புதுடில்லி: பா.ஜ., பொதுச் செயலர் சஞ்சய் ஜோஷி, நேற்று அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அவரது ராஜினாமாவை கட்சியின் தலைவர் நிதின் கட்காரி ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்காரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கட்சி சார்பில், தேசிய அளவில் நடத்தப்படும் கூட்டங்களைப் புறக்கணித்து வந்தார். கடந்தாண்டு, டில்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தையும் புறக்கணித்தார். தன் பரம விரோதியான சஞ்சய் ஜோஷியை, நிதின் கட்காரி செயற்குழுவில் சேர்த்துள்ளார் என, மோடி கருதியதே இதற்கு காரணம்.
மோடி பங்கேற்பு: இந்நிலையில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், கடந்த மாதம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்திலாவது, மோடியை பங்கேற்க வைக்க வேண்டும் என, நிதின் கட்காரி முயற்சி மேற்கொண்டார். அதன் பலனாக, மோடியின் பரம எதிரியான சஞ்சய் ஜோஷி, திடீரென தன் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். நிதின் கட்காரியின் வேண்டுகோளை ஏற்றே, அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி, தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கட்சியிலிருந்து விலகல்: இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக, பா.ஜ., கட்சியின் பொதுச் செயலரான சஞ்சய் ஜோஷி, நேற்று அந்தக் கட்சியிலிருந்து விலகினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முன்னாள் பிரசாரகரான, சஞ்சய் ஜோஷி, கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை கட்காரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். பா.ஜ., கட்சியில் ஜோஷி எந்தப் பொறுப்பும் வகிக்கக் கூடாது என, முதல்வர் நரேந்திர மோடி விரும்பினார். அது தற்போது நிறைவேறியுள்ளது. இதன்மூலம், பா.ஜ.,வில் நரேந்திர மோடியின் கை ஓங்கியுள்ளது. ஜோஷி, இனி ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகத் தொடர்ந்து செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. உ.பி., மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பா.ஜ.,வின் தேர்தல் பிரசார திட்டங்களை, ஜோஷி கையாள்வார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எதிராக போஸ்டர்: இதற்கிடையில், இந்த ஆண்டு டிசம்பரில், குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடிக்கு எதிராக மீண்டும் ஒரு போஸ்டர் ஆமதாபாத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், "ராஜ தர்மம், பிரஜா தர்மம் மற்றும் கட்சி தர்மத்தை கடைபிடியுங்கள்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் முதல்வர் மோடியின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரை குறிவைத்தே போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும் என, பா.ஜ., கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2002ம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில் வன்முறை நிகழ்ந்தபோது, "ராஜ தர்மத்தை' கடைபிடியுங்கள் என, முதல்வர் மோடியை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பர பலகை: கடந்த திங்களன்று, ஆமதாபாத் மற்றும் டில்லியில், சஞ்சய் ஜோஷியின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், "குறுகிய மனப்பான்மை கொண்ட யாரும், மிகப்பெரிய தலைவராக முடியாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முதல் போஸ்டர் ஒட்டப்பட காரணமானவர் யார் என்று தெரியவில்லை. இதுபற்றி பா.ஜ., கட்சி விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆமதாபாத்தில் இரண்டாவது முறையாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.