ஹயாத்துஸ் ஸஹாபா - தொடர் -1
ஹயாத்துஸ் ஸஹாபா
வாசகர்களுக்கு:
நபிகளார் (ஸல்) அவர்களின் தோழர்களின் வாழ்வில் நடந்த
சம்பவங்களின் தொகுப்போ ஹயாத்துஸ் ஸஹாபா. அந்த உத்தம ஸஹாபாக்கள் தங்களது வாழ்க்கை நெறியாக பின்பற்றிய
நபிகளாரின் வழிமுறை அவர்களது வாழ்வில் ஒவ்வொரு கனங்களிலும் எவ்வாறு பிரதிபலித்தது, அதனை பிறருக்கும்
எவ்வாறு பயிற்றுவித்தார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் விவரிக்கின்றார் தொகுப்பாசிரியர்.
ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இத்தொகுப்பை இன்ஷா அல்லாஹ் தமிழ் வடிவமாக தொடர்ந்து தர
இருக்கின்றார் புதியதேச எழுத்தாளர் எஸ் எம் அவர்கள். வாசகர்கள்
படிப்பதோடு வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டுமாய் அன்பாய் வேண்டுகிறோம்.
(ஆ-ர்)
தொடர் - 1
தொழுகை
நபி (ஸல்)
அவர்களின் தொழுகை குறித்த ஆர்வமூட்டல்
உஸ்மான் (ரலி) அவர்களால் அடிமையாய் இருந்து உரிமை விடப்பட்ட ஹாரித் அவர்கள்
அறிவிக்கின்றார்கள், ஒரு முறை நாங்கள்
உஸ்மான் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகைக்கான அழைப்பு விடுக்க பள்ளியின் முஅத்தின் அங்கு
வந்தார்கள். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு
வரும்படி கூறினார்கள். அதில் ஒரு முத் அளவு தண்ணீர் இருந்தது. அதில் உஸ்மான் (ரலி)
அவர்கள் ஒழு செய்துவிட்டுச் சொன்னார்கள், இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் ஒழு செய்ய நான் கண்டிருக்கிறேன். பின்னர் கூறினார்கள், எவரொருவர் இவ்வாறு ஒழு செய்துவிட்டு பின்னர் அவர் லுஹர் தொழுகையை
நிறைவேற்றுகிறாரோ, அவருக்கு ஃபஜ்ர்
மற்றும் லுஹர் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அதன் பின்னர்
அவர் அஸர் தொழுகையை நிறைவேற்றுவாரேயானால், அவருடைய லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும்
மன்னிக்கப்படும்.அதன் பின்னர் அவர் மஃரிப் தொழுகையை நிறை வேற்றுவாரேயானால்,
அவருடைய அஸர் மற்றும்
மஃரிப் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அது போன்றே
அவர் இஷா தொழுகையை நிறைவேற்றுவாரேயானால், அவருடைய மஃரிப் மற்றும் இ;ஷா தொழுகைக்கு
இடையே உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அவர் அன்றைய இரவுப் பொழுதை
அடைந்து அதில் பாவம் செய்திருந்தாலும், பின்னர் அதிகாலைப் பொழுதை அடைந்து ஒழு செய்து பஜ்ர் தொழுகையை
நிறைவேற்றுவாரேயானால் அவருடைய இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைக்கு இடையே உள்ள பாவங்கள்
அனைத்தும் மன்னிக்கப்படும்.; பாவங்களை
துடைத்தெறிவதில் தொழுகை சிறந்து விளங்குகிறது.
உஸ்மான் அவர்களே! இவைகள் நல் அமல்கள் எனில், நிரந்தரமாக நன்மைகளை அள்ளித்தரும் நல் அமல்கள்
எவை என மக்கள் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், லாயிலாஹ இல்லல்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர், லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் என விடை
பகர்ந்தார்கள்.
அபூ உஸ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை அவர் ஸல்மான் (ரலி) அவர்களுடன் ஒரு
மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள். ஸல்மான் (ரலி) அம்மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை
பிடித்து அதிலுள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்து விழும் வரை குலுக்கினார்கள்.
பின்னர் அபூ உஸ்மானை நோக்கி, நான் ஏன் இவ்வாறு
செய்தேன் என்று என்னை நீர் கேட்க்கமாட்டீரா? என வினவினார்கள், அதற்கு அபூ உஸ்மான், ஏன் அவ்வாறு செய்தீர்கள்? எனக்
கேட்டார்கள். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் விடை பகர்ந்தார்கள். ஒரு முறை நான் நபி
(ஸல்) அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருக்கும் போது, நபிகளார் இதே போன்று செய்தார்கள். நபிகளார் ஒரு
மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை பிடித்து அதன் இலைகள் அனைத்தும் உதிரும் வரை
குலுக்கினார்கள். பின்னர் என்னிடம் கேட்டார்கள், ஸல்மானே நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று
கேட்க்கமாட்டீரா? என கேட்டார்கள்.
ஏன் அவ்வாறு செய்தீர்கள்? எனக் கேட்டேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு முஸ்லிம் சரியான முறையில் ஒழு செய்து பின்னர் ஐந்து வேளை தொழுகையையும்
நிறைவேற்றுவான் எனில் அவனது அனைத்து பாவங்களும் இம்மரத்தின் இலைகள் உதிர்ந்தது
போன்று நீங்கிவிடும் என விளக்கமளித்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குர்ஆனின் திருவசனத்தை ஓதினார்கள்..
பகலின் (காலை. மாலை ஆகிய) இரு முனைகளிலும் இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை
நிலைப்படுத்துவீராக. நிச்சயமாக நற்செயல்கள் தீச்செயல்களைப் போக்கிவிடும் -
(இறைவனை) நினைவு கூருவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். (ஹுத் : 114).
பதிவு செய்தவர் Ameer
on 8:24 AM. தலைப்பு
ஆன்மீகம்,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன