|

சவுதியில் பெண்களின் தனி நகரம்...!


ரியாத்: பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர்.
இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது.
செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.
இப்போது செளதி அரேபியர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், பெண்கள் மத்தியில் பணியாற்றும் ஆர்வத்துக்கு இனியும் தடைபோட விரும்பாத செளதி அரசு, அவர்களுக்கென தனி நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
அதே போல பெண்கள் மட்டுமே பணியாற்றும் தனி தொழிற்சாலைகளைக் கட்டவும் செளதி திட்டமிட்டுள்ளது.
இதற்காக செளதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹபுப் நகரத்துக்கு சுமார் 500 மில்லியன் ரியால்களை அந் நாட்டு அரசு வழங்கவுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சுமார் 5,000 பெண்கள் பணியாற்றும் ஜவுளி ஆலைகள், மருந்துத் தயாரிப்பு ஆலைகள், உணவுப் பதப்படுத்தல் ஆலைகளை இந்த நகராட்சி கட்டவுள்ளது.
கடந்த ஆண்டு செளதியின் பெண்கள் உள்ளாடை விற்பனை நிலையங்களில் பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதே போல அழகுப் பொருட்கள் விற்பனை மையங்களிலும் பெண்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் முதலாக செளதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு முதல் செளதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களும் வாக்களிக்கலாம் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பதிவு செய்தவர் Yasar on 11:52 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added