12:48 PM | பதிவு செய்தவர் ah kdnl
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்துவரும் கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சதானந்த கவுடா முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் தன் மீதான வழக்குகளில் ஜாமீன் பெற்ற எடியூரப்பா, தன்னை மீண்டும் முதல்வராக நியமிக்கக் கோரி கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இவ்விவகாரத்தில் கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்தபின்பு அவர் அமைதியானார். எனினும் அடிக்கடி அவர் தன் கோரிக்கையை மேலிடத்துக்கு நினைவூட்டியவண்ணம் இருந்தார்.
இந்நிலையில் எடியூரப்பா ஆதரவாளர்களான 9 அமைச்சர்கள், அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின்னர், தனது ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக நியமிக்க வேண்டுமென மேலிடத்துக்கு எடியூரப்பா மீண்டும் நெருக்கடி கொடுத்தார்.
இந்நிலையில், எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் ஆகியோர் தங்கள் பலத்தை காட்டுவதற்காக ஜெகதீஷ் ஷெட்டர் இல்லத்தில் இன்று கூடினர். இன்றைய கூட்டம் பற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த அமைச்சர்களில் ஒருவரான ராஜூ கவுடா பேசும்போது, ‘ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக நியமிக்கும்படி நாங்கள் ஒருமனதாக கட்சி மேலிடத்தைக் கோர முடிவு செய்துள்ளோம். இவ்விஷயத்தில் ஜூலை 5-ம் தேதிக்குள் கட்சி மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம். அதற்குள் நல்ல முடிவை மேலிடம் அறிவிக்காவிட்டால், ஜூலை 5-ம் தேதி நாங்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம்’ என்றார்.
இன்றைய கூட்டத்தில் 55 எம்.எல்.ஏக்கள், 15 எம்.எல்.சி.க்கள், 8 எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் ராஜூ கவுடா தெரிவித்தார்.