பா.ஜ., பற்றி அத்வானி சொன்னதில் தவறில்லை:ஆதரவு தருகிறார் ராஜ்நாத் சிங்
புதுடில்லி:"சில மாநிலங்களில் கட்சியில் உள்ள தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது' என, பா.ஜ., அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பா.ஜ.,வில் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், சமீப காலமாக உட்கட்சி தகராறு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும், முதல்வர் சதானந்த கவுடாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
தன்னை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தும்படி, கட்சி மேலிடத்துக்கு எதிராக, எடியூரப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், சுரேஷ் மேத்தா போன்றோர், வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். ராஜஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள வசுந்தராவுக்கும், கட்சியின் மூத்த தலைவரான குலாப் சந்த் கட்டாரியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்சியின் மேல்மட்ட தலைவர்களும், ஒருவர் மீது ஒருவர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தற்போதைய தலைவர் நிதின் கட்காரியின் செயல்பாடு சரியில்லை என, நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்த விவகாரம், பா.ஜ., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்நாத் ஆதரவு:இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் நேற்று கூறுகையில், "அத்வானி, கட்சியின் மூத்த தலைவர். அவர் என்ன கூறினாலும் கட்சி நன்மைக்காகவே கூறுவார். அவர் கூறுவதை முழுமையாக ஆதரிக்கிறேன்' என்றார்.இதற்கிடையே, கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, "கமல் சந்தேஷ்'ல், இந்த உட்கட்சி மோதல் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:
பா.ஜ., ஆட்சி நடக்கும் கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், எதிர்க்கட்சியாக உள்ள ராஜஸ்தானிலும், கட்சிக்குள் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடக்கின்றன. இந்த சம்பவங்கள் பா.ஜ., தொண்டர்களுக்கும், பா.ஜ., ஆதரவாளர்களுக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண தொண்டர்கள் தவறு செய்தால், அதை புரிந்து கொள்ள முடியும். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தவறு செய்வது, கட்சியின் கொள்கைக்கு மாறாகச் செயல்படுவது, சரியல்ல என எழுதப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர் ah kdnl
on 12:55 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன