12:39 AM | பதிவு செய்தவர் ah kdnl
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கடைத்தெரு அருகில் உள்ள மஸ்தான் பள்ளித்தெருவில், இஸ்லாமியருக்குச் சொந்தமான மசூதியின் சுற்றுச்சுவரை இடித்த, அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர் ராஜாவை மன்னார்குடி டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
மன்னார்குடி, மஸ்தான் பள்ளித்தெருவில் உள்ள பழமையான மசூதியின் சுற்றுச்சுவரை, நேற்றுக்காலை 10 மணியளவில் 19வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணதாசன், அவரது நண்பர் ராஜா ஆகியோர் இடித்து தள்ளினர்.
இதுகுறித்து மன்னார்குடி டி.எஸ்.பி., அன்பழகனிடம் மசூதி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், கவுன்சிலர் கண்ணதாசன், ராஜா ஆகிய இருவரையும் டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையில் போலீஸார் கைது செய்தனர். இத்தகவலை அறிந்த முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், திருவாரூர், நாகூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய கமிட்டியினர் திரண்டனர். பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.