தொண்டர்களை திரட்டி, "மிரட்ட' தயாராகுது தமிழக பா.ஜ.,
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் துணையோடு தான் தேசிய கட்சிகள் வளர வேண்டும் என்ற, எழுதப்படாத விதிக்குள் காங்கிரஸ் - பா.ஜ.,- கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கி இருந்தன. இவற்றில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் இன்று வரை ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் துணையோடு தான் தேர்தல் களத்தையும், அரசியல் களத்தையும் சந்தித்து வருகின்றன.
நிரூபிக்க வேண்டிய கட்டாயம்: லோக்சபா தேர்தலில் இப்படி அணி சேர்வது குறித்து யோசிக்கும் திராவிட கட்சிகள், சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல் என வரும்போது, தமிழக பா.ஜ.,வை தீண்டத்தகாத கட்சியாக ஒதுக்கி வைத்து விடும். கடந்த காலங்களில் தமிழக பா.ஜ., கற்ற பாடங்கள் இவை. இவற்றிலிருந்து விடுபட வேண்டுமானால், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு என்று, ஓட்டு வங்கி இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழக பா.ஜ., தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன், இந்த கட்டாயத்தை; கனவை நனவாக்கும் முயற்சிகள் துவங்கின. பா.ஜ., நடத்திய நிகழ்ச்சிகளில், முயற்சிக்கான முன்னேற்றங்கள் வெளிப்படையாக தெரிந்தன.
ஆறு மாதங்களாய் அனல் பணி: லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், மீண்டும் தன் பலத்தை சோதித்துப் பார்த்து, மற்றவர்களுக்கும் வெளிப்படுத்த மதுரையில், ஐந்தாவது மாநில மாநாட்டை களமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது பா.ஜ., வரும், 28 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கும், இந்த மாநாட்டை வெற்றிகரமாக்க, கடந்த ஆறு மாதமாகவே பம்பரமாய் சுழன்று வருகின்றனர், பா.ஜ., மாநில நிர்வாகிகள்.
நவீன முறையில் உறுப்பினர் சேர்ப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே, புதிய உறுப்பினர் சேர்ப்பில் தமிழக பா.ஜ., தீவிரம் காட்டத் துவங்கிவிட்டது. ஒவ்வொரு நிர்வாகிக்கும், 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சேர்க்கப்படும் புதிய உறுப்பினர் குறித்த தகவல், நாள்தோறும் இணைய தளத்தில் பதியப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் ஒவ்வொரு உறுப்பினருக்கும், "பார்கோடு' வசதி கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் போலிகள் இல்லாத, கட்சியின் உறுப்பினர்கள் நிறைந்த மாநாடாக இருக்கும் என்று சொல்லும் பா.ஜ., நிர்வாகிகள், " இந்த மாநாட்டில் நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்ற கட்சிகளையும், எங்கள் கட்சியின் தேசிய தலைமையும் கூட அசர வைக்கும்' என்று பெருமிதப்படுகின்றனர். வழக்கமான மாநாடு போல் இல்லாமல், வெளி மாநில பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி, சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையிலான மாதிரி வீடு, ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ள பொருட்களை குறைந்த விலையில் விற்கும் ஏற்பாடு என, பல புதிய விஷயங்கள் இந்த மாநாட்டில் இடம் பெறவுள்ளன. மாநாட்டு செலவுக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட் தொகை, 15 கோடி ரூபாய். சாதாரண உறுப்பினரில் துவங்கி, மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரை ஒவ்வொருவருக்கும் இலக்கு கொடுக்கப்பட்டு வசூல் நடந்து வருகிறது. மாநாட்டு வசூலைக் கொண்டு பந்தல், சாப்பாடு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மோடி வருவாரா? பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி, அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா என, பெரும் படையே மாநாட்டு மேடையை அலங்கரிக்கவுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவரிடம் இருந்து ஒப்புதல் வராவிட்டாலும், எப்படியும் மோடியை அழைத்து வருவது என்பதில், மாநில பா.ஜ., நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். மோடியின் வருகை, தமிழக பா.ஜ., தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தரும் என்பது, அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பதிவு செய்தவர் ah kdnl
on 12:59 AM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன