முஸ்லிம்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது, சிதம்பரம் தான் : சுப்பிரமணியன் சுவாமி
கடந்த 1987ல் மீரட் மாவட்டம், ஹாஷிம் புராவில் 42 அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் என்றார், சுப்பிரமணியன் சுவாமி.
அன்றைக்கு மத்திய உள்துறையில் இணை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படுகொலை நிகழ்ந்த சில நாட்களுக்கு முன்பு மீரட் சென்று, போலீஸ் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய சிதம்பரம், முஸ்லிம்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென்றால் இங்குள்ள 200, 300 முஸ்லிம்களை சுட்டு பொசுக்குங்கள், என்று உத்தரவிட்டார். சிதம்பரம் இப்படி பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், நேற்று லக்னோவில் உறுதிப்பட கூறினார், சுப்பிரமணியன் சுவாமி. இதற்கான முக்கிய சாட்சி, அன்றைய எம்.பி. மொசினா கித்வாய், என்றார் சுவாமி. இந்த படுகொலை சம்பவம், நாட்டிற்கே பெருத்த அவமானம், இந்த அவமானம் துடைக்கப்பட வேண்டுமென்றால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த படுகொலைக்கு உத்தரவிட்ட, ப.சிதம்பரம் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து, நடவடிக்கை கோரி பிரதமருக்கு தான் விளக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார், சுப்பிரமணியன் சுவாமி. தேவைப்பட்டால் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றேனும், நடவடிக்கை எடுப்பேன் என்றார், சுவாமி.
