அ.தி.மு.க., பிரமுகர் பள்ளியில் ரூ.1.5 கோடி வரை அதிக கட்டணம் வசூல்

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் வேல்முருகன். தேர்தலுக்குப் பின், அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். இவர், சென்னையில் நடத்திவரும் லியோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 44 ஆயிரத்து 650 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் திருப்பித்தர வேண்டும் என, கட்டண நிர்ணயக்குழு தலைவர் சிங்காரவேலு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பள்ளி, அண்ணாநகர் மேற்கு பகுதியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக வேல்முருகன் இருக்கிறார். இந்த பள்ளி, நடப்பு கல்வியாண்டில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக, கட்டண நிர்ணயக் குழுவிற்கு புகார் வந்தது. பள்ளியின், பெற்றோர்-மாணவர் நலச் சங்கத்தினர், இந்தப் பிரச்னையை குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, முழுமையாக விசாரித்து, அறிக்கை தர, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்திற்கு, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் உத்தரவிட்டார். இயக்குனர் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், லியோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆய்வுசெய்து, அதிக கட்டணம் வசூலித்ததை உறுதி செய்துள்ளார்.இவர், மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு அனுப்பிய அறிக்கையில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பள்ளி நிர்வாகம் கூடுதலாக வசூலித்த கட்டண விவரங்களை பட்டியலிட்டுள்ளார். அதன்படி, ஒரு கோடி 36 லட்சத்து 44 ஆயிரத்து 650 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதே பட்டியலை, கட்டண நிர்ணயக் குழுத் தலைவருக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அனுப்பியுள்ளார்.
இது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி கூறும்போது, ""அதிக கட்டணம் வசூலித்தது உண்மைதான் என்பது, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை மற்றும் அறிக்கை மூலம் தெரிய வந்தது. அதையடுத்து, இத் தகவலை, கட்டண நிர்ணயக் குழுத் தலைவருக்கு தெரிவித்தோம். தற்போது, பெறப்பட்ட அதிக கட்டணங்களை, சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் திருப்பித்தர நடவடிக்கை எடுக்குமாறு, கட்டணக் குழுத் தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்,'' என்றார்.
மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கருப்பசாமி, 29ம் தேதி, பள்ளிக்கு நேரில் சென்று, இரு தரப்பினரிடமும் பேசி, அதிகமாகப் பெறப்பட்ட பணத்தை, பெற்றோர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.