4:15 PM | பதிவு செய்தவர் ah kdnl
பெங்களூர், ஜூன் 2: ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோலார் தங்கவயல் தொகுதி பாஜக எம்எல்ஏ ஒய்.சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹுசேன் மொஹீன் பாரூக். இவர், தனக்கு ஏற்பட்டிருந்த சொத்துப் பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு, அந்தத் தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த ஒய்.சம்பங்கியை அணுகினார். அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று எம்எல்ஏ ஒய்.சம்பங்கி கேட்டாராம். இதுதொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலை லோக் ஆயுக்த போலீஸாரிடம் பாரூக் அளித்தார். சட்டப்பேரவை விடுதியில் 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் சம்பங்கியிடம் தொகையை பாரூக் வழங்கியபோது போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.கே.சுதீந்திர ராவ், வழக்கின் தீர்ப்பை சனிக்கிழமை கூறினார்.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜக எம்எல்ஏ ஒய். சம்பங்கி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றுபவர் லஞ்சம் பெற்றுக் கொள்ள நினைத்ததே தவறு. இதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர், சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
லஞ்சம் வாங்கியதற்காக மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.