2015 உலகக் கோப்பையில் விளையாடுவேன்: சச்சின் சூசகம்

மும்பை, மார்ச் 25: கிரிக்கெட்டிலிலிந்து இப்போது ஓய்வுபெறும் எண்ணம் இல்லை; அடுத்த உலகக் கோப்பையில்கூட விளையாட வாய்ப்பிருக்கிறது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சூசகமாகக் கூறியுள்ளார்.
2011 உலகக் கோப்பையோடு ஒருநாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியது: என்னுடைய ஓய்வு குறித்து நான்தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வுபெறுமாறு எனக்கு அறிவுரை கூறும் யாரும் என்னை அணிக்கு கொண்டு வரவில்லை என்றார்.
ஊகத்துக்கு பதில்கூற முடியாது
2015 உலகக் கோப்பையில் விளையாடும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, நான் விளையாடுவேனா, இல்லையா? என்பது குறித்த உங்களின் ஊகத்துக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்த சச்சின், இப்போது எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது. இதேகேள்வி 2011 உலகக் கோப்பையில் விளையாடுவீர்களா? என்று 2007-ல் என்னிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினமானதாக இருந்தது. இப்போது அதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருப்பதால் சாதித்திருக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். மற்றபடி எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். இலக்கை நிர்ணயித்து விளையாட விரும்பவில்லை என்றார்.
ஏன் இறைவா சோதித்தாய்?
100-வது சதம் குறித்துப் பேசிய சச்சின், "100-வது சதமடித்ததும் பேட்டை உற்று நோக்கினேன். பின்னர் வானை நோக்கி பார்த்து "நான் என்ன தவறு செய்தேன், ஏன் இந்த சதத்தை அடிக்க இவ்வளவு நாள்கள் ஆனது' என்று கடவுளிடம் கேட்டேன்' என்றார்.
விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் மற்றும் இளம் வீரர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு, "மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும். நாங்கள் விளையாடத் தொடங்கியபோது எங்களுக்கு லட்சியம் இருந்தது. அதேபோல் வரும் தலைமுறையினரும் விளையாட வேண்டும். விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இது அணிக்கு தேவையானதுதான்' என்றார்.
இந்தியரால் மட்டும்தான் முடியும்
உங்களுடைய 100 சதங்களை முறியடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "எனக்குத் தெரியாது. சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதற்குத்தான். என்னுடைய சாதனை முறியடிக்கப்படும் என்றால் அது ஒரு இந்தியரால்தான் முடியும் என்று நம்புகிறேன். 100-வது சதம் முறியடிக்கப்படுமா என்பது பற்றி முன்கூட்டியே ஊகிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மேன் அறிவித்த டெஸ்ட் அணியில் நானும் ஒருவனாக இருந்ததைத்தான் பெரிய விருதாக நினைக்கிறேன்' என்றார்.
தந்தையை நினைவுகூர்ந்த சச்சின்
தனது தந்தை குறித்துப் பேசிய சச்சின், "அவர்தான் என்னுடைய கதாநாயகன். அவரோடுதான் என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் தொடங்கினேன். அவரையே பின்பற்றுகிறேன். கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்காதவர்கள்கூட எனக்கு அறிவுரை கூறினார்கள். அவர்கள் அனைவரும் நல்ல எண்ணத்திலேயே அப்படி கூறியுள்ளனர்.
இப்போதைய சூழலில் நான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நிரூபிக்க வேண்டியதில்லை. ரசித்து விளையாட விரும்புகிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அதைவிட வேறு எதையும் பெரிதாக நினைக்கவில்லை.
22 ஆண்டுகள் காத்திருந்தேன்
சாதனைகளைப் பற்றி நினைப்பதில்லை. நான் விரும்பிய அனைத்தையும் சாதித்துவிட்டதால் சாதனைகளை மனதில் வைத்து விளையாட விரும்பவில்லை. இன்னும் கிரிக்கெட் மீது தீராத காதல் எனக்கு உள்ளது. அதனாலேயே சதத்தில் சதம் காண முடிந்தது. எந்த விஷயமாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற கனவு இல்லாவிட்டால் எப்போதுமே நம்மால் சாதிக்க முடியாது.
இதேபோல் எந்த நேரத்திலும் நம்பிக்கையோடு இருப்பது முக்கியமானது. நான் நம்பிக்கையை இழக்காததாலேயே தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். உலகக் கோப்பையை வெல்வதற்கு ஓர் ஆண்டல்ல, 22 ஆண்டுகள் நான் காத்திருந்தேன்' என்றார்.
ஜான் ரைட் கொடுத்த நம்பிக்கை
முன்னாள் பயிற்சியாளர் ஜான்ரைட் குறித்துப் பேசிய சச்சின், "2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, "சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதமடிக்கப் போகும் முதல் வீரர் நீங்கள்தான்' என்று முன்னாள் பயிற்சியாளர் ஜான்ரைட் என்னிடம் கூறினார். 100 சதமடிக்க அவர்தான் என்னை முதலில் தூண்டினார்' என்றார்.
ஊடகங்கள்தான் சவால்
தனது முதல் சதத்தை அடித்தபிறகு ஊடகங்களைச் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சச்சின், "இங்கிலாந்துக்கு எதிராக நான் அடித்த முதல் சதத்தைவிட, அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்புதான் மிகக் கடினமாக இருந்தது. அப்போதைய அணி மேலாளர் மாதவ் மந்திரி, என்னிடம் வந்து செய்தியாளர்கள் சந்திப்பு இருப்பதாக கூறினார்.
அதற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுபவம் இல்லாததால் அங்கு என்ன நடக்கும் என்று மேலாளரிடம் கேட்டேன். "எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் உங்களோடு இருப்பேன்' என்று மேலாளர் தெரிவித்ததாக' தனது பழைய நினைவுகளை தெரிவித்தார்.
சாதனைகளை ஒப்பிட விரும்பவில்லை
தன்னுடைய 100 சதங்களின் சாதனையை இலங்கை வீரர் முரளீதரனின் 800 விக்கெட் சாதனையோடு ஒப்பிட மறுத்த சச்சின், "அவ்வாறு ஒப்பிட விரும்பவில்லை. 800 விக்கெட் என்பதை மிகப்பெரிய விஷயமாக நினைக்கிறேன். அது ஒரு வரலாற்றுச் சாதனை' என்றார்.