|

மாது,மது அடுத்தது என்ன? - கர்நாடக அமைச்சர் ரேணுகாச்சார்யா ...-.


பெங்களூர்: கலால்துறை விதிமீறல் குறித்து கர்நாடக அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது லோக் ஆயுக்தா போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட விவகாரத்தில் பல சுவராசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா. கடந்த வாரம் தமக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று 2-வது முறையாக கட்சித் தலைமைக்கு எதிராக எடியூரப்பா போர்க்கொடி தூக்கியிருந்தார். இதற்காக தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 55 பேரை சொகுசுப் பேருந்தில் வளைத்துப் போட்டு பெங்களூர் புறநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் பதுக்கி வைத்திருந்தார்.

இவர்களை பதுக்கி வைத்தால்மட்டும் போதுமா? குளிர்விக்க வேண்டாமா? ஸ்காட்ச் போன்ற வெளிநாட்டு மதுபாட்டில்களுக்கு எதற்காக சொந்த காசில் செலவு செய்ய வேண்டும்? இதற்காக கலால் அமைச்சர் ரேணுகாச்சார்யா செய்த ஒரு வேலைதான் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

உல்லாசவிடுதியில் எம்.எல்.ஏக்கள் பதுக்கி வைக்கப்பட்ட அதே நாளில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு கலால்துறையினர் தேவையில்லாமல் ரெய்டு நடத்தி வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளதாக சில "பார்" உரிமையாளர்கள் புகார்களைத் தட்டிவிட்டனர்.

எப்ப..எப்ப..என்று காத்திருக்கும் லோக் ஆயுக்தா போலீசாரும் அதிரடி சோதனைகளை நடத்தினர். இத்தகைய சோதனையின் போது கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது பற்றி லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்தனர்.

ரொம்பவே உஷாராகிப்போன துணை ஆணையர் மோகன்குமார், ரெய்டு போன இடத்தில் சிக்கியவை என்று கூறியுள்ளார். சளைத்தவர்களா லோக் ஆயுக்தா போலீசார்! அப்படியா.. ரெய்டில் சிக்கிய பாட்டில்களுக்கான லிஸ்ட் எங்கே? என்று கேட்க மோகன்குமார் முழித்தபடி லிஸ்டையும் கொடுத்திருக்கிறார்.

அப்போதுதான் உண்மையை மோகன்குமார் கக்கியுள்ளார். பதுக்கி வைத்திருக்கும் பாட்டில்கள் அனைத்தும் அமைச்சர் ரேணுகாச்சார்யாவுக்காகத்தான் என்றிருக்கிறார்.

அமைச்சருக்கு எதற்கு இத்தனை பாட்டில்கள்?

பெங்களூர் புறநகரில் உள்ள கோல்டன் பாம் உல்லாச விடுதியில் எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்களை குளிர்விப்பதற்காக, அமைச்சர் ரேணுகாச்சாரியாவின் உத்தரவின் பேரில் கலால்துறை அதிகாரிகள் சில பார்களில் ரெய்டு என்ற போர்வையில் உள்ளே நுழைந்து பாட்டில்களை அள்ளிவந்திருக்கின்றனர்.

அமைச்சரிடம் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த நிலையில் பார்களின் புகாரின் பேரில் லோக் ஆயுக்தா போலீஸ் நுழைந்து அள்ளிச்சென்றுவிட்டது.

இப்போது துணை ஆணையர் மோகன்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுவிட்டார். போலியாக ரெய்டு நடத்தி வெளிநாட்டு மதுபாட்டில்களைப் பதுக்கியதற்காக கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது விதிமுறைகளை மீறிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரேணுகாச்சாரியா ஏற்கனவே நர்ஸ் ஒருவருடன் உல்லாசமாக இருந்த படங்கள் வெளியானதில் பரபரப்பானவர் என்பது குறிப்பிடத்தக்ககது.

மாது,மது அடுத்தது என்ன?விரைவில்.....

பதிவு செய்தவர் Yasar on 4:49 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added