|

கேப்டன் பதவிக்கு தயார்: தோனிக்கு காம்பிர் சவால்!

புதுடில்லி: கேப்டன் ஆசையில் மிதக்கிறார் கவுதம் காம்பிர். டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தோனியை மீண்டும் உரசிப் பார்க்கிறார். ஆசிய கோப்பை தொடரின் போது காம்பிருக்கு பதிலாக விராத் கோஹ்லிக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே 6 ஒருநாள் போட்டிகளில் காம்பிர் தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. இந்நிலையில், இவரிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கேப்டன் தோனி, காம்பிர் இடையே பனிப் போர் உருவானது. இந்நிலையில், சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் பைனலில் காம்பிர் தலைமையிலான கோல்கட்டா அணி, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இதையடுத்து காம்பிருக்கு ஆதரவு அதிகரித்தது. டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக 7 தோல்விகளை சந்தித்த தோனிக்கு பதிலாக இவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கங்குலி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். ஆனாலும், தேர்வாளர்களின் அதீத நம்பிக்கையை பெற்ற தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பறிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இது குறித்து காம்பிர் கூறியது: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளேன். இதனை மிகப் பெரும் கவுரவமாக கருதுவேன். இந்த சவாலை சந்திக்க மனதளவில் தயாராக இருக்கிறேன். ஆனாலும், என்னைப் பொறுத்தவரை கேப்டனால் மட்டும் சாதிக்க முடியாது. வெற்றிகரமான அணியால் தான் வெற்றிகரமான கேப்டனை <உருவாக்க முடியும். மாறாக வெற்றிகரமான கேப்டனால், வெற்றிகரமான அணியை உருவாக்க முடியாது. சில போட்டிகளில் விரைவாக அவுட்டாகி விட்டால், அணியில் இருந்து நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் எப்போதும் இருக்கும். தடை வேண்டாம்: ஐ.பி.எல்., தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தேவையில்லாதது. பெரும்பாலான போட்டிகளில் கடைசி ஓவரில் தான் முடிந்தன. இது போட்டியின் தரத்தை சுட்டிக் காட்டியது. இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பல வீரர்கள் ஐ.பி.எல்., மூலம் பெற்றுள்ளனர். களத்துக்கு வெளியே நடக்கும் சில தவறான சம்பவங்களுக்கு, ஐ.பி.எல்., தொடர் மீது பழி சுமத்தக் கூடாது. இவ்வாறு காம்பிர் கூறினார்.

பதிவு செய்தவர் ah kdnl on 12:56 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added