|

மலையை குடைந்து ஆப்கானிஸ்தானுக்கு சாலை அமைக்கும் சீனா

"இந்தியாவைச் சுற்றி ஒரு வலை பின்னும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் ஹம்பன்டட்டா துறைமுகத்தில் கால்பதித்துள்ள சீனா, தற்போது ஆப்கானிஸ்தானுக்குள்ளும் நுழைகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியை, சீனா மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும், முக்கியத்துவத்தையும் உடைக்கும் வகையில், சீனா இதை செய்து வருகிறது' என, இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற தளபதி வி.கே.சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் வி.கே.சிங். இவர் போபாலில் உள்ள வர்க்கத்துல்லா பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., மாணவராக உள்ளார். பணியில் இருந்த 2010ம் ஆண்டே தன்னை, இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள பாதுகாப்புத் துறை பிரிவில் பதிவு செய்து கொண்ட வி.கே.சிங், ஓய்வுக்கு பின், தற்போது ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தன் ஆராய்ச்சிக்காக, இமயமலை பகுதியில் உள்ள வக்கன் காரிடார் என்ற மலைப் பகுதியை எடுத்துக் கொண்டுள்ளார். சாலை அமைப்பு: இந்நிலையில், தன் ஆராய்ச்சி குறித்து பத்திரிகைகளுக்கு வி.கே.சிங் அளித்துள்ள பேட்டியில், மிகுந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது: வக்கன் காரிடார் பகுதி என்பது இமயமலைத் தொடரின் ஒரு பகுதி. பூகோள ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைப் பகுதியை, சீனா குடைந்து வருகிறது. இந்த மலையைக் குடைந்து சீனாவில் இருந்து, ஆப்கானிஸ்தானிற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சீனா - ஆப்கானிஸ்தான் இடையே நேரடி போக்குவரத்து வசதி இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறி வரும் நிலையில், அங்கு தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, சீனா தீவிரமாக உள்ளது. இதற்காகவே மலையைக் குடைந்து சாலை அமைத்து வருகிறது. 220 கி.மீ., தூரமும், 64 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலை, பாதி தூரம் சுரங்கப் பாதையாகவே இருக்கப் போகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாகவே செல்கிறது. இந்த சாலை மட்டும் அமைத்து முடித்து விட்டால், ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பெரியதாக இருக்கும். பாகிஸ்தான் ஆதரவு: சீனாவின் இந்த சாலை அமைக்கும் திட்டத்திற்கு, பாகிஸ்தான் முழு ஆதரவை வழங்கி வருகிறது. தலிபான்களை ஒடுக்குவதற்காக அமெரிக்காவும், இந்தியாவும் கைகோர்த்து ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு முடிந்த நிலையில், தற்போது சீனாவுடன் கைகோர்த்து மீண்டும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட பாகிஸ்தான் பார்க்கிறது. வக்கன் மலைத்தொடர் பகுதியில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் மிக அதிகமாகவே உள்ளன. இது வெளியுலகத்திற்கு பெரியதாக தெரியாமல் உள்ளது. உண்மையில் பாகிஸ்தானோடு கூட்டுச் சதி நோக்கத்துடன் சேர்ந்து, இந்த சாலை அமைக்கும் பணியை ரகசியமாகவே சீனா செய்து வருகிறது. குவாடர் துறைமுகம்: பூகோள ரீதியாக இந்தியாவைச் சுற்றி வளைத்து, வலை போல ஒன்றை பின்னும் திட்டத்தில், சீனா இருந்து வருகிறது. தெற்கே இலங்கையில் ஹம்பன்டட்டா துறைமுகத்தை சீனா பிடித்துவிட்டது. அங்கு வலுவாக காலூன்றியும் விட்டது. மாலத்தீவிலும் கூட சீனாவின் நடவடிக்கைகள் அதிகமாகவே உள்ளன. மியான்மரில் ஹாங்கி என்ற துறைமுகத்தையும், சீனாவே கைகொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு வடக்கே உள்ள குவாடர் துறைமுகத்தையும், சீனா தான் கடந்த ஐந்தாண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இப்போது வடக்கே ஆப்கானிஸ்தானிலும் தனது பிடியை உறுதிப்படுத்த, சீனா துடித்து வருகிறது. மூடப்பட்ட கணவாய்: சீனாவிலிருந்து ஆப்கானிஸ்தான் போவதற்கு நேரடியாக எந்த வசதியும் தற்போது இல்லை. முன்னர் வக்ஜித் கணவாய் என்ற ஒன்று இருந்தது. அதன் வழியாகவே இரு நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன. 1949ல் மாசேதுங் வருகைக்கு பிறகு அந்த கணவாயும் மூடப்பட்டு விட்டது. அந்த கணவாயும் கூட, வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே திறந்திருக்கும்; மீதி நாட்களில் மூடியபடியே இருக்கும். எனவே, வளர்ந்து வரும் சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவத்தை சீனா பயன்படுத்த விரும்புகிறது. முதலீடு அதிகரிப்பு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இடைமறிப்பதால், இந்தியாவிலிருந்தும் கூட ஆப்கானிஸ்தானிற்கு நேரடியாக சென்றுவிட முடியாது. மும்பையிலிருந்து ஈரான் வழியாக அங்குள்ள சப்பகார் துறைமுகம் போய், அங்கிருந்து தான் ஆப்கானிஸ்தான் சென்றாக வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. தலிபான்கள் வீழ்த்தப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை, ஆப்கானிஸ்தானில் மத்திய அரசு செய்துள்ளது. எனவே, சீனாவின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகமானால், அது இந்தியாவை நிச்சயம் பாதிக்கும். ஆதாரம் சேகரிப்பு: இந்தியாவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஒரு வித அச்சுறுத்தலை ஏற்படுத்தி வைக்க வேண்டுமென்ற சீனாவின் நோக்கம், வக்கன் காரிடார் மலைக்குகை சாலைத் திட்டத்தின் மூலம் நிறைவேறப் போகிறது. இதுகுறித்து மேலும் பல ஆதாரங்களை, என் ஆராய்ச்சிப் படிப்புக்காக சேகரித்து வருகிறேன். தொழில்நுட்ப ரீதியாக இனியும் கிடைக்கவுள்ள பல தகவல்கள் மூலம், இந்த ரகசிய சாலைத் திட்டம் குறித்து மேலும் விரிவாக தெரிய வரும். இவ்வாறு வி.கே.சிங் கூறியுள்ளார். இன்னொரு அதிசயம்! கடந்த 1962ல் நடந்த போரில், இந்தியாவிடம் இருந்து அக்ஷய்சின் என்ற பகுதியை சீனா கைப்பற்றியது. அந்த இடத்தில் தான், காரகோரம் என்ற புகழ் பெற்ற நெடுஞ்சாலையை சீனா கட்டி முடித்தது. இதே போல, பீஜிங் நகரில் இருந்து கரடுமுரடான மலைகள் வழியாக திபெத்திற்கு ரயில் பாதையையும் அமைத்தது. மிகப்பெரிய அறிவியல் தொழில்நுட்ப அதிசயமாக, அந்த திட்டம் கருதப்படுகிறது. இப்போதும் இமயமலையில் உள்ள பாமியன் மலைத்தொடரில் உள்ள வக்கன் காரிடார் மலையைக் குடைந்து அமைக்கும் சாலை மட்டும் நிறைவேற்றப்பட்டால், அது, அறிவியல் அதிசயமாகவே கருதப்படும். பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்புறமாக இந்த வக்கன் காரிடார் விளங்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர் ah kdnl on 10:27 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added