4:15 PM | பதிவு செய்தவர் ah kdnl
பூஞ்ச் (ஜம்மு-காஷ்மீர்), ஜூன் 2: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு முறையாவது ராணுவத்தில் பணியாற்றிட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோனிக்கு ராணுவத்தில் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை அவர் சனிக்கிழமை பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் கூறியது: கிரிக்கெட்டால்தான் இங்கு வரும் வாய்ப்பைப் பெற்றேன்.
இப்போதைய நிலையில் கிரிக்கெட் விளையாடி வருவதால், ஓய்வுபெற்ற பிறகு நிச்சயம் ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன்.
ராணுவத்தின் முன்வரிசையில் செல்லவே முயற்சிப்பேன். அங்குள்ள அதிகாரிகள் சந்திக்கும் சவால்களை நான் எதிர்கொள்ளும்போது மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
ஒரு காலத்தில் தொலைவில் இருந்து ராணுவத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களின் முகாமுக்கு வந்து சந்தித்துள்ளேன்.
முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். இங்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் வந்துள்ளதால் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.
எனவே அடுத்த இருநாள்களும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இரு நாடுகளுக்கு இடையிலான பகையுணர்வை விளையாட்டு உடைக்கும் என்பதால், நிச்சயம் இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டியைத் தொடங்க வேண்டும்.
இதுதொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும்தான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்காக காத்திருக்கிறேன்' என்றார்.