யூதர்களை பாதுகாத்த பிரஞ்சு முஸ்லீம் இமாம் பற்றிய திரைப்படம்
பாரீஸ், 25 மார்ச் 2012.
இரண்டாம் உலகப்போரின் பொது பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்திருந்த ஜேர்மனிய நாஜிப்படையினரால் யூதர்கள் வேட்டையாடப்பட்டனர். அப்பொழுது உயிருக்கு பயந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பெரிய மஸ்ஜிதில் அடைக்கலம் புகுவதை யூதர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்வாறு வருபவர்களுக்கு அம்மஸ்ஜித்தின் தலைமை இமாமாக பணிபுரிந்த பெங்ஹா பரீத் அடைக்கலமும் ஆதரவும் கொடுத்த சம்பவங்கள் தற்போது தெரியவந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார் அல்ஜீரிய யூதரான சலீம் ஹலிலி. 1920 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் பிறந்து பிரான்ஸ்ஸிற்கு குடிபெயர்ந்து ஜெர்மானியர்களுக்கு அஞ்சி பெரிய மஸ்ஜிதில் அடைக்கலம் புகுந்த யூதர்களில் ஹலிலியும் ஒருவர். அவருக்கு போர் முடியும் வரை மஸ்ஜிதிலேயே முஸ்லீம் என்ற போலி அடையாளத்துடன் பெங்ஹா பரீத் அடைக்கலம் கொடுத்தார். 1940 முதல் 1944 வரை மஸ்ஜிதிலேயே காலம் கழித்த ஹலிலி போர் முடிந்த பின்னர் மொராக்கோவிற்கு சென்று இசை பள்ளியையும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் கச்சேரிகளையும் நடத்தினார். பின்னர் ஹலிலி 2005 ஆம் ஆண்டு மரணமடைந்தார். சியோனிய எதிர்ப்பாளரான ஹலிலி தானும் தன்னுடனே பிரான்ஸ் மஸ்ஜிதில் அடைக்கலம் பெற்ற ஏராளமான யூதர்களும் தலைமை இமாமால் எவ்வாறெல்லாம் பத்திரமாக பாதுகாக்க பட்டோம் என்பதை தனது வாழ்நாளில் பலமுறை நினைவு கூர்ந்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹலிலியின் வாழ்க்கை வரலாறு “Les hommes libres” என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் வரும் ஏப்ரல் மாதம் இஸ்ரேல் உள்பட உலகெங்கும் திரையிடப்படுகிறது. இத்திரைப்படத்தில் யூதர்கள் அபயம் தேடிய பாரீஸின் பெரிய மஸ்ஜிதும் அதன் தலைமை இமாம் பெங்ஹா பரீத் அவர்கள் யூதர்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகளும் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் இறுக்கமான சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில் இப்படம் இவ்விரு சமூகங்களும் அமைதியான முறையில் வாழ்ந்திருக்கின்றனர் என்ற வரலாற்றை உணர்த்தும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் இஸ்மாயில் பரூக்கி. பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் கிழக்கு குடியிருப்பு பகுதில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள பெரிய மஸ்ஜித் முதலாம் உலக போரில் பிரான்சுக்காக தீரத்துடன் போரிட்டு வீர மரணமடைந்த முஸ்லீம் வீரர்களின் நினைவாக 1926 ஆண்டு பிரான்ஸ் அரசால் கட்டப்பட்டது. இமாம் பெங்ஹா பரீதின் அடகஸ்தலமும் அங்குதான் இன்றளவும் உள்ளது.
-avec-le-major-von-ratibor-(christopher-buchholz)-dans-le.jpg)