வேடிக்கை பார்த்தது போதும்!
இந்தியாவின் வடகிழக்கு மூலையில் போடோ பழங்குடியினத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் கடந்த ஒரு வார காலமாகவே நீடித்து வருகிறது. கலவரத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே வருகிறது.
பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம். ஆனால், மத்திய, மாநில அரசுகளால் இந்தக் கலவரத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.
போடோ பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் நடைபெறுவது இது நான்காவது முறை. 1952, 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பல மாதங்கள் நீடித்த முந்தைய கலவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.
இப்போது நான்காவது முறையாக இந்த இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இதுவரை 44 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.
தற்போதைய கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மாநில அரசு என்பது வெளிப்படை. ஜூன் 30-ம் தேதி, ஒரு முஸ்லிம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், அதற்கு போடோ பழங்குடியினர் காரணம் எனக்கூறி, ஊர்வலம் நடத்தியதும் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து, காமதபூர் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 2 போடோ இளைஞர்கள் ஜூலை 5-ம் தேதி பதிலடியாகக் கொல்லப்பட்டவுடனேயே அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். களத்தில் இறங்கியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது. அதன் விளைவாக, ஜூலை 19-ம் தேதி மேலும் 4 போடோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே மேலும் 3 பேர் கொலை. கலவரம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது.
போடோ பழங்குடி மக்கள், அசாம் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகளில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். தேயிலைத் தோட்டங்கள் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறத் தொடங்கியபோது, இங்கு பல்வேறு துணைத்தொழில்களுடன் அசாம் மாநிலத்துக்கு வந்த வங்க மாநிலத்தவர் சொத்துகள் வாங்குவதும், நிறுவனங்கள் அமைப்பதும் நடந்தன. இதனால், போடோ பழங்குடியினர் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர்.
தேயிலைத் தோட்டத்தில் வேலை தேடி வங்காளமொழி பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் வங்க தேசத்திலிருந்து ஊடுருவினர். எல்லை கடந்து வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடியது. இவர்களைக் கணக்கெடுக்கவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் என்று பட்டியலிடவோ அசாம் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் போடோ இனத்தவரைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமானது. இவர்களை வாக்கு வங்கிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்தான் இதற்குக் காரணம்.
இந்நிலையில், "அசாம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்லிக்கொள்கிறது சீனா. இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு மாவோயிஸ்ட்டுகள் மறைமுகமாக ஊக்கம் தந்து, ஆயுதங்களும் தந்துகொண்டிருக்கிறார்கள்.
கடந்த மே மாதம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பேட்டியில், "உல்பா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டார். இதை அசாம் முதல்வர் தருண் கோகோய் மறுத்தார். "உல்பா-வை ஆயுதங்களால் பலப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பெயர் வெளிவர விரும்பாத மத்திய உளவுத் துறை அதிகாரி கூறியதாகப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளிலும்கூட, உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் மியான்மரில் மறைந்து வாழ்வதாகவும், மாவோயிஸ்ட்டுகள் உல்பாவுக்கு சீன ஆயுதங்களை வழங்கி, அவர்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் எழுதின. ஆனால், மத்திய அரசு இத்தகைய கவலைதரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இதுவரை நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் தீவிரவாதிகளோ அல்லது நவீன ஆயுதங்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் கையாளும் கத்தி போன்ற சாதாரண ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இந்தக் கலவரங்கள் பொருளாதார சமன்குலைவால் நேரிட்டவை என்றுதான் கருத வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இருப்பினும், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்கும் தீவிரவாதிகள், மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கலவரத்தைத் தூண்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மக்களை மக்களுடன் மோதிச் சாகச் செய்வதைவிட வேறு என்ன பாதகத்தை தீவிரவாதம் உண்டுபண்ண முடியும்?
வேண்டுமென்றே தொடர்ந்து சில போடோ பழங்குடிகளைக் கொன்று, முஸ்லிம்கள் மீதான கோபத்தை வெடிக்கச் செய்யும் உத்தியாக இது ஏன் இருக்கக்கூடாது? மத்திய அரசின் புலனாய்வுத் துறை இது பற்றியும் யோசிக்க வேண்டாமா?
கலவரம் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனேயே அங்கே ராணுவம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கலவரம் மிகப் பெரியதாக வெடித்த பிறகுதான் ராணுவம் அங்கே சென்றுள்ளது. இதை வெறும் இனக்கலவரமாகக் கருத முடியவில்லை. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் புரிதல் இல்லாமல், இந்த விவகாரத்தை அணுகினால் தீர்வு கிடைப்பது அரிது.
அரசியல் ஆதாயத்துக்காகவும், தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வங்க தேச அகதிகளை அதிக அளவில் அசாமில் குடியேறச் செய்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவின் குறுகிய கண்ணோட்டம்தான் இன்று ஓர் இனக்கலவரமாக வெடித்து, தீவிரவாதிகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைக் களமிறக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கும் என்பது மட்டும் உறுதி!
பதிவு செய்தவர் ah kdnl
on 11:46 AM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன