கிடப்பில் காட்டுப்பள்ளி துறைமுகம்
சரக்குகளை கையாள முடியாமல் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில், சென்னைக்கு அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டும் கூட, காட்டுப்பள்ளி துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் கூட, சுங்க வரி சோதனை அலுவலகம் அமைப்பதற்குரிய ஒப்புதலை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், இந்த துறைமுகத் திறப்பு விழா தள்ளிப் போகிறது.
கால தாமதம் :சென்னை, எண்ணூர் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், கப்பலில் வந்திறங்கும் சரக்குகளை, துறைமுகத்தை விட்டு வெளியில் கொண்டு வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, சென்னைக்கு அருகே எண்ணூரில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஐ.மு., கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தபோது, இதற்கான பணிகள் ஆரம்பமாகின.கட்டுமானத் துறையில் பெரிய அளவில் புகழ் பெற்று விளங்கும், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில் இந்த துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் உரிமையாளர் இந்த நிறுவனம் தான். இருப்பினும் இந்த திட்டத்தில், தமிழக அரசின் நிறுவனமான டிட்கோவுக்கும் பங்களிப்பு உள்ள வகையில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. டிட்கோ நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தில் 10 சதவீதம் வரை பங்குகள் இருப்பதால், அரசாங்க துறைமுகம் போலவே கருதப்பட்டு வந்தது.
நெருக்கடி நீங்கும்:ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒரு துறைமுகத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டன. வெறும் துறைமுகமாக மட்டும் இல்லாமல் கப்பல் கட்டும் வசதிகளும், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுப்பள்ளி துறைமுகம் பெற்றது. சரக்குகளை கையாள்வதில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விரைவில் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஒப்புதல் இல்லை:ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த துறைமுகம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டும்கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு துறைமுகத்தில் அமைக்கப்படவேண்டிய சுங்கவரிச் சோதனை அலுவலகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதே மிக முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எந்த ஒரு துறைமுகமாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமாக விளங்குவது சுங்கவரிச்சோதனை அலுவலகம்தான்.கப்பலில் இருந்து வரும் சரக்குகளை சோதனையிட்டு அவற்றுக்கு சுங்கவரிச்சோதனை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே சரக்குகளை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லவே இயலும். ஆகவே ஒரு துறைமுகத்திற்கு ஆன்மா போல விளங்கும் சுங்கவரிச்சோதனை அலுவலகம் அமைப்பதற்குண்டான கட்டிடம், இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அரசின் ஒப்புதல் மட்டும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
காரணம் என்ன?சுங்கவரிச்சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகுந்த பற்றாக்குறையாக உள்ளது. இதனால்தான் சுங்கவரிச் சோதனை அலுவலகத்துக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்களில் காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக சுங்கவரிச்சோதனையில் ஈடுபட திறமைவாய்ந்த அதிகாரிகளே தேவைப்படுவார்கள். அதுபோன்ற அதிகாரிகள், தற்போது பிற துறைமுகங்களிலுமே கூட குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இதன்காரணமாக, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.பொதுவாக சுங்கவரிச்சோதனை குறித்த விவகாரங்கள் எல்லாமே மத்திய அரசின் நிதித்துறை இலாகாவின் கீழ் வருகிறது. மத்திய நிதியமைச்சகம்தான் இவற்றுக்கு எல்லாம் அனுமதி அளித்திடவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவரான பழனிமாணிக்கம்தான் மத்திய நிதித்துறையில் இணை அமைச்சராக உள்ளார். அதிலும் சுங்கவரித்துறை குறித்த விவகாரங்கள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருவதாக தெரிகிறது. இருந்தும்கூட என்ன காரணத்தினாலோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ,காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சுங்கவரிச் சோதனை அலுவலகம் அமைப்பதற்கு தேவையான அனுமதி கிடைக்காமல் இருந்து வருகிறது. மாற்று யோசனை:இதற்கிடையில் மாற்று ஏற்படாக சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் உள்ள சுங்கவரிச்சோதனை அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற யோசனையும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு துறைமுகத்தின் அனுமதி பெற்று வந்து மற்றொரு துறைமுகத்திற்குவந்து சுங்கவரிச்சோதனை நடத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருதப்படுதால் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சிக்கல் நீடித்தபடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ., மன்மோகன்தேதி கிடைக்கலயா: ஆரம்பத்தில் இருந்தே இந்த துறைமுகம், அரசுக்கு சொந்தமான துறைமுகமாவே கருதப்பட்டு வருகிறது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் பங்குகள் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே அரசின் துறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டு வந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான துறைமுகம் என்றாலும், டிட்கோ சம்பந்தப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரை வைத்து திறப்புவிழா நடத்த வேண்டுமென்று அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால் எல் அன் டி நிறுவனமோ பிரதமரையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டுமென கருதுகிறது. முதல்வருக்கும் பிரதமருக்கும் ஒருசேர தேதி கிடைக்காமல் இருப்பதாலேயே திறப்புவிழா தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆக விஐபி க்களின் தேதி கிடைக்காத காரணத்திற்காவே காலதாமதம் ஆகும் தமிழக திட்டங்களில் காட்டுப்பள்ளி துறைமுகமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆந்திராவுக்கு போன கதை:நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேலும் சில மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என்ற முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது இதே காட்டுப்பள்ளியைச் சுற்றியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு துறைமுகம் அமைக்க முடிவானது.மத்திய அரசே பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து இங்கு துறைமுகம் கட்டுவதாக இருந்தது. இதனால் சென்னை, எண்ணூர் ஆகியவற்றோடு சேர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகமும் தமிழகத்துக்கு கிடைத்து இருக்கும். ஆனால் சில தலையீடுகள் காரணமாக கைநழுவி எல் அன் டி வசம் இந்த காட்டுப்பள்ளி போய்விட்டது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக்கு மத்திய அரசால் அமைக்கப்படவிருந்த அதே துறைமுகம், இப்போது ஆந்திராவுக்கு சென்றுவிட்ட சோகத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.
-நமது டில்லி நிருபர்-
பதிவு செய்தவர் ah kdnl
on 1:11 AM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன