மகளை தள்ளியதால் தாக்கினேன்: அப்ரிதி

கராச்சி, மார்ச் 24: எனது மகளை கீழே தள்ளியதால் ரசிகரை தாக்கினேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, வெள்ளிக்கிழமை நாடு திரும்பியது. அவர்களை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கராச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
விமானத்தில் இருந்து இறங்கிய அப்ரிதி, தனது கார் அருகே சென்றபோது, அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு ரசிகர்கள் கூட்டம் திரண்டது.
அப்போது ரசிகர் ஒருவர் காரின் அருகே நின்ற அப்ரிதியின் மகளை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்ரிதி அந்த ரசிகரை தாக்கினார்.
அதன்பிறகு அப்ரிதியின் சகோரர் உள்ளிட்டோர் அப்ரிதியை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும் அந்த ரசிகரை அப்ரிதி மிதிக்க முயன்ற காட்சியும் தொலைக்காட்சியில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அப்ரிதி, "எனது மகளை கீழே தள்ளியதால் சற்று கோபமடைந்தேன். நான் அவ்வாறு செய்தது தவறுதான். அப்படி நடந்திருக்கக்கூடாது. என்னருகே நின்று கொண்டிருந்த எனது மகளை தள்ளியபோது அதை தாங்க முடியாமல் பொறுமை இழந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.
அப்ரிதியின் சகோதரர் கூறுகையில், "குழந்தையை தள்ளியவர் ரசிகர் அல்ல. அவரை அப்ரிதியின் ரசிகர் என்று குறிப்பிட விரும்பவில்லை. தன்னுடைய ரசிகரை தாக்க வேண்டும் என்று அப்ரிதி ஒருபோதும் நினைத்ததில்லை' என்றார்.