கானல் நீராக' மாறும் சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திரம் திட்டத்திற்கான மாற்றுப்பாதை ஆய்வில், பச்சோரி கமிட்டி ஆர்வம் காட்டாததால், தென் மாவட்ட கனவுத்திட்டம் "கானல்நீராகி' வருகிறது.
இந்தியாவின் கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்த "சேது சமுத்திரம் திட்டத்தை' செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. 1955ல் நேரு பிரதமராக இருந்த போது, ராமசாமி முதலியார் தலைமையிலான கமிட்டி இதற்காக ரூ.998 லட்சத்தில் திட்ட மதிப்பு தயார் செய்தது. அதன் பின், 1983ல் இந்திரா பிரதமராக இருந்த போது, லட்சுமி நாராயணன் கமிட்டி ரூ.282 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்தது. இருந்தும் திட்டம் தொடங்கப்படவில்லை. ரூ.2,420 கோடியில் சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, மதுரையில் 2005 ஜூன் 2ல் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, கடல் ஆழப்படுத்தும் பணி தொடங்கியது. பாக்ஜலசந்தி வரை பணிகள் முடிந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் பணி தொடங்கிய போது, "ராமர் பாலம்' சர்சை எழுந்தது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், பணி நிறுத்தப்பட்டது.
"யார் மனதையும் புண்படுத்தாமல்; மாற்றுப்பாதையில் பணியை தொடர," கோர்ட் வலியுறுத்தியது. அதன் படி, இயற்கை ஆர்வலர் பச்சோரி தலைமையில், சுற்றுச்சூழல் நிபுணர் சக்கரபத்தி, கடலியல் நிபுணர் எஸ்.ஆர்.ஷெட்டி, நிலவியல் நிபுணர்கள் எஸ்.கத்திரோலி, டி.ஆர்.ராவ், மண்ணியல் நிபுணர் டி.என்.டஜல் ஆகியோர் அடங்கிய ஆறு பேர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. சிறப்பு உறுப்பினர்களாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் சேர்க்கப்பட்டனர். தனுஷ்கோடி வழியாக மாற்றுப்பாதைக்கு ஆய்வு மேற்கொள்ள இக்குழு முடிவு செய்தது. ஆனால் பணி தொடங்கவில்லை. முயற்சியும் எடுக்காமல் இருந்தனர். குறிப்பிட்ட நாளில் அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்தியும், பச்சோரி கமிட்டி அமைதி காத்தது. கமிட்டியின் நடவடிக்கைகள், தமிழகத்தில் உள்ள அதன் உறுப்பினர்களுக்கே தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தவறிய கமிட்டி, இயற்கை இடர்பாடுகளை காரணம் காட்டியது. "அறிக்கையை மார்ச் 2012ல் அளிக்க,' கோர்ட் அறிவுறுத்தியது. இம்முறையும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இத்தனைக்கும், கடந்த ஆண்டு மன்னார் வளைகுடாவில் மாற்றுப்பாதை ஆய்வு நடந்தது. இருந்தும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஆச்சரியமாக உள்ளது. தொடர்ந்து அவகாசம் கேட்கின்றனர். தாமதத்திற்கான காரணமும் சரிவர தெரியவில்லை. கடந்த ஆண்டு பெயரளவில் தான் ஆய்வு நடந்ததாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மாற்றுப்பாதை ஆய்வில் பச்சோரி கமிட்டிக்கு ஆர்வம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலை தொடர்ந்தால், தென்மாவட்டத்தின் கனவு திட்டமான "சேது சமுத்திரம்', கானல் நீராக மாறிவிடும்.
பதிவு செய்தவர் ah kdnl
on 2:20 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன