|

என்ன செய்யப் போகிறோம்?

உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளை (ஜூன் 5) முன்னிட்டு, புதுதில்லியில் பல்லுயிர்ப் பெருக்க விழிப்புணர்வு ரயிலை தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும்போது, மறந்து போய்விட்ட செய்தி ஒன்று மனதை நெருடியது- "தில்லி மெட்ரோ ரயிலுக்காக 29,390 மரங்கள் வெட்டப்பட்டன!' இந்த அறிவியல் ரயிலின் பெட்டிக்குள் சுற்றுச்சூழல் துறையின் விழிப்புணர்வுப் பதாகைகள் நிச்சயமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். "உங்கள் குழந்தைகளுக்குப் பசுமை மரங்களையும் தூய குடிநீரையும் மறுக்கப் போகிறீர்களா?' என்ற கேள்வியை ஒவ்வொரு பார்வையாளரிடமும் அந்தப் பதாகை கேட்கும். தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இந்தப் பதாகையின் முன் நின்றபோதும் இதே கேள்வி கேட்கப்பட்டிருக்கும். புதுதில்லியில் இந்த அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்ட போதிலும், 10,000-க்கும் மேலான மரக்கன்றுகள் நடப்பட்டன. யமுனா மற்றும் ஆரவல்லி பகுதியில் பல்லுயிர்பெருக்கப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. தில்லி முதல்வர் கூறுவதைப்போல, பசுமைப்போர்வை தில்லியில் 300 சதுர கிலோமீட்டருக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும்கூட, இழந்த மரங்களை மீட்டெடுக்க முடியாது. இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சுழல் பாதிப்பு மாறுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். புதுதில்லியில் இந்த அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டதற்குக் காரணம் ஷீலா தீட்சித் மட்டுமே அல்ல. நகர் வளர்ச்சி, போக்குவரத்துத் தேவை என்று எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. யார் முதல்வர் பொறுப்பில் இருந்தாலும் இதேதான் நடந்திருக்கும். ஆகவே, சுற்றுச்சூழல் பிரச்னையைப் பொருத்தவரை ஒரு தனிநபரைக் குற்றம் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் குற்றவாளியாக, பொறுப்பேற்கத்தான் வேண்டும். இந்த நிகழ்வு ஏதோ, புதுதில்லியில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது என்பதல்ல. எல்லா நகரங்களிலும் வளர்ச்சி, போக்குவரத்து மேம்பாடு என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சிறுநகரங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நெடுஞ்சாலைகள் நாற்கரச் சாலைகளாக மாறியபோது பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நாம் இழந்த மரங்கள் எத்தனை? மரங்களைக் கணக்கு வைத்து வெட்டினோமா என்றால் இல்லையே. நகரங்களில் சாலையை அகலப்படுத்தினால் அதற்கு முதல் பலி, இருபது ஆண்டுகள் வயதுள்ள மரங்கள்தான்! பள்ளி, அலுவலக வளாகங்களில் இருக்கும் மரங்களும்கூட மெல்ல, மெல்ல ஒவ்வொன்றாக வெட்டப்படுகின்றன. கூடுதல் கட்டடங்களுக்காக, அல்லது வாகன நிறுத்தமிடத்துக்காக, பெரும்பாலான சம்பவங்களில் கட்டடத்தின் கம்பீரத்தை (? )மரம் மறைத்துவிடுவதாகக்கூறி வெட்டுகிறார்கள் அல்லது மரத்தைச் சுற்றி சிமென்ட் தளம் போட்டு, வேர்களுக்கு மழை நீர் கிடைக்காதபடி செய்கிறார்கள். மரங்களை வெட்டுவதென்றால் வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எந்த விதிமுறைகளையும் மக்களும் மதிப்பதில்லை. அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் மதிப்பதில்லை. சடசடவென முறிந்து கொண்டே இருக்கின்றன மரங்கள். ஒவ்வொரு நாளும் அவை முறியும் ஓசை கேளாமல் ஆதவன் மறைவதில்லை. உங்கள் குழந்தைகளுக்குப் பசுமை மரங்களையும் தூய குடிநீரையும் மறுக்கப் போகிறீர்களா? என்ற பதாகையை குழந்தைகள் ஏந்திவர ஊர்வலம் நடத்துவதைக் காட்டிலும், இந்தக் குழந்தைகளைக்கொண்டே மரங்களை வளர்க்க ஏன் முயலக்கூடாது? அமெரிக்காவில் போனி பிளான்ட் என்ற நிறுவனம் அனைத்து பள்ளி மாணவர்களையும் வீரிய முட்டைகோஸ் பயிரிடச் சொல்கின்றது. இந்த முட்டைகோஸ் ஆள் உயரம் வளரக்கூடியது. இதனைச் சிறப்பாக வளர்க்கும் மாணவ மாணவியருக்கு மாகாண அளவில் போனி விருதும், 1,000 டாலர் கல்வி உதவித்தொகையும் தருகின்றது. ஒவ்வொரு பள்ளி மாணவனும் ஒரு மரம் வளர்க்க மரக்கன்றுகளைக் கொடுக்கலாம். சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்துக் காட்டும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் கொடுக்கலாம். ஓரளவு நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று, நட்டு வைத்து அதை மேலும் வளரச் செய்யலாம். விழிப்புணர்வு ஊர்வலம், ரயில், கருத்தரங்கு இதன் செலவுகளைவிட இந்த மாணவர்களுக்குத் தரப்படும் உதவித்தொகை பெரிய செலவாக இருக்காது. குழந்தைகளும் இது தனது மரம் என்ற உணர்வோடு இருப்பார்கள். இன்னொரு மரத்தை வெட்டும்போதும், தான் ஒரு மரம் வளர்க்கப் பட்ட பாடும், அது பட்டுப்போனபோது அடைந்த வருத்தமும் மனக்கண் முன் தோன்றும். எவ்வளவு பெரிய மரம் என்றாலும், ஜப்பான் போன்ற நாடுகளில், அதை ராட்சத கிரேன்கள் மூலம் வேருடன் எடுத்துப் போய், மாற்றிடத்தில் பள்ளம் தோண்டி அங்கே அந்த மரத்தை வைக்கிறார்கள். ஆனால், நாம் வெட்டுகிறோம். ஏனென்றால், மரத்தால் பணம் கிடைக்கிறதே! ÷விரிவடையும் நகரங்கள், வளர்ந்து வரும் பொருளாதாரம், உயர்ந்துவிட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் இவை எல்லாமே யதார்த்தங்கள். மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு இவையெல்லாம் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. எல்லாம் சரி. ஆனால், இதன் விளைவாக அதிகரித்து வரும் கழிவுகளை நாம் எங்கே கொண்டு போய் கொட்டுவது? நகர்ப்புற நாகரிக மனிதர்களின் சுகவாசத்தின் விளைவாக உருவாகும் கழிவுகளை நிரப்பும் குப்பைத் தொட்டியாகத் தங்கள் கிராமங்கள் மாற்றப்படுவதை கிராமங்களில் வாழ்பவர்கள் இனியும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையே, என்ன செய்யப் போகிறோம்? ஒருபுறம் குடிநீர்த் தேவை அதிகரித்திருக்கிறது என்றால், இன்னொருபுறம் கழிவுநீர் உற்பத்தி அதிகரித்து வருகிறதே... கழிவுநீர் கலந்த குடிநீர்தான் கிடைக்கும் என்கிற நிலைமை ஏற்பட்டால் என்ன செய்யப் போகிறோம்? சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. வருங்கால மனிதகுலத்தின் திண்டாட்டத்தைப் பற்றிய முன்னறிவிப்பு!

பதிவு செய்தவர் ah kdnl on 12:30 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added