பிகார் வழிகாட்டுகிறது...
புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ஆம் தேதி, பிகார் அரசு துணிந்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்கா, புகையிலையால் ஆன ஜர்தா பான் விற்பனைக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் பிகார் அரசின் அந்த அறிவிப்பு. மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும் பழக்கத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பு அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிந்து தடை விதித்திருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டுக்குரியவர்.
இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள 3-வது மாநிலம் பிகார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசமும், கேரளமும் குட்கா, ஜர்தா பான் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.
புகையிலையை, பீடி சிகரெட்டாகப் பயன்படுத்துவோர் ஒருபுறம் இருக்க, புகையில்லாப் புகையிலை வகையறாக்களாக பான், குட்கா, கைணி முதலியவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது. பல இடங்களில் இதற்குத் தடை உள்ளது. அபராதம் உள்ளது. ஆனால், நேரடியாகப் புகையிலையை வாயில் அடக்கிக்கொள்ளலாம். இதைச் சட்டம் அனுமதிக்கிறது.
இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரில் 15 வயது முதல் 24 வயது உள்ளவர்கள் 18% பேர். 24 வயது முதல் 44 வயது வரையிலானோர் 37% பேர். இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே நிலைமை விளங்கும். இதில் இளைஞர்களைப் பொருத்தவரை புகையிலையைப் பான், குட்காவாகப் பயன்படுத்துவோர்தான் அதிகம் என்பது.
இந்தியாவில் ஒரு பள்ளி மாணவன் அல்லது கல்லூரி மாணவ - மாணவியர் சிகரெட் பிடித்தால் சமூக ஒழுக்கக்கேடு. ஆனால், அவர்கள் பான், குட்கா போட்டுக்கொள்வதை யாரும் தடை செய்வதில்லை. தாய் - தந்தையருடன், ஆசிரியருடன் ஒன்றாக அமர்ந்தும்கூட, எந்தத் தயக்கமும் குற்றவுணர்வும், சமூக விமர்சனங்களும் இல்லாமல் சாப்பிட முடிகின்றது. பீடி, சிகரெட்டுக்கு மாற்றாக பான், குட்கா மாறிவிட்டன என்பதையே உணராமல் இதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய புகையில்லா புகையிலைப் பழக்கம் பெண்களுக்கு மிகவும் வசதியான போதைப் பழக்கமாக மாறிவிட்டது. இது சமூகத்தால் கெட்ட பழக்கம் என்று சொல்லப்படாததால், வெற்றிலை போடுவதைப் போன்றதொரு பழக்கம் என்றே பெண்கள் கருதுகிறார்கள். ஆனால், இது பாக்கு மற்றும் புகையிலை, நிக்கோடின் கலந்த போதைப்பொருள் என்கிற விழிப்புணர்வு பெண்களிடம் இல்லை.
இந்தியாவில் பான் மற்றும் குட்காவை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது என்று 2011 மார்ச் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்காக, எந்த மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. தொடர்ந்து இப்பொருள்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம், கேரளத்தைத் தொடர்ந்து தற்போது பிகார் மாநிலத்தில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.
பிகார் மாநிலத்தில் புகைப்பிடிப்போர் 54% பேர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்தான் புகையிலைப் பயன்பாடு 50%க்கு அதிகமாக இருக்கின்றது. இதில் மிசோரம் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. குளிர்ப்பிரதேசம் என்பதால் அங்கே 67% பேர் புகைக்கிறார்கள்.
அதையடுத்து நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. கேரளத்தில் 21% பேர் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள். தமிழ்நாட்டில் 16.2% பேர் மட்டுமே புகையிலைப் பயன்படுத்துவோர்.
மே 31 ஆம் தேதி இந்தியா முழுவதிலும் புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. அந்த ஒரு நாளிலாவது அடையாளமாக புகையிலை விற்பனைக்குத் தடை உண்டா என்றால் அதுகூட இல்லை.
ஒரு நாள் மட்டும் தடை விதிப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிற கேள்வி நியாயமானதுதான். மகான்களின் பிறந்த நாளன்று ஒருநாள் மது விற்பனையைத் தடை செய்தாலும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது கிடைப்பதைப்போலவே, பீடி, சிகரெட், குட்கா, பான் போன்றவையும் அன்று ஒருநாள் அதிக விலைக்கு விற்கப்படும் என்பதும் மிகவும் சரி. இருப்பினும், அதிக விலைக்கு வாங்கும் அந்தத் தருணத்திலாவது, இது உடலுக்குத் தீங்கானது என்பதால்தான் தடை விதிக்கிறார்கள்; அதற்கு இரட்டிப்பு விலை கொடுக்க வேண்டுமா? என்ற எண்ணம், தீப்பொறி போலத் தோன்றினாலும்கூட ஓரளவு நன்மை கிடைக்குமே என்பதுதான் நமது வாதம்.
இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 50% பேர் புகையிலைப் பயன்படுத்துவோராக இருக்கின்றனர். இவர்களில் சரிபாதி பேர் பெண்கள். புகையிலை என்பது பீடி, சிகரெட் மட்டுமல்ல. பான், குட்கா ஆகியவையும்தான். புகையிலை விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் புகையிலையால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளின் மருத்துவச் செலவுக்காக அரசு ஒதுக்கும் தொகை பல மடங்கு அதிகம்.
பான், குட்கா இரண்டும் புற்றுநோய் ஏற்படுத்தும் மூலக்கூறுகளை அதிகம் கொண்டிருந்தாலும், இவற்றை நீதிமன்றம் நேரடியாக, சட்டப்படி தடை செய்ய முடியவில்லை. ஏனென்றால், பாக்குடன் புகையிலையைக் கலப்பது உணவுக் கலப்படமாகக் கருதப்படுவதில்லை. பான், குட்கா இரண்டும் உணவுப் பொருள் அல்ல என்பதால் இந்த நிலை. ஆனால், இதன் மூலம் விளையும் தீங்குகளைக் கருத்தில் கொண்டு, பான், குட்கா ஆகியவற்றை எல்லா மாநிலங்களும் தடை செய்வது ஆரோக்கியமானதாக இருக்கும்
பதிவு செய்தவர் ah kdnl
on 1:01 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன