12:29 PM | பதிவு செய்தவர் ah kdnl
ஓபலாபுரம் கனிமச் சுரங்க முறைகேட்டில், சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்குவதற்காக, முதல் கூடுதல் சிபிஐ நீதிபதி பட்டாபி ராமாராவ் ரூ.10 கோடி லஞ்சம் வாங்கினார் என்பதில் அனைவரும் அதிர்ச்சி அடையக் காரணம், நீதிபதி லஞ்சம் வாங்கினார் என்பதால் மட்டும் அல்ல; ஜாமீன் வழங்க ரூ.10 கோடியா என்பதுதான்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் சமீபத்திய சில நீதிமன்றத் தீர்ப்புகளும், நீதிபதிகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் அமைந்துள்ளன என்பதுதான் வேதனையானது.
எல்லாத் துறைகளிலும் இருப்பதைப்போல சில கறுப்பு ஆடுகள் நீதித்துறையிலும் இருப்பது என்பதில் வியப்பொன்றும் இல்லை. நீதிமன்றங்களில் இடைக்காலத் தடை பெறும் விவகாரங்களில் முறைகேடுகள் மேலதிகமாக நடப்பதாக எல்லோராலும் பேசப்பட்டு வந்தது. இடைக்காலத் தடை அளவுக்கு ஜாமீன் வழங்குவதில் முறைகேடு பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. அதுவும் இப்போது தகர்ந்துவிட்டது.
தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பட்டாபி ராமாராவ், இந்த வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமிக்கு ஜாமீன் மறுத்தபோதுதான் நீதியின் பாரபட்சம் அப்பட்டமாகத் தெரிந்தது. சிக்கிக்கொண்டுவிட்டார்.
சமூகத்தில் பணம் வைத்திருப்போர், அதிகாரத்தில் இருப்போரின் துணையோடு சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துவிடும் முயற்சிகள்தான் இத்தகைய ஊழலுக்கு ஊற்றுக்கண். ஜனார்த்தன ரெட்டியிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது. ஆகவே, அவர் அவரது உயரத்துக்கு ஏற்பப் பேரம் பேசுகிறார் என்றுதான் இந்தச் சம்பவத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் வருவது மட்டுமல்ல, இந்த வழக்கையே பிசுபிசுத்துப் போகச் செய்வதற்கு ரூ. 60 கோடி திட்டம் தீட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாவதைப் பார்க்கும்போது, பணம் பாதாளம்வரை பாயும் என்பது நிஜம்தான் போலிருக்கிறது.
நீதித்துறை இந்த அளவுக்கு மோசமாகப் போனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு மிக மோசமாக இருப்பது முதல் காரணம். அரசியல்வாதிகளால் பட்டியலிடப்படுவோர்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். ஜாதியக் கட்சிகளின் தோற்றமும், கூட்டணி நிர்பந்தங்களும், அரசியல்வாதிகளின் அளவுக்கதிகமான பேராசையும் நீதித்துறையின் நேர்மையான நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை வெளியில் சொல்லாவிட்டாலும் ஒவ்வொரு வழக்குரைஞரின் மனசாட்சியும் ஆமோதிக்கும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போல நீதிபதிகளும் நீதித்துறை தேர்வாணையத்தால் நியமிக்கப்பட வேண்டும் என்பது இன்னும் கோரிக்கை அளவிலேயே இருக்கிறது. நீதிபதிகளையும் பொறுப்பேற்புக்கு ஆளாக்கும் சட்ட மசோதா இன்னமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்படவில்லை.
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் அரசு வழக்குரைஞர்களுக்கு எவ்வாறு கட்சிச் சாயம் பூசப்படுகிறதோ அதேபோன்று, நீதிபதிகளிடத்திலும் அரசியல் சாய்வு இருக்கிறது என்பதால் வாதங்களிலும், தீர்ப்புகளிலும் அதன் நிழல் படிகின்றது என்கிற குற்றச்சாட்டுகளையும் மறுப்பதற்கில்லை.
இரண்டாவதாக, கீழமை நீதிமன்றத் தீர்ப்புகள், இடைக்காலத் தடை, ஜாமீன் போன்றவை சட்டத்துக்குட்பட்டு இல்லாமையும், நீதிபதியின் தன்னிச்சையான போக்கும், வழக்கில் அதிக கவனம் செலுத்தாததும் தெரியவரும்போது, மேலமை நீதிமன்றங்கள் அவற்றைக் கண்டிக்கவே செய்கின்றன. மேலமை நீதிமன்றங்களால் தொடர்ந்து பலமுறை கண்டனத்துக்கு உள்ளான கீழமை நீதிபதிகள் பதவி உயர்வு பெற்று உயர் நீதிமன்ற நீதிபதிகளான சம்பவங்கள் ஏராளம் ஏராளம். அரசியல் தலையீடு இல்லாமல் இது எப்படிச் சாத்தியம்?
சில நீதிபதிகள் தீர்ப்புகளில் பாரபட்சம் காட்டி, அதனால் பணம் சம்பாதித்துள்ளனர் என்று பேசப்படும்போது, அதன் உண்மையை அறிந்து, அத்தகைய நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்யவும், அத்தகைய நேர்வுகளில் உண்மையை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவும் நீதித்துறை தயங்குகிறது. ஒரு நீதிபதி பல வழக்குகளில் கவனக்குறைவாக அல்லது பாரபட்சமாகச் செயல்பட்டுள்ளதாக மேலமை நீதிமன்றங்கள் கண்டிப்பு தெரிவித்திருந்தால், அதற்குக் காரணமான கீழமை நீதிமன்ற நீதிபதியின் பணிப்பதிவேட்டில் அதனைப் பதிவு செய்து, அவரது பதவி உயர்வு தடுக்கப்படவும், அல்லது மிகமோசமான சம்பவங்களில் அவரைப் பணிநீக்கம் செய்வதும் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே நீதித்துறையில் நீதியின் ஒளி இருக்கும். இல்லையென்றால் நீதிதேவனின் மயக்கம் நீடிக்கும்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மருமகன் சொத்து சேர்த்தது குறித்தும், தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் சேர்ந்த சொத்து என்பதும் வழக்குப் பதியப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் நீதிபதிகளைக் கொண்டுவரக்கூடாது என்று அச்சத்துடன் குரல் கொடுக்கும் அளவுக்கு தனக்கொரு நீதி, அடுத்தவனுக்கு ஒரு நீதி என்கிற நிலைமை தொடர்ந்தால் நீதிமன்றங்களும் தீர்ப்புகளும் சந்தேகத்துடன்தான் பார்க்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு வழக்கில் வாதத்திறமையுள்ள வழக்குரைஞர் யார் என்று விசாரிக்காமல், "வழக்கு எந்த நம்பர் கோர்ட்டில் வருகிறது, அந்த நீதிபதிக்கு நெருக்கமான வழக்குரைஞர் யார்?' என்று விசாரிக்கும் நிலைமை ஏற்படுமானால், எங்கு கோளாறு இருக்கிறது என்பதைப் புரிந்து அதை நீக்க வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.