைப்பு: , , | Read More »

பிரெஞ்சு ஓபன் ஷரபோவா சாம்பியன்


பாரீஸ், ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 10-வது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஷரபோவா. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சரா எர்ரானியைத் தோற்கடித்தார். தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஷரபோவா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷரபோவா 2004-ல் விம்பிள்டனிலும், 2006-ல் அமெரிக்க ஓபனிலும், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற ஷரபோவா, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தாலியின் சரா எர்ரானி, கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வென்ற ஷரபோவாவுக்கு ரூ.8.6 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இரண்டாவது இடத்தைப் பிடித்த சரா எர்ரானிக்கு ரூ. 4.3 கோடி கிடைத்தது.

1:36 PM | தலைப்பு: , | Read More »

"யூரோ கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது டென்மார்க்

நெதர்லாந்து அணிக்கு எதிரான "யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது "யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. கார்கிவ் (<உக்ரைன்) நகரில் உள்ள மெட்டாலிஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த "பி பிரிவு லீக் போட்டியில், "பிபா ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, 9வது இடத்தில் உள்ள டென்மார்க் அணியை எதிர்கொண்டது.ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோல் அடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் மைக்கேல் குரோன் டெல்லி, ஒரு கோல் அடித்தார். இதற்கு நெதர்லாந்து வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த நெதர்லாந்து அணியினரின் கோல் அடிக்கும் முயற்சியை, டென்மார்க் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். ஆட்டநேர முடிவில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ரஷ்யா வெற்றி:நேற்று முன்தினம் "ஏ பிரிவு லீக் போட்டியில் ரஷ்யா, செக் குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே ரஷ்ய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. 15வது நிமிடத்தில் ரஷ்ய அணிக்கு ஆலன் ஜகோயவ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்த அணிக்கு ரோமன் ஷிரோகோவ் 24 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, ரஷ்ய அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.தகுதி சுற்றில் ரஷ்ய அணியின் பாதுகாப்பு அரண்களை மீறி கோல் அடிப்பது சிரமமாக இருந்தது. இதே போல, நேற்றும் தற்காப்பு பகுதி வீரர்கள் ரோமன் ஷரோனவ், விளாடிமிர் கிரானட் ஆகியோரை மீறி, கோல் அடிப்பது செக் குடியரசுக்கு சிரமாகவே இருந்தது. ரஷ்யாவின் ஆலன் ஜகோயவ், இரண்டாவது கோல் (79வது நிமிடம்), ரோமன் பவ்லிசென்கோ 82வது நிமிடம் ஒரு கோல் என அசத்தினர். செக் குடியரசு சார்பில் வாக்லவ் பிலா (52வது நிமிடம்) மட்டும் ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் ரஷ்ய அணி 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது.

1:35 PM | தலைப்பு: , | Read More »

யூரோ கோப்பை: போலந்து-கிரீஸ் "டிரா * முதல் சவாலில் "டென்ஷன் எகிறியது


வார்சா: யூரோ கோப்பை தொடரில், போலந்து-கிரீஸ் மோதிய பரபரப்பான முதல் லீக் போட்டி டிரா(1-1) ஆனது. இரு அணிகளும் தலா ஒரு "ரெட் கார்டு பெற்றது, அரிய "பெனால்டி வாய்ப்பை "மிஸ் பண்ணியது என போட்டி முழுவதும் "டென்ஷன் எகிறியது. ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது "யூரோ கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. வார்சாவில் நடந்த முதல் லீக் போட்டியில், "ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து, கிரீஸ் அணிகள் மோதின. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்துடன் போலந்து வீரர்கள் துடிப்பாக ஆடினர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லெவண்டாவ்ஸ்கி தலையால் முட்டி ஒரு, சூப்பர் கோல் அடிக்க, போலந்து 1-0 என முன்னிலை பெற்றது. சாக்ரடீஸ் "அவுட்: இதற்கு பதிலடி கொடுக்க முற்பட்ட கிரீஸ் அணியினர் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். 35வது நிமிடத்தில் சாக்ரடீஸ் பாப்பஸ்டத்தோபவுலோஸ், "எல்லோ கார்டு பெற்றார். மீண்டும் 44வது நிமிடத்தில் போலந்து வீரர் முராவ்ஸ்கியுடன் மோதினார். இம்முறை லேசான மோதல் தான். ஆனால் அவசரப்பட்ட ஸ்பெயின் நடுவர் கார்லோஸ் கார்பெல்லோ, சாக்ரடீசுக்கு மீண்டும் "எல்லோ கார்டு காட்டினார். இரண்டாவது முறையாக "எல்லோ கார்டு என்பதால், "ரெட் கார்டு காட்டி சாக்ரடீஸ் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கிரீஸ் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. முதல் பாதி முடிவில் போலந்து 1-0 என்ற முன்னிலையில் இருந்தது. கிரீஸ் எழுச்சி: இரண்டாவது பாதியில் கிரீஸ் வீரர்கள் எழுச்சி கண்டனர். ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் டிமிட்ரிஸ் சால்பின்கிடிஸ் ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் போலந்து கோல்கீப்பர் வோஜ்சியச் செஸ்னி, "ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதற்காக அளிக்கப்பட்ட "பெனால்டி வாய்ப்பை கிரீஸ் தவற விட்டு ஏமாற்றியது. இரு அணிகளும் தலா 10 வீரர்களுடன் விளையாடியதால், தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தின. இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புளளி பெற்றனர். வில்லனாக மாறிய கேப்டன் கிரீஸ் அணிக்கு கேப்டன் கியார்கஸ் கராகுனிஸ் வில்லனாக மாறினார். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் சால்பின்கிடிஸ் கோல் அடிக்க மின்னல் வேகத்தில் பறந்து வந்தார். இவரை முரட்டுத் தனமாக மடக்கிய போலந்து கோல்கீப்பர் வோஜ்சியச் செஸ்னியை, நடுவர் "ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார். தவிர, பெனால்டி வாய்ப்பும் அளித்தார். ஆனால், கீரிஸ் கேப்டன் கராகுனிஸ் மிகவும் மந்தமாக வலது திசையில் பந்தை அடித்தார். இதனை சரியாக கணித்த போலந்தின் மாற்று கோல்கீப்பர் டைடன் துடிப்பாக தடுக்க, கிரீசுக்கு கிடைத்த பொன்னான வெற்றி வாய்ப்பு பறிபோனது.

10:28 AM | தலைப்பு: , , | Read More »

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ்' :இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி


புதுடில்லி:ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களுக்கான உணவு தயாரிக்கும் அசுத்தமான "கிச்சனில்' கரப்பான் பூச்சிகள் தாராளமாக ஓடுகிறதாம். இப்படி உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், பதக்க கனவு எப்படி நனவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர் கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார். இங்கு தான் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பது சோதனையில் அம்பலமானது. இது குறித்து 1986ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங் கூறியது: பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன்' மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது. இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பு அளித்தது. குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர். நான் ஆய்வு செய்த போது, "மெனு'வில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு கஜான் சிங் கூறினார்.சமையல் ஒப்பந்தம் பெற்றவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில்,""சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது,''என்றார்.

12:31 PM | தலைப்பு: , , | Read More »

அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்! * இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்


இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் அசத்திய இந்திய அணி, ஐந்தாவது முறையாக வெண்கலம் வென்றது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தை மிகச் சுலபமாக வீழ்த்தியது. மலேசியாவில் உள்ள இபோ நகரில், 21வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். 35வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இங்கிலாந்தின் ஆஷ்லே ஜாக்சன் கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் எழுச்சி கண்டனர். 43வது நிமிடத்தில் ஷிவேந்திரா சிங் ஒரு கோல் அடித்து நம்பிக்கை தந்தார். 52வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை சந்தீப் சிங் கோலாக மாற்ற இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. பின், 69வது நிமிடத்தில் துஷார் கண்டேகர் ஒரு கோல் அடிக்க, இந்திய அணியின் வெற்றி பிரகாசமடைந்தது. முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக வெண்கலம் வென்றது. முன்னதாக 1983, 2000, 2006, 2007ல் நடந்த தொடர்களில் இந்திய அணி வெண்கலம் வென்றது. கடந்த ஆண்டு 6வது இடம் பிடித்த இந்திய அணி, இம்முறை வெண்கலம் வென்று முன்னேற்றம் கண்டது. தவிர, இத்தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. கொரியா வெற்றி: ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் தென் கொரியா, மலேசியா அணிகள் மோதின. இதில் தென் கொரியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது இடம் பிடித்தது. தொடரை நடத்திய மலேசியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தான் அணி, ஏழாவது இடம் பிடித்து ஏமாற்றியது. நியூசி., சாம்பியன் நேற்று நடந்த பைனலில் நியூசிலாந்து, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று, புதிய வரலாறு படைத்தது. முன்னதாக 1995, 2003, 2008-09ல் நியூசிலாந்து அணி வெண்கலம் வென்றது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. லெவன் அணியில் சுனில் ஒவ்வொரு ஆண்டும், அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, "அஸ்லான் ஷா லெவன்' அணி அறிவிக்கப்படும். இம்முறை இந்தியா சார்பில் சர்தார் சிங், எஸ்.வி. சுனில் இடம் பிடித்துள்ளனர். அதிகபட்சமாக நியூசிலாந்து சார்பில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் இருந்து இரண்டு பேரும், இங்கிலாந்து, தென் கொரியா, பாகிஸ்தான், மலேசியா அணிகளில் இருந்து தலா ஒரு வீரரும் இடம் பிடித்துள்ளனர். லெவன் அணி: சர்தார் சிங் (இந்தியா), சுனில் (இந்தியா), பான்டிபெக்ஸ் (நியூசி.,), டீன் கசின்ஸ் (நியூசி.,), ரேயான் ஆர்சிபால்டு (நியூசி.,), பெட்ரோ இபாரா (அர்ஜென்டினா), லூகாஸ் வில்லா (அர்ஜென்டினா), ஆஷ்லே ஜாக்சன் (இங்கிலாந்து), ஹுயுன் வூ-நாம் (கொரியா), ரஷித் முகமது (பாக்.,), பைசல் சாரி (மலேசியா).

4:16 PM | தலைப்பு: , , | Read More »

ராணுவத்தில் பணியாற்ற தோனி விருப்பம்

பூஞ்ச் (ஜம்மு-காஷ்மீர்), ஜூன் 2: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு முறையாவது ராணுவத்தில் பணியாற்றிட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோனிக்கு ராணுவத்தில் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை அவர் சனிக்கிழமை பார்வையிட்டார். அதன்பிறகு அவர் கூறியது: கிரிக்கெட்டால்தான் இங்கு வரும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போதைய நிலையில் கிரிக்கெட் விளையாடி வருவதால், ஓய்வுபெற்ற பிறகு நிச்சயம் ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன். ராணுவத்தின் முன்வரிசையில் செல்லவே முயற்சிப்பேன். அங்குள்ள அதிகாரிகள் சந்திக்கும் சவால்களை நான் எதிர்கொள்ளும்போது மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஒரு காலத்தில் தொலைவில் இருந்து ராணுவத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களின் முகாமுக்கு வந்து சந்தித்துள்ளேன். முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். இங்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் வந்துள்ளதால் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். எனவே அடுத்த இருநாள்களும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இரு நாடுகளுக்கு இடையிலான பகையுணர்வை விளையாட்டு உடைக்கும் என்பதால், நிச்சயம் இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டியைத் தொடங்க வேண்டும். இதுதொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும்தான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்காக காத்திருக்கிறேன்' என்றார்.

4:15 PM | தலைப்பு: , , , , | Read More »

கேப்டன் பதவிக்கு தயார்: தோனிக்கு காம்பிர் சவால்!

புதுடில்லி: கேப்டன் ஆசையில் மிதக்கிறார் கவுதம் காம்பிர். டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தோனியை மீண்டும் உரசிப் பார்க்கிறார். ஆசிய கோப்பை தொடரின் போது காம்பிருக்கு பதிலாக விராத் கோஹ்லிக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே 6 ஒருநாள் போட்டிகளில் காம்பிர் தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. இந்நிலையில், இவரிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கேப்டன் தோனி, காம்பிர் இடையே பனிப் போர் உருவானது. இந்நிலையில், சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் பைனலில் காம்பிர் தலைமையிலான கோல்கட்டா அணி, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இதையடுத்து காம்பிருக்கு ஆதரவு அதிகரித்தது. டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக 7 தோல்விகளை சந்தித்த தோனிக்கு பதிலாக இவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கங்குலி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். ஆனாலும், தேர்வாளர்களின் அதீத நம்பிக்கையை பெற்ற தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பறிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இது குறித்து காம்பிர் கூறியது: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளேன். இதனை மிகப் பெரும் கவுரவமாக கருதுவேன். இந்த சவாலை சந்திக்க மனதளவில் தயாராக இருக்கிறேன். ஆனாலும், என்னைப் பொறுத்தவரை கேப்டனால் மட்டும் சாதிக்க முடியாது. வெற்றிகரமான அணியால் தான் வெற்றிகரமான கேப்டனை <உருவாக்க முடியும். மாறாக வெற்றிகரமான கேப்டனால், வெற்றிகரமான அணியை உருவாக்க முடியாது. சில போட்டிகளில் விரைவாக அவுட்டாகி விட்டால், அணியில் இருந்து நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் எப்போதும் இருக்கும். தடை வேண்டாம்: ஐ.பி.எல்., தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தேவையில்லாதது. பெரும்பாலான போட்டிகளில் கடைசி ஓவரில் தான் முடிந்தன. இது போட்டியின் தரத்தை சுட்டிக் காட்டியது. இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பல வீரர்கள் ஐ.பி.எல்., மூலம் பெற்றுள்ளனர். களத்துக்கு வெளியே நடக்கும் சில தவறான சம்பவங்களுக்கு, ஐ.பி.எல்., தொடர் மீது பழி சுமத்தக் கூடாது. இவ்வாறு காம்பிர் கூறினார்.

12:56 PM | தலைப்பு: , , | Read More »

முதல் டெஸ்ட் : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை


கல்லே, மார்ச் 29 : இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை ருசித்துள்ளது.

டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வந்த இங்கிலாந்து அணி 264 ரனகளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.

7:41 PM | தலைப்பு: , , | Read More »

சாட்டையை சுழற்றியது பி.சி.சி.ஐ., * பயிற்சியாளர் பிளட்சருக்கு -சிக்கல் *


மும்பை: பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது பயிற்சியில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்க, பி.சி.சி.ஐ., நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜூனியர் அணிக்கு பயிற்சி அளிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 13ல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் (63), நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 8 மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்தது. தவிர, டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்தையும் இழந்தது.
இவரது பயிற்சியில் விளையாடிய 31 ஒருநாள் போட்டிகளில், 17ல் தான் இந்தியா வென்றது. வீரர்களை முன்னேற்ற உருப்படியான ஆலோசனை எதுவும் பிளட்சர் தருவதில்லை. "சீனியர்' வீரர்களிடையே மோதல் குறித்தும் கண்டு கொள்ளவில்லை. தொடர் தோல்விகளால் இவரது தலை உருளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, தற்போதைய சம்பவம் அமைந்துள்ளது.
பொதுவாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர், போட்டி இல்லாத நேரங்களில் "ரிலாக்சாக' இருப்பது வழக்கம். முந்தைய பயிற்சியாளர் கிறிஸ்டன், இப்படித்தான் இருந்தார்.
முதன் முறையாக...
தற்போது, முதன் முறையாக, "பிளட்சர், ஜோ டேவ்ஸ் (பவுலிங்), டிரிவர் பென்னி (பீல்டிங்), தலைமை பிசியோதெரபிஸ்ட், ஈவன் ஸ்பீச்லி உள்ளிட்ட அனைவரும், உடனடியாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல வேண்டும். அங்கு, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும், நான்கு நாடுகள் தொடரில் பங்கேற்கும், 19 வயதுக்குப்பட்ட இந்திய அணிக்கு பயிற்சி தர வேண்டும்,' என, பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் ஜக்தலே உத்தரவிட்டுள்ளாராம். இதன் மூலம் ஜூனியர் அணிக்கு பயிற்சி அளிக்கும் நிலைமைக்கு பிளட்சர் தள்ளப்பட்டுள்ளார். இது பிளட்சர்-பி.சி.சி.ஐ., இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியது. 

