4:31 PM | பதிவு செய்தவர் ah kdnl
ஆமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்ட புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மாஜிஸ்திரேட் கோர்ட் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த, 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின், பெரும் கலவரம் ஏற்பட்டது. குல்பர்க்கா சொசைட்டியில் நடந்த கலவரத்தில், 68 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி., இசான் ஜாப்ரியும் இந்தக் கலவரத்தில் இறந்தார். இந்த கலவரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 58 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறி, அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என, இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, குஜராத் கலவர வழக்கை விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, தன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாஜிஸ்திரேட் எம்.எஸ்.பாட், தன் உத்தரவில் கூறியதாவது: சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், நரேந்திர மோடி உள்ளிட்ட, புகார் பட்டியலில் உள்ள, 58 பேருக்கும், இந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான நகல்களை, தனக்கு அளிக்கும்படி ஜாகியா கேட்டிருந்தார். எனவே, 30 நாட்களுக்குள், இதுகுறித்த நகல்களை அவருக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி, தன் உத்தரவில் கூறினார்.