2:12 AM | பதிவு செய்தவர் ah kdnl
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கான பயன்படுத்துவோர் மேம்பாட்டுக் கட்டணம் (யுடிஎப்) 345 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு மே 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
விமானச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஏற்கெனவே விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் (ஏடிஎப்) செலுத்தி வருகின்றன. உள்நாட்டு விமானம் ஒவ்வொரு நடைக்கும் ரூ. 200-ம், சர்வதேச விமானங்கள் ரூ. 1,300-ம் செலுத்துகின்றன. இந்தக் கட்டணம் விமான நிலையம் அமைக்கப்பட்டதற்கான செலவுகள், பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்ய வசூலிக்கப்படுகிறது. விமான நிறுவனங்களிடம் இப்படிக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது. ஏனென்றால், இந்த விமான நிலைய விரிவாக்கத்தாலும், நவீன வசதிகளாலும் பயன்பெறுவோர் அவர்கள்தான்.
சாதாரணமாக, பேருந்து நிலையம் அமைக்கும்போதும்கூட, அந்தச் செலவுகளை ஈடுகட்ட பேருந்துகளிடம் ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு சிறிய தொகையைத் தொடர்புடைய உள்ளாட்சி வசூலிப்பது நடைமுறையில் இருக்கிறது. அதுவும்கூட மிகக் குறைவான தொகையாக - அதிகபட்சம் ரூ. 20 வரை இருக்கும். இதுவே நாற்கரச் சாலையில் பல நூறு ரூபாய் கட்டணம் என்றாகும்போது, பயணிகளின் மீதுதான் அந்தச் சுமை விழுகின்றது. விமானப் பயணிகளின் நிலைமையும் அதுவேதான். இனிமேல் விமானப் பயணிகள் உள்நாட்டுப் பயணம் என்றால் ரூ. 231 முதல் ரூ. 462 வரை கூடுதலாகவும் வெளிநாட்டுப் பயணம் என்றால் ரூ. 534 முதல் ரூ. 1,018 வரை செல்லும் தூரத்துக்கு ஏற்ப கூடுதலாகச் செலுத்த நேரிடும்.
விமான நிலையப் பராமரிப்புச் செலவில் 80 விழுக்காட்டைப் பயணிகள் தரும் கட்டணம் மூலமாகவும் 20 விழுக்காட்டை விமான நிறுவனங்கள் தரும் கட்டணத்தின் மூலமாகவும் ஈடு செய்ய நினைக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால், பயன்படுத்துவோர் மேம்பாட்டுக் கட்டணத்தின் மூலம் 20 விழுக்காட்டு செலவையும், விமான நிறுவனங்களின் மூலம் 80 விழுக்காட்டு செலவையும் ஈடுசெய்வதல்லவா முறையானதாக இருக்கும்?
விமானப் பயணிகள் அன்றாடம் பயணம் செய்வதில்லை. மேலும், இவர்கள் இந்த விமான நிலையம் வழங்கும் சேவையைப் பயன்படுத்திக்கொள்வது மிகமிகக் குறைவு. விமானங்கள் குறித்த நேரத்தில் வந்து செல்லுமேயானால், ஒரு பயணி விமான நிலையத்திற்குள் இருக்கும் நேரம் அதிகபட்சம் ஒரு மணி நேரமாகத்தான் இருக்கும். இந்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்காகக் குளிரூட்டு வசதி, தூய்மையான கழிவறை, ஓய்வறை அமைத்துத் தருவதற்காகவும் அதைப் பராமரிப்பதற்காகவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. ஆனால், விமான நிலையம் கட்டிய செலவையும் இவர்களிடம் கறந்துவிட வேண்டும் என்று நினைப்பது எந்தவகையில் சரி?
