10:26 AM | பதிவு செய்தவர் ah kdnl
லக்னோ: உத்தர பிரதேசம் கன்னோஜ் லோக்சபா தொகுதியில் இருந்து, முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி தேர்வாகிறார். அவரை எதிர்த்து போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த இரு வேட்பாளர்களும், நேற்று தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் லோக்சபா தொகுதியில் இருந்து 2009ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி.,யானவர் அகிலேஷ் யாதவ். இவர், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் மகன். இதன் பின், உ.பி., சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வரான அகிலேஷ், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கன்னோஜ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில், அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஏற்கனவே அறிவித்து விட்டன. பா.ஜ., வேட்பாளரும் கடைசி நேரத்தில், தன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தவறிவிட்டார்.
இந்நிலையில், டிம்பிள் யாதவை எதிர்த்து, இரு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று, சம்யுக்த் சமாஜ்வாதி தளம் கட்சி வேட்பாளர் தசரத் சிங் ஷங்வாரும், சுயேச்சை வேட்பாளரான சஞ்சு கத்தியாரும் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் போட்டியின்றி தேர்வாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை விரைவில் தேர்தல் கமிஷன் வெளியிடும்.