|

அம்மா?வின் அடுத்த திட்டம்...!?


சென்னை: தமிழகத்தில் உள்ள இந்து மத ஏழை எளியவர்களில் புனித யாத்திரை மேற்கொள்ளும் 500 பேருக்கு, ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜாதி மதங்கள் பாரோம் என்ற பாரதியின் கூற்றுப்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாக கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு, முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழகத்தை சேர்ந்த 250 இந்துக்கள், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்கள் என்று மொத்தம் 500 பேருக்கு ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு (2012-13) மானசரோவர் புனித பயணத்திற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றுவர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான ரூ.1 லட்சத்தில் பயண செலவில், ரூ.40,000 வீதம் 250 நபர்களுக்கென ரூ.1 கோடியும், முக்திநாத் புனித பயணத்திற்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு உத்தேச செலவான ரூ.25 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரம் வீதம் 250 யாத்ரிகர்களுக்கு ரூ.25 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த யாத்திரைக்கான அரசு மானியம் பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையால் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும். இதில் கிடைக்க பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளை விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.
அரசின் இந்த நடவடிக்கைகள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் கனவு, குறிப்பாக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் கனவு நனவாகிட பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்தவர் Yasar on 4:39 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added