|

சாட்டையை சுழற்றியது பி.சி.சி.ஐ., * பயிற்சியாளர் பிளட்சருக்கு -சிக்கல் *


மும்பை: பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது பயிற்சியில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்க, பி.சி.சி.ஐ., நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜூனியர் அணிக்கு பயிற்சி அளிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 13ல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் (63), நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 8 மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்தது. தவிர, டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்தையும் இழந்தது.
இவரது பயிற்சியில் விளையாடிய 31 ஒருநாள் போட்டிகளில், 17ல் தான் இந்தியா வென்றது. வீரர்களை முன்னேற்ற உருப்படியான ஆலோசனை எதுவும் பிளட்சர் தருவதில்லை. "சீனியர்' வீரர்களிடையே மோதல் குறித்தும் கண்டு கொள்ளவில்லை. தொடர் தோல்விகளால் இவரது தலை உருளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, தற்போதைய சம்பவம் அமைந்துள்ளது.
பொதுவாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர், போட்டி இல்லாத நேரங்களில் "ரிலாக்சாக' இருப்பது வழக்கம். முந்தைய பயிற்சியாளர் கிறிஸ்டன், இப்படித்தான் இருந்தார்.
முதன் முறையாக...
தற்போது, முதன் முறையாக, "பிளட்சர், ஜோ டேவ்ஸ் (பவுலிங்), டிரிவர் பென்னி (பீல்டிங்), தலைமை பிசியோதெரபிஸ்ட், ஈவன் ஸ்பீச்லி உள்ளிட்ட அனைவரும், உடனடியாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல வேண்டும். அங்கு, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும், நான்கு நாடுகள் தொடரில் பங்கேற்கும், 19 வயதுக்குப்பட்ட இந்திய அணிக்கு பயிற்சி தர வேண்டும்,' என, பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் ஜக்தலே உத்தரவிட்டுள்ளாராம். இதன் மூலம் ஜூனியர் அணிக்கு பயிற்சி அளிக்கும் நிலைமைக்கு பிளட்சர் தள்ளப்பட்டுள்ளார். இது பிளட்சர்-பி.சி.சி.ஐ., இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியது. 

ஆஸி., பயணம்: இந்த பயிற்சி முடிந்த நிலையில், அடுத்து ஒரு "டுவென்டி-20' போட்டிக்காக, இந்திய அணியுடன் பிளட்சர் குரூப், தென் ஆப்ரிக்கா செல்கிறது. பின், இந்தியா திரும்பியதும், நான்கு நாடுகள் (19 வயதுக்குட்பட்ட) தொடருக்காக (வரும் ஏப்., 5 முதல் 15 வரை) ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அடுத்து, இந்திய "ஏ' அணியுடன், வெஸ்ட் இண்டீசிற்கு போக வேண்டும். ஏனெனில், இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வரை எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""தலைமை பயிற்சியாளராக இருப்பவர், அவருக்குரிய பணிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான், 19 வயது, இந்தியா "ஏ' அணிகளுடன், பிளட்சர் செல்ல வேண்டும் என விரும்புகிறோம்,'' என்றார்.

பதிவு செய்தவர் ah kdnl on 9:05 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added