விமான நிறுவனங்களின் பயன்பாடு அப்படிப்பட்டதல்ல. விமானங்கள் வந்து போவதற்கான விமானப் பாதைப் பராமரிப்பு, அவர்களுக்குத் தனித்தனியான டிக்கெட் விநியோக அலுவலகங்கள், ஊழியர்களின் ஓய்வறைகள், சோதனைக்கான வசதிகள், சரக்குகளை ஏற்றி இறக்கப் பாதுகாக்க வசதிகள், பயணிகளை விமானத்திற்குக் கொண்டு செல்லும் பஸ்களுக்கான பாதைகள், விமானங்களை நிறுத்துமிடங்கள் என்று பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதுதானே முறையாக இருக்கும்?
இந்தக் கட்டணம் அரசுக்கோ, விமான நிலைய ஆணையத்துக்கோ போய்ச் சேருமா என்றால் அதுவும் இல்லை. தில்லி விமான நிலையத்தை நிர்வகிப்பது தில்லி சர்வதேச விமான நிலையம் (பிரைவேட்) லிமிடெட் எனும் தனியார் அமைப்பு. இதன் 54% பங்குகளை பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் வைத்துள்ளது. 26% பங்குகளை இந்திய விமான ஆணையம் வைத்துள்ளது. மீதமுள்ள 20 விழுக்காடு பங்குகளை மலேசியா ஏர்போர்ட், ஃபிராபோர்ட் ஏஜி ஆகியன தலா 10 விழுக்காடு வைத்துள்ளன. அதாவது, இதில் பெரும் பயன் காணப்போவது அந்தத் தனியார் நிறுவனம்தான்.
தில்லி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் மட்டும்தானே இது வசூலிக்கப்படுகிறது, மற்ற விமான நிலையங்களில் கிடையாதே என்று வாதிடலாம். இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களும், சென்னை உள்பட, இத்தகைய தனியார் அமைப்புகளின் கைக்கு மாறப்போகின்றன. அப்போது என்னவாகும்?
விமானத்தில் பறக்கிறவர்கள் வசதியானவர்கள், சராசரியாக சுமார் ரூ. 400 வரை அதிகம் செலவிடத் தயங்க மாட்டார்கள் என்று அரசும், தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனமும் கருதக்கூடும். ஆனால், இது தவறான முன்னுதாரணம்.
இதேபோன்று மெட்ரோ ரயில் கட்டணத்துடன் பயன்படுத்துவோர் மேம்பாட்டுக் கட்டணத்தைச் சேர்த்து வசூலிக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் வரும் பயணிகளிடம் பயன்படுத்துவோர் மேம்பாட்டுக் கட்டணத்தைச் சேர்த்து வசூலிக்கவும் நேருமெனில், நாமும் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
நாற்கரச் சாலைகள் தனியார்மயமானதால் சாதாரண மக்களை அவதிக்கு உள்ளாக்கிய அதே அரசு, தற்போது விமானப் பயணிகளிடமும் தன் திறமையைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. நாற்கரச் சாலைகள் அமைக்க முழுக்க முழுக்க இந்திய முதலீடுதான் பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமான சுங்க வசூல் 20 ஆண்டுகளுக்கு வசூலிப்பதற்கான அனுமதியை நமது ஆட்சியாளர்கள் தனியாருக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு போயிற்று என்று கேள்வி எழுப்பக் கூட மக்களாட்சி நடக்கும் சுதந்திர இந்தியாவில் நாதியில்லை. ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் இந்தக் கொள்ளையில் சம பங்கு இருக்கக்கூடும்.
சர்வதேச விமான நிலையம் என்று சொல்லியே திட்டத்தின் மதிப்பை எக்குத்தப்பாகக் கூட்டித் தங்களுக்குத் துணையாக நிற்கும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பில் இதனைப் பராமரிக்க விட்டுவிடுகிறார்கள். தனியார்மயத்தின் கோர முகம் வெளிப்படுகிறது. சுட்டிக்காட்டத்தான் நம்மால் முடியும். தட்டிக் கேட்க வேண்டியவர்கள் மௌனம் காக்கிறார்களே, என் செய்ய?