|

அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்! * இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்


இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் அசத்திய இந்திய அணி, ஐந்தாவது முறையாக வெண்கலம் வென்றது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தை மிகச் சுலபமாக வீழ்த்தியது. மலேசியாவில் உள்ள இபோ நகரில், 21வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். 35வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இங்கிலாந்தின் ஆஷ்லே ஜாக்சன் கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் எழுச்சி கண்டனர். 43வது நிமிடத்தில் ஷிவேந்திரா சிங் ஒரு கோல் அடித்து நம்பிக்கை தந்தார். 52வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை சந்தீப் சிங் கோலாக மாற்ற இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. பின், 69வது நிமிடத்தில் துஷார் கண்டேகர் ஒரு கோல் அடிக்க, இந்திய அணியின் வெற்றி பிரகாசமடைந்தது. முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக வெண்கலம் வென்றது. முன்னதாக 1983, 2000, 2006, 2007ல் நடந்த தொடர்களில் இந்திய அணி வெண்கலம் வென்றது. கடந்த ஆண்டு 6வது இடம் பிடித்த இந்திய அணி, இம்முறை வெண்கலம் வென்று முன்னேற்றம் கண்டது. தவிர, இத்தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. கொரியா வெற்றி: ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் தென் கொரியா, மலேசியா அணிகள் மோதின. இதில் தென் கொரியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது இடம் பிடித்தது. தொடரை நடத்திய மலேசியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தான் அணி, ஏழாவது இடம் பிடித்து ஏமாற்றியது. நியூசி., சாம்பியன் நேற்று நடந்த பைனலில் நியூசிலாந்து, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று, புதிய வரலாறு படைத்தது. முன்னதாக 1995, 2003, 2008-09ல் நியூசிலாந்து அணி வெண்கலம் வென்றது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. லெவன் அணியில் சுனில் ஒவ்வொரு ஆண்டும், அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, "அஸ்லான் ஷா லெவன்' அணி அறிவிக்கப்படும். இம்முறை இந்தியா சார்பில் சர்தார் சிங், எஸ்.வி. சுனில் இடம் பிடித்துள்ளனர். அதிகபட்சமாக நியூசிலாந்து சார்பில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் இருந்து இரண்டு பேரும், இங்கிலாந்து, தென் கொரியா, பாகிஸ்தான், மலேசியா அணிகளில் இருந்து தலா ஒரு வீரரும் இடம் பிடித்துள்ளனர். லெவன் அணி: சர்தார் சிங் (இந்தியா), சுனில் (இந்தியா), பான்டிபெக்ஸ் (நியூசி.,), டீன் கசின்ஸ் (நியூசி.,), ரேயான் ஆர்சிபால்டு (நியூசி.,), பெட்ரோ இபாரா (அர்ஜென்டினா), லூகாஸ் வில்லா (அர்ஜென்டினா), ஆஷ்லே ஜாக்சன் (இங்கிலாந்து), ஹுயுன் வூ-நாம் (கொரியா), ரஷித் முகமது (பாக்.,), பைசல் சாரி (மலேசியா).

பதிவு செய்தவர் ah kdnl on 4:16 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added