1:35 PM | பதிவு செய்தவர் ah kdnl
""அரசு சார்பில் ஒதுக்கப்படும் பங்களா எனக்கு தேவையில்லை. மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை,'' என, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின், ராஜ்யசபா எம்.பி.,யாக, மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்.பி., என்ற முறையில், இவருக்கு அரசு சார்பில் டில்லியில் பங்களா ஒதுக்கப்பட்டதாகவும், காங்., எம்.பி., ராகுலின் வீட்டுக்கு அருகில், இவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து, தனியார் "டிவி' சேனலுக்கு சச்சின் அளித்த பேட்டி:அரசு சார்பில் எனக்கு ஒதுக்கப்படும் பங்களாவை ஏற்கப்போவது இல்லை. மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், சில நாட்கள் மட்டுமே டில்லியில் தங்கியிருப்பேன். அந்த நாட்களில் ஓட்டல்களில் தங்க முடிவு செய்துள்ளேன்.
எனவே, ஒரு சில நாட்கள் டில்லியில் தங்குவதற்காக, மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை. அரசு பங்களாவை வேண்டாம் எனக் கூறுவதன் மூலம், எனக்கான பொறுப்பை தட்டிக் கழித்ததாக அர்த்தமில்லை.
கண்டிப்பாக, ஒவ்வொரு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலும் சில நாட்களாவது பங்கேற்பேன். அரசு பங்களாவை எனக்கு ஒதுக்குவதை விட, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஒதுக்கலாம். என்னை எம்.பி.,யாக்கி கவுரவித்ததே போதுமானது. அதற்காகக் கிடைக்கும் சலுகைகள் எதுவும் எனக்குத் தேவையில்லை; அதை நான் விரும்பவில்லை.இவ்வாறு சச்சின் கூறினார்.