|

மாஸ்கோவில் மாபெரும் பேரணி: ஓங்கி ஒலிக்கும் எழுச்சிக் குரல்!




மாஸ்கோ: கடந்த சனிக்கிழமை (14.04.2012) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை ஒழுங்குசெய்திருந்தன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகள் தினத்தை நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக ஸஸ்டாவா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் அணிதிரண்டனர்.

"தமது நாட்டின் சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும், தம்முடைய எதிர்காலத் தலைமுறை அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்; உலகில் வாழும் ஏனைய சிறுவர்களைப் போல கௌரவமான மகிழ்ச்சியான வாழ்வை அடையவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்திற்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பலஸ்தீன் கைதிகளின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையிலேயே நாம் இங்கு கூடியுள்ளோம்" என பேரணியினர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் எந்தவித நியாயமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், வருடக்கணக்காக பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகளின் பொறுமையும் தியாகமும் மகத்தானவை; கௌரவத்துக்கு உரியவை. எனவே, அவற்றை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பது இன்றியமையாததாகும்" என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் ஸியோனிஸ காட்டுமிராண்டித்தனங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகளின் போராட்டம் நியாயமானது. எனவே, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அவர்களின் சாத்வீகப் போராட்டத்தைத் தோல்வியடைய விடாமல் காப்பது மனிதத்துவமுள்ள அனைவரதும் கடமையாகும்" என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பதிவு செய்தவர் Eshack on 12:59 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added