1:35 PM | பதிவு செய்தவர் ah kdnl

நெதர்லாந்து அணிக்கு எதிரான "யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது "யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. கார்கிவ் (<உக்ரைன்) நகரில் உள்ள மெட்டாலிஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த "பி பிரிவு லீக் போட்டியில், "பிபா ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, 9வது இடத்தில் உள்ள டென்மார்க் அணியை எதிர்கொண்டது.ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோல் அடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் மைக்கேல் குரோன் டெல்லி, ஒரு கோல் அடித்தார். இதற்கு நெதர்லாந்து வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த நெதர்லாந்து அணியினரின் கோல் அடிக்கும் முயற்சியை, டென்மார்க் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். ஆட்டநேர முடிவில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ரஷ்யா வெற்றி:நேற்று முன்தினம் "ஏ பிரிவு லீக் போட்டியில் ரஷ்யா, செக் குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே ரஷ்ய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. 15வது நிமிடத்தில் ரஷ்ய அணிக்கு ஆலன் ஜகோயவ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்த அணிக்கு ரோமன் ஷிரோகோவ் 24 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, ரஷ்ய அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.தகுதி சுற்றில் ரஷ்ய அணியின் பாதுகாப்பு அரண்களை மீறி கோல் அடிப்பது சிரமமாக இருந்தது. இதே போல, நேற்றும் தற்காப்பு பகுதி வீரர்கள் ரோமன் ஷரோனவ், விளாடிமிர் கிரானட் ஆகியோரை மீறி, கோல் அடிப்பது செக் குடியரசுக்கு சிரமாகவே இருந்தது. ரஷ்யாவின் ஆலன் ஜகோயவ், இரண்டாவது கோல் (79வது நிமிடம்), ரோமன் பவ்லிசென்கோ 82வது நிமிடம் ஒரு கோல் என அசத்தினர். செக் குடியரசு சார்பில் வாக்லவ் பிலா (52வது நிமிடம்) மட்டும் ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் ரஷ்ய அணி 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது.