ராமர் சேது பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி:"ராமர் சேது பாலத்தை, தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க முடியுமா? இதுதொடர்பான தன் நிலையை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராமர் சேது பாலம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று நீதிபதி டாட்டூ தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, ""சேது சமுத்திர திட்டம் தொடர்பான, பச்சவ்ரி கமிட்டி அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிப்பதில், மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க முடியுமா? இதுதொடர்பான தன் நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ரவால், இந்தப் பிரச்னை தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துக்களைப் பெற்று, ஒரு நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும். எங்களின் உத்தரவுக்கு பதில் ஆவணம் தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை எனில், வழக்கின் வாதங்களின் அடிப்படையில் நாங்கள் தீர்ப்பு வழங்குவோம்.
மேலும், சர்ச்சைக்குரிய சேது சமுத்திர திட்டத்தை, ராமர் சேது பாலம் வழியாக நிறைவேற்றுவதற்குப் பதில், தனுஷ்கோடி வழியாக நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதா என, ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன்சிங்கால் நியமிக்கப்பட்ட, பச்சவ்ரி கமிட்டி அளித்த அறிக்கையையும், கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். இதை, ஆறு வாரத்திற்குள் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.