ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பிரதமருக்கு முதல்வர் ஜெ., கோரிக்கை
சென்னை:"ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க உள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்' என, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:
சேது சமுத்திர திட்டம் பற்றி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளதை அறிவீர்கள். வரலாற்று, தொல்லியல் மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க, ராம் சேது என்ற பழமையான அமைப்பில், ஆறு இடங்களில் வெட்டும், முந்தைய திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆடம் பாலம் எனப்படும் ராம் சேதுவை தேசிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தியும், அதை கையகப்படுத்தி பராமரிக்க வலியுறுத்தியும், 2007ல் நான் வழக்கு தொடர்ந்தேன். இந்த பாலத்தை சேதப்படுத்தத் தடை விதிக்கவும் கோரியிருந்தேன்.இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2008ல் மத்திய அரசால் பச்சோரி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையின் சுருக்கம், மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீதான கருத்துக்களை, தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் பரிசீலித்து, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு தன் கருத்தை தமிழக அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு, இம்மாதம் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இந்த இடத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது பற்றிய மத்திய அரசின் கருத்தை பெற்று 29ம் தேதிக்குள் (இன்று) தெரிவிக்குமாறு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் உள்ள முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்த இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பதாக, எவ்வித தாமதமுமின்றி சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் கருத்தை தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு இவ்விஷயத்தில் தன் நிலையை வெளிப்படுத்த, தனியாக ஒரு பதில் மனுவை தாக்கல் செய்யும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பதிவு செய்தவர் ah kdnl
on 8:59 AM. தலைப்பு
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன