9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார்? அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை காரணமாக ஏற்கனவே தத்தளித்து வந்த பொதுமக்கள், தற்போது மின் கட்டண உயர்வால் நொந்து போயுள்ளனர்.
மின் வாரியத்தின் வருவாயைப் பெருக்க, வருடம் ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்தாமல், அரசியல் ஆதாயத்திற்காக ஒன்பது ஆண்டுகள் நிறுத்தி வைத்துவிட்டு, தற்போது, 37 சதவீத கட்டண உயர்வை திடீரென அறிவித்து, தங்களை பலிகடா ஆக்க அரசு முயற்சிப்பது நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர். பஸ் கட்டணம், பால் விலை உயர்வு போன்றவற்றால் தடுமாறிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மிரட்டும் வகையில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தொழில் துறை, வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என, பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து, மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வீட்டு உபயோக மின் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கான மின் கட்டணம், "ஷாக்' அடிக்கும் வகையில் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு, முதல் 100 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு, 85 பைசாவில் இருந்து, ரூ.1.10 ஆகவும், 100 முதல், 200 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.1.50லிருந்து, 1.80 ஆகவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 201 யூனிட்டிலிருந்து, 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.3.50 எனவும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.5.75 எனவும் அபரிமிதமாக கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளது. விளக்குகளுக்கு மட்டும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்த காலம் மாறி, இன்று ஒவ்வொரு பணிக்கும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர தமிழக அரசே, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, கலர் "டிவி' என மின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலான பொருட்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது. இதனால், மின் தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீடுகளில், 500 யூனிட்டுகளுக்கு (இரு மாதங்கள்) அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படும் நிலையில், அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ஒரு மடங்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாகவும், அதை மீட்டெடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டு தவறு: ஆனால், ஒரே ஆண்டில் மின் வாரியம் இவ்வளவு நஷ்டத்தை சந்திக்கவில்லை. 2003ம் ஆண்டிலிருந்து மின் வாரியம் படிப்படியாக ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மின் வாரியம் உயர்த்தியிருக்க வேண்டும். இதர மாநிலங்களில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. மின் வாரியத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல முறை அறிவுறுத்தியும், ஓட்டு வங்கி பறிபோய்விடும் என்ற ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து அமைந்த அரசுகள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மின் வழங்கலில் சீர்திருத்த நடைமுறைகள் மாற்றப்படவும் இல்லை. தற்போது மாற்றப்பட்டதும் கட்டணச் சுமையும் அதிகரித்தது. அரசின் இந்த செயல்பாட்டால், தற்போது ஒரே நேரத்தில் பொதுமக்கள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. விவசாயம், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு அரசு மானியம் தந்து அவர்களை காப்பாற்றுவது போல், மின் கட்டண உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர குடும்பங்களை பாதுகாக்க, அரசு மானியம் வழங்க முன்வர வேண்டும். அதன் மூலமே, பெருவாரியான நடுத்தர குடும்பங்கள் துயரில் இருந்து மீள வழி வகை செய்யப்படும். இதற்கு மத்திய ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி பெறுவதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம். ம.பி.,யில் கூட வரும், 10ம் தேதி மின் கட்டண உயர்வு அமலாகிறது. அங்கே ஆண்டுதோறும் கட்டண உயர்வு மதிப்பீடு செய்யப்படுவதால், இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு மட்டும் சலுகை தர, அம்மாநில முதல்வர் முன்வந்திருக்கிறார். ஏற்கனவே விவசாயிகளுக்கு தரப்படும் சலுகையுடன் இது கூடுதலாகும். அதே போல், மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில், தொழிற்சாலைகளுக்கு அதிகம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
பதிவு செய்தவர் ah kdnl
on 2:18 PM. தலைப்பு
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன