|

"யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' அமைச்சரை மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

கோவை :கோவையில், பொதுமக்கள் முன்னிலையில், தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை "மிரட்டிய' அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியின் சிறப்பு தூய்மைக்குழு துவக்க விழா நேற்று காலை நடந்தது. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி, மேயர் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட மருதம் நகரில் சமநிலைத் தொட்டி கட்டுமான பணியை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, "யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' எனக்கேட்டு அமைச்சருடன் வாக்குவாதம் செய்தார். அருகிலிருந்த கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., துரைசாமி, ஆறுக்குட்டியை சமாதானம் செய்ய முயன்றார். எனினும், அவர் தொடர்ந்து சத்தம் போட்டபடியே இருந்தார். நிலைமை மோசமாவதை கண்டு சுதாகரித்து கொண்ட அமைச்சர் முனுசாமி, ஆறுகுட்டியை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு அவர், "யாரைக் கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...? சும்மா வந்துபோற இடம்முனு என் தொகுதியை நினைச்சீங்களா? குரும்பபாளையம் பக்கம் வந்து பாருங்க, எங்காளுக உங்கள போக விடமாட்டாங்க...' என்றார்.அதற்கு அமைச்சர் முனுசாமி, " ஆறுக்குட்டி, ப்ளீஸ் ஒத்துழைங்க, இனிமேல் தவறு நடக்காம பார்த்துக்குவோம்' என்றார். அவ்வாறிருந்தும், ஆறுக்குட்டி சிறிதும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். "இந்த விஷயம் "அம்மா' காதுக்கு போகட்டும்; என் தொகுதியில நடக்கற விழா பத்தி என்கிட்ட ஏன் சொல்லலைன்னு கேக்குறது என் உரிமை,' என, ஆவேசம் குறையாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரை எம்.எல்.ஏ., க்கள் துரைசாமி, வேலுமணி ஆகியோர் குறுக்கிட்டு சமாதானம் செய்தனர். அதன்பின், கையெடுத்துக் கும்பிட்டவாறு காரில் ஏறி கிளம்பினார் அமைச்சர் முனுசாமி. ஆறுக்குட்டியின் ஆவேசத்தால் "அப்செட்' ஆன பிற பிரமுகர்கள், அதிகாரிகள், நிகழ்ச்சியை ரத்துசெய்து கிளம்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி கூறுகையில், ""அமைச்சர் வருகை குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. என் ஊர் இது. நான் பாடுபடும் மண். என்னிடம் சொல்லாமல் யாராவது உள்ளே வரலாமா,'' என்றார். எம்.எல்.ஏ.,வின் புகார் குறித்து மாநகராட்சி தரப்பில் விசாரித்தபோது, "மாநகராட்சி கமிஷனர் மற்றும் மண்டல உதவி ஆணையர் மூலமாக, அமைச்சர் வருகை குறித்து, ஆறுக்குட்டிக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டோம்' என்றனர். கட்சியினர் "அப்செட்':அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரே மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டு, உடனிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், "தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, ஆதங்கத்தை எம்.எல்.ஏ., தெரிவித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, பொதுஇடத்தில் இப்படி நடந்துகொண்டிருக்க தேவையில்லை. அமைச்சரை தன் தொகுதிக்கு அழைத்துச் சென்று கோரிக்கைகள் குறித்து விளக்கியிருக்கலாம்; அதுவே சரியான அணுகுமுறை' என்றார்.

பதிவு செய்தவர் ah kdnl on 1:11 AM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added