ஆஸி., பயணம்: இந்த பயிற்சி முடிந்த நிலையில், அடுத்து ஒரு "டுவென்டி-20' போட்டிக்காக, இந்திய அணியுடன் பிளட்சர் குரூப், தென் ஆப்ரிக்கா செல்கிறது. பின், இந்தியா திரும்பியதும், நான்கு நாடுகள் (19 வயதுக்குட்பட்ட) தொடருக்காக (வரும் ஏப்., 5 முதல் 15 வரை) ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அடுத்து, இந்திய "ஏ' அணியுடன், வெஸ்ட் இண்டீசிற்கு போக வேண்டும். ஏனெனில், இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வரை எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""தலைமை பயிற்சியாளராக இருப்பவர், அவருக்குரிய பணிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான், 19 வயது, இந்தியா "ஏ' அணிகளுடன், பிளட்சர் செல்ல வேண்டும் என விரும்புகிறோம்,'' என்றார்.

9:05 AM | தலைப்பு: , , | Read More »

2015 உலகக் கோப்பையில் விளையாடுவேன்: சச்சின் சூசகம்


மும்பை, மார்ச் 25: கிரிக்கெட்டிலிலிந்து இப்போது ஓய்வுபெறும் எண்ணம் இல்லை; அடுத்த உலகக் கோப்பையில்கூட விளையாட வாய்ப்பிருக்கிறது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சூசகமாகக் கூறியுள்ளார்.
2011 உலகக் கோப்பையோடு ஒருநாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியது: என்னுடைய ஓய்வு குறித்து நான்தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வுபெறுமாறு எனக்கு அறிவுரை கூறும் யாரும் என்னை அணிக்கு கொண்டு வரவில்லை என்றார்.
ஊகத்துக்கு பதில்கூற முடியாது
2015 உலகக் கோப்பையில் விளையாடும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, நான் விளையாடுவேனா, இல்லையா? என்பது குறித்த உங்களின் ஊகத்துக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்த சச்சின், இப்போது எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது. இதேகேள்வி 2011 உலகக் கோப்பையில் விளையாடுவீர்களா? என்று 2007-ல் என்னிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினமானதாக இருந்தது. இப்போது அதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருப்பதால் சாதித்திருக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். மற்றபடி எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். இலக்கை நிர்ணயித்து விளையாட விரும்பவில்லை என்றார்.
ஏன் இறைவா சோதித்தாய்?
100-வது சதம் குறித்துப் பேசிய சச்சின், "100-வது சதமடித்ததும் பேட்டை உற்று நோக்கினேன். பின்னர் வானை நோக்கி பார்த்து "நான் என்ன தவறு செய்தேன், ஏன் இந்த சதத்தை அடிக்க இவ்வளவு நாள்கள் ஆனது' என்று கடவுளிடம் கேட்டேன்' என்றார்.
விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் மற்றும் இளம் வீரர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு, "மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும். நாங்கள் விளையாடத் தொடங்கியபோது எங்களுக்கு லட்சியம் இருந்தது. அதேபோல் வரும் தலைமுறையினரும் விளையாட வேண்டும். விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இது அணிக்கு தேவையானதுதான்' என்றார்.
இந்தியரால் மட்டும்தான் முடியும்
