|

ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்: 14 மந்திரிகள் மீது புகார் கூறினார் கெஜ்ரிவால்


புதுடில்லி: ""லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு இருந்தால், சரத் பவார், கிருஷ்ணா, சிதம்பரம் உள்ளிட்ட, மத்திய அமைச்சர்கள் 14 பேருக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கும்,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.



பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, பிரதமர் தலைமையில் சமீபத்தில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, டில்லியில் மீண்டும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். டில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இந்த உண்ணாவிரதம் நேற்று நடந்தது. உண்ணாவிரதப் பந்தலுக்கு செல்வதற்கு முன், அன்னா ஹசாரே நேற்று காலை, காந்தி நினைவிடத்துக்குச் சென்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதன்பின், காலை 11 மணிக்கு உண்ணாவிரதத்தை துவக்கினார்.



உண்ணாவிரத மேடையில், ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு கால தாமதம் செய்து வருகிறது. லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தால், தற்போதைய மத்திய அமைச்சர்கள் 14 பேர் உட்பட, 25 அரசியல்வாதிகளுக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கும். சரத் பவார், கிருஷ்ணா, சிதம்பரம், பிரபுல் படேல், கபில் சிபல், கமல்நாத், பரூக் அப்துல்லா, அஜித் சிங், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஸ்முக், அழகிரி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த பட்டியலில் அடக்கம்.



யார் தண்டிப்பது? இது போன்ற நபர்களை யார் தண்டிப்பது? டில்லி போலீசாரா, சி.பி.ஐ., அதிகாரிகளா. யாருக்கும் இது பற்றிய விவரம் தெரியாது. ஏனென்றால், லோக்பால் மசோதாவை, இவர்கள் ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள். தற்போதுள்ள எம்.பி.,க்களில் 162 பேர் மீது, குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 20 பேருக்கு எதிராக, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஊழல் எம்.பி.,க்கள்: லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், ராஜா, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள் மீது, ஊழல் வழக்குகள் உள்ளன. இது போன்ற சூழலில், லோக்பால் மசோதாவை எப்படி நிறைவேற்றுவர். மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டால், கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகிய எடியூரப்பாவை, மீண்டும் முதல்வராக்குவதற்கு பா.ஜ., மேலிடம் முயற்சிக்கிறது. முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோர் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன.



பதவி நீக்கம்: எம்.பி.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் இந்த வழக்குகள் முடிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தபட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பார்லிமென்டை அவமதிப்பதாக என் மீது சிலர் புகார் கூறுகின்றனர். பார்லிமென்டை யார் அவமதிப்பது? ஒருவர் மீது, ஒருவர் மைக்ரோ போன்களை வீசி எறிகின்றனரே. நான் எந்த தவறும் செய்யவில்லை. எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயார்.



ஆபாச படம்: கர்நாடகா சட்டசபையில் அமர்ந்து கொண்டு, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஆபாசப் படம் பார்க்கின்றனர். சரத் பவார் தாக்கப்பட்டபோது, அதுகுறித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, பார்லிமென்டில் விவாதம் நடந்தது. ஊழலுக்கு எதிராக போராடிய நரேந்திரகுமார் கொல்லப்பட்டபோது, அதுகுறித்து பார்லிமென்டில் யாரும் விவாதிக்கவில்லை. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.



முன்னதாக, இணையதளத்தில் கருத்து தெரிவித்திருந்த கெஜ்ரிவால், "அரசியலமைப்பு சட்டம், மூன்று ஆண்டுகளில் இயற்றப்பட்டது. ஆனால், 44 ஆண்டுகள் ஆகியும், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகளால், ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஊழலுக்கு எதிராக போராடிய 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லோக்பால் மசோதா அமலுக்கு வந்திருந்தால், இவர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பர்' என, தெரிவித்துள்ளார்.



"ஊழலுக்கு எதிராக புகார் கொடுப்போரை காப்பாற்றாவிட்டால் பெரிய போராட்டம்': ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதத்தை துவங்குவதற்கு முன் அன்னா ஹசாரே பேசியதாவது: ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோரையும், ஊழலுக்கு எதிராக புகார் கொடுப்பவர்களையும், சமூக விரோதிகள் கொலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 25க்கும் மேற்பட்டோர், இதுபோல் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில், மத்திய பிரதேசத்தில், கிரானைட் கடத்தல்காரர்களை தடுக்க முயற்சித்த, ஐ.பி.எஸ்., அதிகாரி நரேந்திரகுமார் கொல்லப்பட்டார். இதுபோல் கொல்லப்படுவோரின் குடும்பத்தினர் கதறி அழுதபோதும், மத்திய அரசு, எதுவும் பேசாமல், ஊமை போல் இருக்கிறது.



போராட வேண்டிய தேவை: ஊழலுக்கு எதிராக போராடுவோரை பாதுகாக்க, மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுவோரை பாதுகாக்க, ஜன் லோக்பால் மசோதாவில் சில விதிமுறைகளை குறிப்பிட்டிருந்தோம். அந்த மசோதாவை நிறைவேற்றாமல், அரசு கால தாமதம் செய்கிறது. இதுவரை கறுப்புப் பணத்திற்கு எதிராக யோகா குரு ராம்தேவும், லோக்பாலை வலியுறுத்தி நானும் தனித்தனியாக போராட்டம் நடத்தினோம். இனி ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டம் ஒன்றாக நடைபெறும்.



எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும்: ஐ.மு., கூட்டணியில் உள்ள ஊழல் கறை படிந்த 14 அமைச்சர்கள் மீதும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார். அன்னா ஹசாரே நேற்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது போராட்டமாகும்.



நிரம்பி வழிந்த மைதானம்: நேற்று விடுமுறை தினம் என்பதால், உண்ணாவிரதப் பந்தலில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பலர், காந்தி குல்லா அணிந்தும், கைகளில் தேசியக் கொடியை ஏந்தியும் வந்திருந்தனர். உண்ணாவிரதப் பந்தலில், அவ்வப்போது, "வந்தே மாதரம்' கோஷம் எழுப்பப்பட்டது. மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி நரேந்திரகுமாரின் குடும்பத்தினர் உட்பட, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் பலரும் வந்திருந்தனர். ஊழலுக்கு எதிராக போராடி, உயிர் தியாகம் செய்தவர்களை பற்றிய குறும்படமும் திரையிட்டு காட்டப்பட்டது. காங்., தலைவர் சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் இருந்தும், ஏராளமானோர் வந்திருந்தனர்.

பதிவு செய்தவர் ah kdnl on 9:27 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added