|

நீதி போதனைக்கு என தனிப் பாடம்: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:நீதிபோதனைக்கு என பள்ளிப் பாடத் திட்டத்தில் தனியாக ஒரு பாடத்தை உருவாக்குவது பற்றியும், வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது பற்றியும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி. காசிநாத பாரதி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
 
 
சென்னையில் தனது வகுப்பாசிரியையை மாணவனே கத்தியால் குத்திக் கொன்றது, தங்கள் வகுப்புத் தோழியை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது, மது பாட்டிலை இடுப்பில் மறைத்துச் சென்றபோது பாட்டில் வெடித்ததில் திருவாரூரில் பள்ளி மாணவன் உயிரிழந்தது போன்ற பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் நடந்துள்ளன. மாணவர்களின் சூழ்நிலை மட்டும் இதற்கு காரணமல்ல. பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை பாடங்களை நடத்தாததும் முக்கியக் காரணம்.
 
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது நீதிபோதனைக்கென தனி வகுப்பு நடந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு இயந்திரத்தை உருவாக்குவது போன்ற மன நிலையில்தான் இன்றைய மாணவர்கள் கல்வி நிலையங்களில் உருவாக்கப்படுகின்றனர்.
 
மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரம் முழுவதும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்துப் பள்ளிகளுக்கும் மே முழுவதும் விடுமுறை என அறிவிக்கப்பட்டாலும்கூட, அந்த மாதத்திலும் பல நாள்கள் வகுப்புகள் நடக்கின்றன.
மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இது தவிர ஏராளமான பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்களைக் கொண்ட நூலகங்கள் இருந்தபோதிலும், மாணவர்களை நூலகங்களுக்குள் அனுமதிப்பதில்லை.
அதேபோல் இன்றைய ஆசிரியர்களில் பலரும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகத்தான் ஆசிரியப் பணியைக் கருதுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்கள், மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வருகின்றன.
 
இந்த நிலையெல்லாம் மாற வேண்டுமானால் மாநிலத்தில் உள்ள ஓராசிரியர், இரண்டாசிரியர் பள்ளிகளை ஒழிக்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு ஆசிரியர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பதற்கான நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. எனினும், அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
 
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ரூ.10 கோடி கல்வி வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. எனினும் அந்தத் தொகையை கல்வித் துறை உரிய முறையில் பயன்படுத்தவில்லை.
இந்தக் குறைகளையெல்லாம் குறிப்பிட்டு இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரி கடந்த மார்ச் 1-ல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கல்வித் துறைச் செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினேன். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிபோதனைக்கென தனிப் பாடம் உருவாக்குவது உள்பட எனது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் காசிநாத பாரதி கோரியிருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து உரிய முடிவினை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

பதிவு செய்தவர் Ameer on 1:37 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added