|

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க உஷார் டிப்ஸ்



மூன்று வருடங்களுக்கு முன்பு உலகம் எங்கும் மக்களை அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் உறுமத் தொடங்கிவிட்டது. புனே... ஹைதராபாத்...  பெங்களூரு என்று கொஞ்சம்கொஞ்சமாகப் பற்றிப் பரவி தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது.
 பன்றிக் காய்ச்சல் நமக்கும் வருமா; வந்தால் உயிருக்கே ஆபத்தா; வந்துவிட்டால் என்ன செய்வது?
''பயப்படவே வேண்டாம். பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்; வந்துவிட்டாலும், எளிதாகக்குணப்படுத்த முடியும்'' என்கிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியான டாக்டர் எம். ஆனந்த் பிரதாப்.
''பயம் தேவை இல்லை என்பது மக்களுக்கு தைரியம் அளிப்பதற்காகச் சொல்கிற வார்த்தைகளா?''
''இல்லை. இதற்கு முன்பு குளிர் காலங்களில்தான் பன்றிக் காய்ச்சல் பரவியது. ஆனால், இந்த முறை வெயில் காலத்தில் வந்திருக்கிறது. வெயில் காலத்தில் வைரஸால் அதிக நாட்கள் தாக்குப் பிடித்து வாழ முடியாது. இது ஒரு சாதகமான அம்சம். கடந்த முறை பன்றிக் காய்ச்சல் வந்தபோது மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகளைச் சேர்க்க இடமே இல்லை. ஆனால், இந்த ஆண்டு சென்னையைப் பொருத்தவரை ஒருவர்கூட உள் நோயாளியாக இன்னும் சேரவில்லை. பன்றிக் காய்ச்சல்பற்றிய விழிப்பு உணர்வு நிறைய ஏற்பட்டிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.''
'' '2009 எச்1 என்1 வைரஸ் காய்ச்சல்’ என்பதும் 'பன்றிக் காய்ச்சல்’ என்பதும் வேறுவேறா?''
''முதன்முதலில் 1918-ல் மெக்ஸிகோவில் கொசுக்களால் பன்றிகளிடம் இருந்து மனிதனுக்கு இந்தக் காய்ச்சல் பரவியதாக அறிவித்தார்கள். ஆனால், 2009-ல் பரவிய பன்றிக் காய்ச்சல், மனிதர்களிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது. இப்போது வந்திருப்பதும் மனிதர்களிடம் இருந்தே மனிதர்களுக்குக் காற்று மூலம் பரவும் தொற்றுநோய்தான். பன்றிக்கும் இந்தக் காய்ச்சலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால், இப்போது வந்திருக்கும் காய்ச்சலை '2009 எச்1 என்1 வைரஸ் காய்ச்சல்’ என்றே அழைக்கிறார்கள். முன்பு தாக்கிய பன்றிக் காய்ச்சலுக்கும் இப்போது வந்திருக்கும் காய்ச்சலுக்கும் காரணம் 'எச்1 என்1 இன்ஃப்ளுயன்ஸா வைரஸ்’ என்பதுதான் பொதுவான தன்மை.''
''சாதாரணக் காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்? எப்படி அடையாளம் கண்டுகொள்வது?''

''சாதாரண வைரஸ் காய்ச்சல் மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஆனால், பன்றிக் காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தீவிரமாகும். இருமல், தும்மல் அதிகமாக இருக்கும். தலைவலி, தொண்டை வலி, உடம்பு வலி, கண்களில் எரிச்சல் என்று பாதிப்புகள் தொடர்ச்சியாக வரும். சிலருக்கு இடைவிடாத வாந்தி, வயிற்றுப்போக்கும் வரலாம். இருமல் அதிகமாகி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இருமலை அலட்சியப்படுத்தினால், நுரையீரலின் தசைகள் ஆரோக்கியத்தை இழந்து சுருங்க ஆரம்பித்துவிடும். இதனால், சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு முழுமையாகச் சென்று சேராது. நாளடைவில் நுரையீரலின் தசைகள் இறுகி, 'நிமோனிக் கன்சாலிடேஷன்’ ( Pneumonic Consolidation)  என்ற நிலை ஏற்பட்டு நுரையீரல் கல்போல இறுகிவிடும். தசைகள் இறுகிப்போவதால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நெஞ்சு வலி வரும். எக்ஸ்ரே எடுத்துப்பார்க்கும்போதுதான் இது தெரியவரும். 'நிமோனிக் கன்சாலிடேஷன்’ என்ற இந்தக் கட்டத்துக்கு ஒருவர் சென்றுவிட்டால், அவரை மருத்துவமனையில் சேர்த்தே ஆக வேண்டும்.''
''வராமல் தடுக்கும் வழிகள் என்ன?''
''இருமல், சளி இருப்பவர்கள் இரண்டு மூன்று முறையாவது சோப் போட்டுக் கை கழுவ வேண்டும். நோய் உள்ளவர்களின் கை, கால், வாய் பகுதிகளை மற்றவர்கள் தொடக் கூடாது. சளி, இருமல் தொடர்ந்து இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சோதனையின் முடிவில் பாஸிட்டிவ் என்று வந்தால், சிகிச்சைக்காக உடனே அவரைத் தனிமைப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் வந்தவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்புவதும் சளி சிந்துவதும் கூடாது. வாஷ்பேசினில் எச்சில் துப்பினால், தண்ணீரால் வாஷ்பேசினை நன்கு கழுவிவிட வேண்டும். சளி சிந்திவிட்டுக் கை கழுவாமல் இருப்பதும் தவறு. முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடுகிற இடங்களுக்குச் சென்றால், அவரால் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகம். அதேபோல் நோயாளிகள் உபயோகப்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, நோயாளியின் எச்சில் பட்ட டம்ளர், தட்டு போன்றவற்றை மற்றவர்கள் தொடக் கூடாது.''
''எங்கு சிகிச்சை பெறலாம்?''
''எல்லா மருத்துவர்களிடமும் பன்றிக் காய்ச்சலைக் கண்டறிந்துகொள்ளவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் முடியாது. பன்றிக் காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை, அதற்கென்று உள்ள பிரத்யேகமான பரிசோதனைக் கூடங்களில் மட்டும்தான் பரிசோதனை செய்ய முடியும். அதேபோல, சிகிச்சையும் பிரத்யேகமான மருத்துவமனைகளில் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் என அரசு மருத்துவமனைகளிலேயே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதால், சிகிச்சையையும் அரசு மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஒருவேளை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பினால், பன்றிக் காய்ச்சலுக்கானச் சிகிச்சை அளிக்கப் போதுமான உபகரணங்களும், வசதிகளும், தகுதி பெற்ற மருத்துவர்களும் அங்கு இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டியது முக்கியம்.''
''கடந்த மார்ச் மாதத்தில் ஹைதராபாத்தில் 32 வயதான சாந்தி என்ற கர்ப்பிணி பலியாகி இருக்கிறார், சென்னையில் இரண்டு சிறுமிகளுக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு தப்பித்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. பன்றிக் காய்ச்சல் பெண்களைத்தான் அதிகம் தாக்குமா?''
''அப்படி இல்லை. பொதுவாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இது எளிதில் தாக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்துமா, கல்லீரல், நுரையீரல், ரத்த சம்பந்தமான  குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் கோளாறுகள், சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு வர சாத்தியங்கள் அதிகம். அதேபோல், பன்றிக் காய்ச்சல் இருப்பவர் உங்கள்  அருகில் இருந்தால், அது உங்களைத் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மற்றபடி இதற்கு ஆண், பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.''

போதுமான மாத்திரைகள் உள்ளன!
பன்றிக் காய்ச்சலை விரட்டப் போதுமான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாகச் சொல்லும் தமிழக அரசுப் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர்.டி.பொற்கைப் பாண்டியன், ''டாமிஃப்ளு மாத்திரைகள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் போதுமான அளவு இருப்புவைக்கப்பட்டு இருக்கின்றன. நோய்த் தடுப்பு வகையைச் சேர்ந்த இந்த மாத்திரை நோயாளிகளுக்கும், அவரது குடும்பத்தார் மற்றும் அவரோடு தொடர்பில் இருக்கும் நெருக்கமான நண்பர்களுக்கும் கொடுக்கப்படுகின்றன. பன்றிக் காய்ச்சல்பற்றித் தேவை இல்லாமல் நிறைய வதந்திகள் உலா வருகின்றன. இப்போது போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை'' என்று நம்பிக்கை ஊட்டினார்.

Courtesy : Doctor Vikatan

பதிவு செய்தவர் Yasar on 5:38 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added