மறுபரிசீலனை செய்வோமே...
இந்தியாவில் உள்ள 15
ஐஐடி (இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி),
30 என்ஐடி (நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி),
4 ஐஐஐடி (இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி) 5
ஐஐஎஸ்இஆர் (இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயன்ஸ் எஜுகேஷன்ஸ் அன்டு ரிசர்ச்) ஆகிய கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும் என்று மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருக்கிறார்.
இதுநாள்வரை 15
ஐஐடி-களுக்கும் தனியாக பொது நுழைவுத் தேர்வு (ஐஐடி-ஜேஇஇ) நடத்தப்படுகிறது. இதில் 5
லட்சம் பேர் பங்குகொள்கின்றனர். அதேபோன்று பொறியியல் கல்லூரிகளுக்குத் தனியாக பொது நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஇ) நடத்தப்படுகிறது. இதில் 10
லட்சம் பேர் பங்கு கொள்கின்றனர். வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டால் என்ற அச்சத்தில் இரண்டு தேர்வுகளையும் எழுதுவோரே மிக அதிகம். இதனால் பெற்றோருக்கு அதிக அலைச்சலும் பொருள்செலவும் ஏற்பட்டது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரேயொரு பொது நுழைவுத் தேர்வு எழுதும்படி செய்தல் வேண்டும் என்கின்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது.
இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவென்றால், மாணவர்கள் பிளஸ் 2
தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் அவர்கள் பொது நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் இரண்டையும் சேர்த்துத்தான் தரவரிசை அமைக்கப்படும் என்பதுதான். இதுநாள்வரை உள்ள நடைமுறை, பொது நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவதுதான். இதனால், பொதுத் தேர்வைச் சரியாக எழுதி அதிக மதிப்பெண் பெறாவிட்டாலும்கூட, பொது நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் போதும் என்ற மனநிலை மாணவர்களிடம் உருவானது. இது ஒருபுறம் இருக்க, நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்கிறோம் என்ற பெயரில் தனிப்பயிற்சி மையங்கள் பல புற்றீசல்போல தோன்றி, குறைந்தபட்சம் ரூ.50
ஆயிரம் முதல் ரூ.1.5
லட்சம் வரை ஒட்டுமொத்தமாகக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் உருவாகியது.தமிழகத்தில் பதின் ஆண்டுகளுக்கு முன்பு வரை, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இதே நடைமுறை அமலில் இருந்தது. தகுதிப் பாடங்களில் மாணவரின் தேர்வு மதிப்பெண் மற்றும் பொதுநுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் இரண்டையும் சேர்த்துதான் "கட்-ஆஃப்' தீர்மானிக்கப்பட்டது. மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டனர். பொது நுழைவுத் தேர்வில் கிராமப்புற மாணவர்களால் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை என்றும், அதனால் அவர்களுக்குப் பொறியியல் கல்லூரியில் சேரும் வாய்ப்புகள் குறைகிறது என்றும் அரசியல்வாதிகள் கூறியதால், அந்த நடைமுறை நீக்கப்பட்டு, தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர் கலந்தாய்வு நடத்தும் வழக்கம் தொடங்கியது.அதிக மதிப்பெண் பெற்று அதிக "கட்-ஆஃப்' மதிப்பெண் பெறும் மாணவர்களில் பெரும் பகுதியினர் தனியார் பள்ளியில், அதிகப் பணம் செலவழித்துப் படித்தவர்கள் என்பது அண்மையில் வெளியான பிளஸ் 2
தேர்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. சிறந்த கல்லூரிகளில் இடம்பிடிப்பதற்காக, மதிப்பெண் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு, பாடங்களின் அடிப்படைப் புரிதல் இல்லாமல் படித்தவர்களே அதிகம். இதனால், உயர் கல்வியில் சேர்ந்தாலும், அடிப்படை அறிவியல் தெரியாமல், நமது மாணவர்கள் இந்திய அளவில் பின்தங்கும் சூழலும் உருவாகி வருகிறது.முழுக்க முழுக்கத் தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொள்வதும் தவறாக இருக்கிறது. முழுக்க முழுக்க நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதும் தவறாக அமைகிறது. இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள, பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் தகுதிப் பாடங்களில் பெற்ற தேர்வு மதிப்பெண் இரண்டையும் கணக்கில்கொண்டு தரவரிசைப்படுத்தி, மாணவர் சேர்க்கை நடத்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். இந்தப் பொது நுழைவுத் தேர்வு பகுதி-1
எளிமையான கேள்விகளாகவும், பகுதி-2 கடினமான கேள்விகளாகவும் அமையும். தேர்வு மதிப்பெண்ணுக்கு 40%
கணக்கில்கொண்டால், மீதி 60% "கட்-ஆஃப்' மதிப்பெண் பகுதி-1,
பகுதி-2
ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களால் அமையும். இதில் ஐஐடி போன்ற கல்லூரிகள் தங்களுக்கு மிகச்சிறந்த மாணவர்கள் வேண்டும் என்று விரும்பினால், பகுதி-2 கடின கேள்வித்தாளில் கிடைத்த மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும். இது அந்தந்த நிறுவனங்களின் கல்விக்குழுவுடைய முடிவாக இருக்கும்.தற்போது தனியார் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்துகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் நடத்தும் நுழைவுத்தேர்வுக் கட்டணம் ரூ.1,000
வரை இருக்கிறது. இனிமேல், தனியார் பல்கலைக்கழகங்களும் தங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை இந்திய அளவில் நடத்துவது அவசியம்.பொறியியல் பட்டதாரிகளையும், மருத்துவப் பட்டதாரிகளையும் ஆயிரக்கணக்கில் உருவாக்குகிறோம் என்பது மட்டுமே பெருமைப்படத்தக்க விஷயமல்ல. தரமான பட்டதாரிகளை உருவாக்குகிறோமா என்பதும், அவர்கள் சர்வதேச அளவில் மதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்களா என்பதும்தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் பல்கலைக் கழகங்களும், உயர்கல்விச் சாலைகளும் அதிகரித்த அளவுக்குக் கல்வியின் தரம் உயர்ந்ததாகத் தெரியவில்லை.அதனால், தமிழக அரசு இந்த நடைமுறையை, அதாவது பொது நுழைவுத் தேர்வு, தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பிடும் முறையை, மீண்டும் அமல்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுமேயானால், அவர்களுக்காக 15%
இடங்களை ஒதுக்கலாம். தரவரிசையில் வரும் கிராமப்புற மாணவர்கள் இதனைப் பெற்றுப் பயனடைய முடியும்.
பதிவு செய்தவர் ah kdnl
on 1:30 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன