2:11 AM | பதிவு செய்தவர் ah kdnl
சென்னை கன்னிகாபுரத்தில் உள்ள வெங்கடேசபுரம் புதிய காலனி 3-வது தெருவில் இருந்த பொதுக்கிணறு ஒன்று மாயமாகி விட்டதாக அந்த பகுதி பொது மக்கள் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
அதில் கூறி இருப்பதாவது:-
கன்னிகாபுரம் பிரைட்டன்ஸ் மெயின் ரோடு அரசு ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு எதிரே நீண்ட காலமாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் இருந்தது. இதில் 80 அடி ஆழம் உள்ள கிணறும், பொதுக் கழிப்பிடத்துக்கான மோட்டார் பம்பு செட்டும் இருந்தது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அதை வாங்கியவர் மாநகராட்சி கழிப்பிடம் பொதுக்கிணறு ஆகியவற்றை மூடி மணல் மேடாக்கினார்.
தற்போது அங்கு புது வீடு கட்டி குடி இருக்கிறார். ஆதி திராவிடர் விடுதி மாணவர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த பொது கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தோம். கோடை காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் இங்குள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்துவோம். இந்த இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து விற்பனை செய்ததால், கழிவறை கிணறு அனைத்தையும் மூடிவிட்டு தனி நபர் வீடு கட்டி உள்ளார். எனவே நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த இடத்தை மீட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுக்கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். இப்படிக்கு பொதுமக்கள், கன்னிகாபுரம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவின் நகல்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர், மேயர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கன்னிகாபுரம் சென்று குறிப் பிட்ட இடத்தில் விசாரணை நடத்தினார்கள். இதில், அங்கு பொதுக் கழிப்பிடம் கிணறு, மோட்டார் பம்புசெட் முன்பு இருந்ததும், பின்னர் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்து விற்கப்பட்டதும் தெரிய வந்தது. தற்போது அந்த இடத்தில் புதிய வீடு மட்டும் உள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயார் ஆகி வருகிறார்கள்.
நிலத்தை ஆக்கிரமித்து விற்றவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை நகரிலேயே கிணறு மாயம் ஆனது குறித்து பொது மக்கள் கொடுத்த புகார் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.