|

வளர்ச்சி காண்கிறது ஹம்பன்தோட்டா: தேய்கிறது சென்னை துறைமுகம்!

இலங்கையின் தென்கோடியில் இருக்கும் ஹம்பன்தோட்டாவில், சீன நாட்டு உதவியுடன், கட்டப்பட்ட துறைமுகம், சில தினங்களுக்கு முன் செயல்படத் துவங்கியது. 7,500 கோடி ரூபாய் செலவு செய்து, மிகப் பெரிய துறைமுகமாக, சீன வல்லுனர்கள், இதைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். இத்துறைமுகம், முதல் இறக்குமதியாக, சென்னையில் உள்ள, ஹுண்டாய் கார் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட, 1,000 கார்களைப் பெற்றுக் கொண்டது. இந்த கார்கள், வேறு கப்பல்கள் மூலம், ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஏராளமான சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் அயல் நாட்டுக் கப்பல்கள், சென்னைக்கு வராமல், ஹம்பன்தோட்டாவிலிருந்தே சரக்குகளை ஏற்றிச் செல்வது, இனி, அவர்களுக்கு எளிது.சென்னைத் துறைமுகத்தின் இட நெருக்கடி, இறக்குமதியான பெட்டகங்களை வெளியில் எடுத்துச் செல்வதில் உள்ள இடையூறு காரணமாக, அயல் நாட்டு கப்பல் நிறுவனங்கள், சென்னை துறைமுகத்தை விரும்புவதில்லை.அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மழைக் காலத்தில், சென்னை துறைமுகத்தில் ஏற்படும் தேக்கநிலை காரணமாக, துறைமுகம், பல நாட்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால், பல கப்பல்கள் நடுக்கடலில் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனால், பெரிய கப்பல்களைப் பயன்படுத்தும் கப்பல் நிறுவனங்கள், நஷ்டத்தைத் தாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதே போல், சரக்குகளை இறக்குமதி செய்பவர்கள், சென்னைத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அவர்களது சரக்கை ஏற்றி வந்த பெட்டகங்களுக்கு, "டிடென்ஷன் சார்ஜ்' என்ற பெயரில், பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்ய வேண்டி உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அரசின் இறக்குமதி வரியைத் தவிர, இந்த தொகையையும் கொடுக்கும்போது, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு, ரூபாய்க்கு முப்பது பைசா செலவு கூடுகிறது. இனி ஏற்றுமதியாளர்கள், சென்னைத் துறைமுகத்திலிருந்து, சிறிய கப்பல்கள் மூலம், ஹம்பன்தோட்டாவுக்கு சரக்குகளை எடுத்துச் சென்று, அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஆழ்கடல் துறைமுகம் என்பதால், பிரமாண்டமான சரக்குக் கப்பல்கள், அத்துறைமுகத்துக்கு வரும் வாய்ப்பு அதிகம் உண்டு.சென்னைக்கு இனி, சிறிய கப்பல்கள் தான், அதிகம் வரும்.ஏற்கனவே, கோவை மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், சென்னை துறைமுகத்தைத் தவிர்த்து, தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யத் துவங்கி உள்ளனர். தூத்துக்குடியிலிருந்து கொழும்பு அல்லது ஹம்பன்தோட்டாவிற்கு, சிறிய கப்பல்கள் மூலம் தாமதம் இன்றி, அயல்நாடுகளுக்கு சரக்குகளை அனுப்ப முடியும். சென்னைத் துறைமுகத்தைச் சுற்றி, சென்னை நகரம், பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதால், பெரிய சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்ல வேண்டிய, அகல சாலை வசதிகள் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே, இன்றும் உள்ளன.இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஹம்பன்தோட்டா துறைமுகம், பெரும் வளர்ச்சி அடையப் போகிறது. அதன் தாக்கம், சென்னைத் துறைமுகத்திற்கு விரைவில் தெரிய வரும்.

பதிவு செய்தவர் ah kdnl on 1:31 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added