11:34 PM | பதிவு செய்தவர் ah kdnl
தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு உள்பட ஏராளமான வழக்குகள் சேலம் மாவட்ட போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு ஜெயிலில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை உறுதி செய்வதற்காக ஆலோசனைக் குழு முன்பு ஆவணங்கள் போலீசார் தாக்கல் செய்தனர். ஆலோசனைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். ராமன், உறுப்பினர்களாக நீதிபதிகள் ஜி. மாசிலாமணி, ஆர்.ரகுபதி ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் கடந்த 11-ந் தேதி வீரபாண்டி ஆறுமுகம் ஆலோசனைக் குழு நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆலோசனை குழு நீதிபதிகள் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து நேற்று ஆணை பிறப்பித்தனர்