உங்களுடைய 100 சதங்களை முறியடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "எனக்குத் தெரியாது. சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதற்குத்தான். என்னுடைய சாதனை முறியடிக்கப்படும் என்றால் அது ஒரு இந்தியரால்தான் முடியும் என்று நம்புகிறேன். 100-வது சதம் முறியடிக்கப்படுமா என்பது பற்றி முன்கூட்டியே ஊகிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மேன் அறிவித்த டெஸ்ட் அணியில் நானும் ஒருவனாக இருந்ததைத்தான் பெரிய விருதாக நினைக்கிறேன்' என்றார்.
தந்தையை நினைவுகூர்ந்த சச்சின்
தனது தந்தை குறித்துப் பேசிய சச்சின், "அவர்தான் என்னுடைய கதாநாயகன். அவரோடுதான் என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் தொடங்கினேன். அவரையே பின்பற்றுகிறேன். கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்காதவர்கள்கூட எனக்கு அறிவுரை கூறினார்கள். அவர்கள் அனைவரும் நல்ல எண்ணத்திலேயே அப்படி கூறியுள்ளனர்.
இப்போதைய சூழலில் நான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நிரூபிக்க வேண்டியதில்லை. ரசித்து விளையாட விரும்புகிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அதைவிட வேறு எதையும் பெரிதாக நினைக்கவில்லை.
22 ஆண்டுகள் காத்திருந்தேன்
சாதனைகளைப் பற்றி நினைப்பதில்லை. நான் விரும்பிய அனைத்தையும் சாதித்துவிட்டதால் சாதனைகளை மனதில் வைத்து விளையாட விரும்பவில்லை. இன்னும் கிரிக்கெட் மீது தீராத காதல் எனக்கு உள்ளது. அதனாலேயே சதத்தில் சதம் காண முடிந்தது. எந்த விஷயமாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற கனவு இல்லாவிட்டால் எப்போதுமே நம்மால் சாதிக்க முடியாது.
இதேபோல் எந்த நேரத்திலும் நம்பிக்கையோடு இருப்பது முக்கியமானது. நான் நம்பிக்கையை இழக்காததாலேயே தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். உலகக் கோப்பையை வெல்வதற்கு ஓர் ஆண்டல்ல, 22 ஆண்டுகள் நான் காத்திருந்தேன்' என்றார்.
ஜான் ரைட் கொடுத்த நம்பிக்கை
முன்னாள் பயிற்சியாளர் ஜான்ரைட் குறித்துப் பேசிய சச்சின், "2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, "சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதமடிக்கப் போகும் முதல் வீரர் நீங்கள்தான்' என்று முன்னாள் பயிற்சியாளர் ஜான்ரைட் என்னிடம் கூறினார். 100 சதமடிக்க அவர்தான் என்னை முதலில் தூண்டினார்' என்றார்.
ஊடகங்கள்தான் சவால்
தனது முதல் சதத்தை அடித்தபிறகு ஊடகங்களைச் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சச்சின், "இங்கிலாந்துக்கு எதிராக நான் அடித்த முதல் சதத்தைவிட, அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்புதான் மிகக் கடினமாக இருந்தது. அப்போதைய அணி மேலாளர் மாதவ் மந்திரி, என்னிடம் வந்து செய்தியாளர்கள் சந்திப்பு இருப்பதாக கூறினார்.
அதற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுபவம் இல்லாததால் அங்கு என்ன நடக்கும் என்று மேலாளரிடம் கேட்டேன். "எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் உங்களோடு இருப்பேன்' என்று மேலாளர் தெரிவித்ததாக' தனது பழைய நினைவுகளை தெரிவித்தார்.
சாதனைகளை ஒப்பிட விரும்பவில்லை
தன்னுடைய 100 சதங்களின் சாதனையை இலங்கை வீரர் முரளீதரனின் 800 விக்கெட் சாதனையோடு ஒப்பிட மறுத்த சச்சின், "அவ்வாறு ஒப்பிட விரும்பவில்லை. 800 விக்கெட் என்பதை மிகப்பெரிய விஷயமாக நினைக்கிறேன். அது ஒரு வரலாற்றுச் சாதனை' என்றார்.

