|

உண்ணாநிலைப் போராளிக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பு

ஜெனின்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பலஸ்தீன் கைதிகளுக்கு எதிராக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானமற்ற வன்முறைகளுக்குத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுமுகமாகப் பலஸ்தீன் கைதிகள் தொடர்ச்சியான உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தம்முடைய நியாயமான கோரிக்கைகளை ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் ஏற்கும் வரையில் தொடரும் பலஸ்தீன் கைதிகளின் இந்தச் சாத்வீகப் போராட்டம், உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிக்கக் காரணமாய் அமைந்துள்ளது. இதனால் பெரும் ஆத்திரமுற்றுள்ள ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம், உண்ணாநிலைப் போராளிகளுக்கு எதிரான மனிதாபிமானமற்ற நெருக்குதல்களைத் தொடர்ந்தும் அமுல்நடத்திவருகின்றது. அந்த வகையில், தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாய் நோய்வாய்ப்படும் பலஸ்தீன் கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குவது முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிடுமாறு கோரி, ஆக்கிரமிப்புச் சிறையதிகாரிகள் பலஸ்தீன் கைதிகளை மிருகத்தனமாக நடத்திவருகின்றனர். அண்மையில், நெகெவ் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உண்ணாநிலைப் போராட்டத்தினால் கடுமையான மார்புவலியால் அவதிப்படும் பலஸ்தீன் கைதி அய்ஸர் அல் அத்ராஷுக்கு சிறை நிர்வாகம் எத்தகைய மருத்துவ சிகிச்சையும் வழங்காமல் புறக்கணித்து வருவதோடு, அவரின் போராட்டத்தைக் கைவிடுமாறு பலவாறு நிர்ப்பந்தித்தும் வருகின்றது. இது குறித்துக் கருத்துரைத்துள்ள அய்ஸர் அல் அத்ராஷ், "என்னை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி சிறைச்சாலை மருத்துவப் பிரிவுக்குள் அழைத்துச் சென்ற சிறை அதிகாரிகள், அங்குவைத்து என்னை அப்படியே தூக்கி நிலத்தில் வீசியெறிந்தனர்" என்று தனது வழக்குரைஞரிடம் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர் Eshack on 1:39 AM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added