10:28 AM | பதிவு செய்தவர் ah kdnl
வார்சா: யூரோ கோப்பை தொடரில், போலந்து-கிரீஸ் மோதிய பரபரப்பான முதல் லீக் போட்டி டிரா(1-1) ஆனது. இரு அணிகளும் தலா ஒரு "ரெட் கார்டு பெற்றது, அரிய "பெனால்டி வாய்ப்பை "மிஸ் பண்ணியது என போட்டி முழுவதும் "டென்ஷன் எகிறியது.
ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது "யூரோ கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. வார்சாவில் நடந்த முதல் லீக் போட்டியில், "ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து, கிரீஸ் அணிகள் மோதின. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்துடன் போலந்து வீரர்கள் துடிப்பாக ஆடினர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லெவண்டாவ்ஸ்கி தலையால் முட்டி ஒரு, சூப்பர் கோல் அடிக்க, போலந்து 1-0 என முன்னிலை பெற்றது.
சாக்ரடீஸ் "அவுட்:
இதற்கு பதிலடி கொடுக்க முற்பட்ட கிரீஸ் அணியினர் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். 35வது நிமிடத்தில் சாக்ரடீஸ் பாப்பஸ்டத்தோபவுலோஸ், "எல்லோ கார்டு பெற்றார். மீண்டும் 44வது நிமிடத்தில் போலந்து வீரர் முராவ்ஸ்கியுடன் மோதினார். இம்முறை லேசான மோதல் தான். ஆனால் அவசரப்பட்ட ஸ்பெயின் நடுவர் கார்லோஸ் கார்பெல்லோ, சாக்ரடீசுக்கு மீண்டும் "எல்லோ கார்டு காட்டினார். இரண்டாவது முறையாக "எல்லோ கார்டு என்பதால், "ரெட் கார்டு காட்டி சாக்ரடீஸ் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கிரீஸ் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. முதல் பாதி முடிவில் போலந்து 1-0 என்ற முன்னிலையில் இருந்தது.
கிரீஸ் எழுச்சி:
இரண்டாவது பாதியில் கிரீஸ் வீரர்கள் எழுச்சி கண்டனர். ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் டிமிட்ரிஸ் சால்பின்கிடிஸ் ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் போலந்து கோல்கீப்பர் வோஜ்சியச் செஸ்னி, "ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதற்காக அளிக்கப்பட்ட "பெனால்டி வாய்ப்பை கிரீஸ் தவற விட்டு ஏமாற்றியது. இரு அணிகளும் தலா 10 வீரர்களுடன் விளையாடியதால், தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தின. இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புளளி பெற்றனர்.
வில்லனாக மாறிய கேப்டன்
கிரீஸ் அணிக்கு கேப்டன் கியார்கஸ் கராகுனிஸ் வில்லனாக மாறினார். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் சால்பின்கிடிஸ் கோல் அடிக்க மின்னல் வேகத்தில் பறந்து வந்தார். இவரை முரட்டுத் தனமாக மடக்கிய போலந்து கோல்கீப்பர் வோஜ்சியச் செஸ்னியை, நடுவர் "ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார். தவிர, பெனால்டி வாய்ப்பும் அளித்தார். ஆனால், கீரிஸ் கேப்டன் கராகுனிஸ் மிகவும் மந்தமாக வலது திசையில் பந்தை அடித்தார். இதனை சரியாக கணித்த போலந்தின் மாற்று கோல்கீப்பர் டைடன் துடிப்பாக தடுக்க, கிரீசுக்கு கிடைத்த பொன்னான வெற்றி வாய்ப்பு பறிபோனது.