இலங்கைக்கு எதிராகப் பேசியவர்களின் கையை உடைப்பேன்: அமைச்சர்

கொழும்பு, மார்ச் 24: ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராகப் பேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் கைகால்களை உடைப்பேன் என்று இலங்கை மக்கள் தொடர்பு அமைச்சர் மெர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து இலங்கையில் கிரிபாத்கோடா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மெர்வின் சில்வா பேசியது:
ஜெனீவாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் 3 பேரும் இலங்கைக்கு எதிராக பொய்யானத் தகவல்களைக் கூறியுள்ளனர். அவர்களைப் போன்று வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு எதிராகப் பரப்புரைகளை மேற்கொண்ட பத்திரிகையாளர்களின் கைகால்களை உடைப்பேன்.
நான் விடுத்த மிரட்டலால்தான், சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறினார்'' என்றார்.
இதற்கிடையே இலங்கைக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளான பாக்கியஜோதி சரவணமுத்து, நிமால்கா பெர்ணாண்டோ, சுனிலா அபேய்சேகரா ஆகியோரது செயல் தேசவிரோதமானது என்று ராஜபட்ச அரசு கூறியுள்ளது குறிப்படத்தக்கது.