4:41 PM | தலைப்பு: , , | Read More »

மகளை தள்ளியதால் தாக்கினேன்: அப்ரிதி


கராச்சி, மார்ச் 24: எனது மகளை கீழே தள்ளியதால் ரசிகரை தாக்கினேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, வெள்ளிக்கிழமை நாடு திரும்பியது. அவர்களை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கராச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
விமானத்தில் இருந்து இறங்கிய அப்ரிதி, தனது கார் அருகே சென்றபோது, அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு ரசிகர்கள் கூட்டம் திரண்டது.
அப்போது ரசிகர் ஒருவர் காரின் அருகே நின்ற அப்ரிதியின் மகளை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்ரிதி அந்த ரசிகரை தாக்கினார்.
அதன்பிறகு அப்ரிதியின் சகோரர் உள்ளிட்டோர் அப்ரிதியை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும் அந்த ரசிகரை அப்ரிதி மிதிக்க முயன்ற காட்சியும் தொலைக்காட்சியில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அப்ரிதி, "எனது மகளை கீழே தள்ளியதால் சற்று கோபமடைந்தேன். நான் அவ்வாறு செய்தது தவறுதான். அப்படி நடந்திருக்கக்கூடாது. என்னருகே நின்று கொண்டிருந்த எனது மகளை தள்ளியபோது அதை தாங்க முடியாமல் பொறுமை இழந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.
அப்ரிதியின் சகோதரர் கூறுகையில், "குழந்தையை தள்ளியவர் ரசிகர் அல்ல. அவரை அப்ரிதியின் ரசிகர் என்று குறிப்பிட விரும்பவில்லை. தன்னுடைய ரசிகரை தாக்க வேண்டும் என்று அப்ரிதி ஒருபோதும் நினைத்ததில்லை' என்றார்.

1:38 PM | தலைப்பு: , , | Read More »

போலார்ட் சிக்ஸர் மழை; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-வது வெற்றி

செயின்ட் லூசியா, மார்ச் 24: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள்.
மேற்கிந்தியத் தீவுகளின் போலார்ட் 70 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசி அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலியா 46.3 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சார்லஸ்-பரத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. பரத் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் கண்ட சாமுவேல்ஸ் 11 ரன்களில் நடையைக் கட்டினார். 3-வது விக்கெட்டாக சார்லஸ் 37 ரன்களிலும், டுவைன் பிராவோ ரன் ஏதுமின்றியும், டேரன் பிராவோ 25 ரன்களிலும் நடையைக் கட்ட 35.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற நிலையில் இருந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த போலார்டும், ரஸ்ஸலும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். குறிப்பாக போலார்டின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பிரெட் லீ, கிளின்ட் மெக்காய், வாட்சன் என அனைத்து பெüலர்களையும் பதம்பார்த்தார். இதனால் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. மறுமுனையில் 32 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்து வெளியேறினார் ரஸ்ஸல். இதையடுத்து சமி களம் கண்டார்.
49 பந்துகளில் அரைசதம் கண்ட போலார்ட், அடுத்த 20 பந்துகளில் சதம் கண்டார். அவர் 96 ரன்களில் இருந்தபோது பிரெட் லீ வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி சதம் கண்டார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். 70 பந்துகளைச் சந்தித்த போலார்ட் 102 ரன்கள் எடுத்தார்.
அந்த ஓவரின் கடைசி 3 பந்துகளை எதிர்கொண்ட சமி இரண்டு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார்.
இதனால் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் பிரெட் லீ 10 ஓவர்களில் 72 ரன்களை வாரி வழங்கினார்.
12 ஓவர்களில் 145 ரன்கள்: ஆட்டத்தின் கடைசி 12 ஓவர்களில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 145 ரன்கள் குவித்தது. பிரெட் லீ வீசிய கடைசி ஓவரில் மட்டுமே 23 ரன்கள் எடுக்கப்பட்டன.
ஆஸ்திரேலியா தோல்வி: பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 1, வாட்சன் 28, பீட்டர் ஃபோரஸ்ட் 24, பெய்லி 25, மைக் ஹஸ்ஸி 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டேவிட் ஹஸ்ஸி 54 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பிரெட் லீ விளாசல்: பின்வரிசையில் களமிறங்கிய பிரெட் லீ யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியில் ஈடுபட்டார். கெமர் ரோச் வீசிய 41-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார்.
அதைத்தொடர்ந்து அதே ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் விளாசினார். ரஸ்ஸல் வீசிய 45-வது ஓவரிலும் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விரட்டினார். அடுத்த பந்தையும் அவர் அதிரடியாக எதிர்கொள்ள அது கேட்ச் ஆனது.
48 பந்துகளைச் சந்தித்த பிரெட் லீ 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்தார். பிரெட் லீயின் விக்கெட்டோடு ஆட்டமும் முடிவுக்கு வந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச், டுவைன் பிராவோ, சமி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். போலார்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஓர் ஆட்டம் "டை'யில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோர்
மேற்கிந்தியத் தீவுகள்-294/7
(போலார்ட் 102, பரத் 41,
சார்லஸ் 37, வாட்சன் 2வி/55, டோஹெர்டி 2வி/64,
பிரெட் லீ 2வி/72)
ஆஸ்திரேலியா-252
(பிரெட் லீ 59,
டேவிட் ஹசி 57,
பிராவோ 2வி/47, சமி 2வி/42)

