1:36 PM | பதிவு செய்தவர் ah kdnl
பாரீஸ், ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 10-வது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஷரபோவா.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சரா எர்ரானியைத் தோற்கடித்தார்.
தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஷரபோவா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷரபோவா 2004-ல் விம்பிள்டனிலும், 2006-ல் அமெரிக்க ஓபனிலும், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற ஷரபோவா, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தாலியின் சரா எர்ரானி, கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வென்ற ஷரபோவாவுக்கு ரூ.8.6 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இரண்டாவது இடத்தைப் பிடித்த சரா எர்ரானிக்கு
ரூ. 4.3 கோடி கிடைத்தது.