1:36 PM | தலைப்பு: , , | Read More »

தென் ஆப்ரிக்கா அபார ஆட்டம் * நியூசி., பவுலர்கள் ஏமாற்றம்


வெல்லிங்டன்:மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சொந்த மண்ணில் நியூசிலாந்து பவுலர்கள் ஏமாற்றினர்.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டின் முடிவில், தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், வெல்லிங்டனில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், "பீல்டிங்' தேர்வு செய்தார். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தாமதமாக துவங்கியது.

ஆம்லா அரைசதம்:

முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித் (13) ஏமாற்றினார். பின் இணைந்த அல்விரோ பீட்டர்சன், ஆம்லா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது, ஆம்லா (63) அவுட்டானார். அடுத்து வந்த டுமினியுடன் இணைந்த பீட்டர்சன், அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார்.தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 42 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பீட்டர்சன் (44), டுமினி (23) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பிராஸ்வெல், கில்லஸ்பி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

11:18 AM | தலைப்பு: , , | Read More »

கால்பந்து வீரர் மைதானத்தில் மரணம்


பெங்களூர், மார்ச் 22: மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால்பந்து வீரர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பெங்களூர் கெளதமபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் வெங்கடேஷ் (23). இவர் புதன்கிழமை மாலை பெங்களூர் கால்பந்து மைதானத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெங்கடேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சுருண்டு கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் இல்லாததையடுத்து நிலைமையை உணர்ந்த சக வீரர்கள், அவரை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பெங்களூர் கால்பந்து மைதானத்தில் உயிரிழந்த 4-வது வீரர் வெங்கடேஷ் ஆவார். 1993-ல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் தத்தா, 2004-ல் கிறிஸ்டியானா டியானோ, 2008-ல் அல்லபிடிஜுவ்ரே ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்த சாந்திநகர் எம்எல்ஏ ஹாரீஷ் வெங்கடேஷின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது ஏற்பாட்டின் பேரில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்திலேயே வீரர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தது கால்பந்தாட்ட வீரர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

4:11 PM | தலைப்பு: , , | Read More »

ஆசிய மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதியில் 8 இந்திய வீராங்கனைகள்



புது தில்லி, மார்ச் 22: ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் 8 பேர் முன்னேறியுள்ளனர்.

மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் 5 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோம், மோனிகா சான், பூஜா ராணி ஆகியோர் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறினர். முன்னதாக புதன்கிழமை 4 பேர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்த 8 பேரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். ஆசிய குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீராங்கனைகள் 8 பேர் பதக்கத்தை உறுதி செய்திருப்பது இதுதான் முதல்முறை. இதன்மூலம் அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்று இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்றில் வெல்பவர்களுக்கு தங்கமும், தோற்பவர்களுக்கு வெள்ளியும், அரையிறுதியில் தோற்றால் வெண்கலமும் வழங்கப்படும்.

4:09 PM | தலைப்பு: , , | Read More »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் சாம்பியன்

மிர்பூர்: வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்து வந்தது. இன்று நடந்த பைனலில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன் எடுத்தது.பாகிஸ்தான் அணியின் சர்ப்ரஸ் அஹ்மத் 46ரன்னும்,ஹபீஸ் 40 ரன்னும் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் மோர்டசா, ரசாக் மற்றும் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 237 ரன் நிர்ணயித்தது பாகிஸ்தான். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 2 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

12:05 AM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added