அணு உலை பற்றிய கேள்விகளும் பதில்களும்
உலகெங்கும்
மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின்
காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை
சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத்
தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச்
சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச்
செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து,
நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல்
மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல்,
எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு
நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின்
உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி
தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.
யுரேனியம்
போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும்
கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக்
கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப்
பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?
இல்லை.
சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும்
பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன. அதன் மூலம்
மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும். அந்த
மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.
3.
கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?
கூடங்குளம்
அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின்
அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம்
எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது சுமார்
2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20
மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு,
அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து
நீர்
பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில்
பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம்
அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன்,
புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation)
ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட்
சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.
4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?
கண்டிப்பாகத்
தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த
கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு
பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு,
புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
இரண்டாவது
- கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம்
என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய
நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில்
பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது
என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும்
கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம்
ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.
மூன்றாவது
- விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய
அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணு உலையின் சிறிய விபத்தே
மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில்
இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும். நாம் கற்பனை
செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.
நான்காவது
- சுற்றுப்புற சீர்கேடு. அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக
இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள்
அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும்.
கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு,
அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும்
கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு
கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன்,
அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.
ஐந்தாவது
- பாதுகாப்பு. ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு
குண்டுக்குச் சமமானது. தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ
தாக்கப்படும் அபாயம் உள்ளது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி
நிம்மதியாக வாழ முடியும். அவ்வாறு தாக்கப்பட்டால்
அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் பாதுகாப்புக் கருதி
அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ
முடியாமல் இடர்ப்பட நேரிடும்.
5.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?
கண்டிப்பாக இல்லை. முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்
மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)
பொதுவாக
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில்
65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு
அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை
மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
மாநிலங்கள்
தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும்
மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம்
ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில்
வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.
ஆனால்
1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக்
சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின்
மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு
அனுமதி
வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள்
கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின்
தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.
எடுத்துக்காட்டாக
1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத்
தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார்
தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆனால் அருகிலுள்ள
என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும்
நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
மேலும்
தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது
மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி)
நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும்
திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார்
முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா.
வீடுகளுக்கு
எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி)
நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு
இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு
விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு
ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த
நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.
நெய்வேலியிலிருந்து
ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும்
மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும்.
தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின்
உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி
வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில்
மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.
6.
இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும்
காரணம் என்கிறீர்கள். ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது
மக்கள் தானே. இப்போது கூடங்குளத்திலிருந்து வரும்
மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?
கூடங்குளம்
அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான். இரண்டாவது அணு
உலை செயல்படத் துவங்கிய
பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும். இதுவரை இந்தியாவின் அணு
உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை. அணு உலைகளின்
உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான். ஒரு வேளை 1,000
மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு
வெறும் 280 மெகாவாட் மட்டுமே. இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு
(transmission) 30 விழுக்காடு
போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும். அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக
வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே. வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை
என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு
மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே. கூடங்குளம் அணு உலை
திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது
காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.
7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானிகளோ
பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?
அணு
உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால்
தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும்
கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள்
கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத
பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை.
அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள்
வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும்
மேற்பட்ட மக்கள்
வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள்
ஏற்படும்.
மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர,
அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?
பாதுகாப்பு
அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை.
மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
நிர்வாகத்தின்
அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித
ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும்,
கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து
கொண்டார்கள்.
9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?
முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல்
ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க
வேண்டும்.
மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?
ஆமாம். நிச்சயமாக.
முதலில்
அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால்
செய்யப்படவில்லை.
அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற
இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள்
மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய
முடியும்!
11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்!
ஆமாம்.
அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை
அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும்.
ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற
எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.
12. எரிமலைப்
பாறைகளா?
ஆமாம்!
கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை
அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல்
அடித்தளத்தை அமைத்தனர்.
மேலும்
பூ மியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான்
அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில்
வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு
தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
பூ
மியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின்
மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக
வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும்
குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.
14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன?
இரண்டாவதாக
இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு
குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால்
கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல்
தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே
கண்டுபிடித்திருக்கலாம்.
மேலும்
மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில்
உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல்
குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும்
கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும்,
அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை
ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.
இதுபோக
அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும்
கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும்
மிக முதன்மையான காரணிகளாகும்.
15.
ஆனால்
முன்னால் குடியரசுத் தலைவர் , அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பூகம்பம்,
சுனாமி ஆகியவை வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும், அணு உலை மிகவும்
பாதுகாப்பானது என்றும் சொல்லியிருக்கிறாரே?
ஒரு
சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல. அவர்
வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology),
கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர்
அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும்
என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத்
தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை
ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து
சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.
16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய
அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.
இந்தியா
நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர்
அப்துல்கலாம். அணு உலையைத் திறப்பதற்காக
உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச்
சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல
சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது
சொல்லியிருக்கிறாரா?
சிங்கள
அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே
உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர். இலங்கை அரசை பொருளாதார
ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர்
தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள
அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நடிகை அசின்
செய்தால் தவறு. அப்துல்கலாம் செய்தால் சரியா?
இலங்கையில்
ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள்
கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு
அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்? இதுதான் அவரது இன
உணர்வு, மனித நேயம். அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி
நம்புவது?
17. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள். ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
முதலில்
இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுனசாகரில் தான் அமைவதாக இருந்தது.
ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கர்நாடகாவில் கைக்கா என்ற
இடத்தை முடிவு செய்தனர் . இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை.
பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு
மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத்
தள்ளிவிடப்பட்டது.
18.
ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு
திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள்
என்கிறீர்களா?
ஆமாம். தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளித்தவாயர்கள்.
ஆனால்
கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா,
கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு பாலாறை,
காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும்
இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக்
கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப்
பெரிய கொடுமை. இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக
கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன. சிங்கள
சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
19. சரி! இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?
நிறைய
உள்ளன. இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய
குறைபாடுகளைக் கொண்டது. இதை நாம் சொல்லவில்லை. சப்பானில் புகுசிமா அணு
உலை வெடித்தற்குப் பின் இரசிய அதிபர் தம் நாட்டு
விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார்.
அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத்
தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
குறிப்பாக
இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம்
மிகவும் பலவீனமாக உள்ளது. கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப்
பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல்
நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை. இதைத் தவிர
வேறு எந்த நீராதாரமும் இல்லை.
1989ம்
ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும்
அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும்
நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய
போதும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.
ஒரு
வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல்
நாட்டிலிருந்து தான்
தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும். அணுஉலை வளாகத்தில் சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே
தாக்குப்பிடிக்கும். இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என
இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு
வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது
அணு உலை
நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது.
சுனாமி
போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த
அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள்
திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக்
கொண்டுள்ளனர். பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான
உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான்
நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக
வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
அதுபோன்று
5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று
சொல்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர்.
அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன
விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.
20. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள். இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே
இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?
அதுதான்
வேதனையான செய்தி. இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு
கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை. இதற்காக மறுக்க
முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது,
வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி பி.என். கிர்பால், மத்திய அரசின்
கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத்
தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர்
மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும்
அபராதமும் விதித்தார். இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.
21. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து
ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?
விமான
விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக்
கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும்
நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால்
அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர்
கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப்
பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை
இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.
விபத்து
ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த
பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5
ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள்
தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. மொத்தத்தில் தென்தமிழகம்
மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.
கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.
22. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன. விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?
யார்
சொன்னது? இரசியாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு
உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக்
கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக
2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய
அரசே உறுதி செய்துள்ளது.
மேலும்
செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில்
அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று
புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. மீன்கள், மிருகங்கள், மரங்கள்
தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின.
சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு
விசயம் என்பதை இரசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார்.
ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு
முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று
வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள்
உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக
மாறியது.
சமீபத்தில்
சப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை
தொலைக்காட்சியில்
நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல்
எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த
புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும்
45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
23.
ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று
சொல்லமுடியுமா? மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன?
மூன்றுமைல்
தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில்
விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட
புதிதாகத் திறக்கவில்லை.
எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை.
சப்பானில்
புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன.
கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.
செர்மனி
2022ம்
ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது.
ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை
உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.
24.
மற்ற
நாடுகளை விடுங்கள். இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன.
குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?
கல்பாக்கம்
அணுஉலை ஒன்றும்
பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170
மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம்
மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது
சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு
ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999
மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர்
கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று
பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய
இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கல்பாக்கம்
அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே
104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில்
குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும்
வாய்ப்பு உள்ளது.
இவை
ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால்
கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள்
இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன்
விளக்குகிறார்கள்.
அதே
போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி
படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில்
பிடிபடும் மீன்களில்
கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989
செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு
ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் .
1995
பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு
ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280
மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான
பொய்.
25. ஒருவேளை விபத்துக்கள் நடந்தால் நம் அரசுகள் நம்மைக் காப்பாற்றாது என்று கூறுகிறீர்களா?
நிச்சயமாக,
இந்த அரசுகள் போன 2004
சுனாமியின் போது எப்படி நம்மைப் பாதுகாத்தன என்பதைக் கண் முன்னால்
பார்த்தோம். சுனாமி இந்தோனேசியாவைத் தாக்கி 5 மணி நேரம் கழித்தே இந்தியக்
கடலைத் தொட்டது. இதை மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் விட்டதோடு
பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருந்ததுதான்
இந்தியாவின் நிலை. இந்தியாவின் பேரிடர் மேலாண்மை உலகறிந்த செய்தி.
இந்திய
அரசின் மக்கள் மீதான அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டு போபால் சம்பவம்.
போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் யூனியன்
கார்பைடு (எவெரெடி) நிறவனத்திலிருந்து மீதைல் ஐசோ
சயனைடு என்ற விசவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த 5000க்கு மேற்பட்ட
மக்கள் உடனடியாக இறந்து போனார்கள். பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 20,000
பேர் இறந்து போனார்கள்.
காங்கிரசு
தலைமையிலான
அரசு உடனே என்ன செய்தது தெரியுமா, அந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர்
அண்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி டெல்லி வழியாக அமெரிக்காவிற்கு
பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 26 வருடங்கள் நடத்திய வழக்கில் அண்டர்சன்
ஆஜராகவே இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னரும் குற்றவாளிகள் யாரும்
தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு முழுமையாக
வழங்கப்படவில்லை. இதுதான் இந்திய அரசு மக்களைக் காக்கும் லட்சணம்.
இன்னும்
தமிழர்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் இந்தியாவிற்கு
கொண்டாட்டமாகிவிடும். கேரள மீனவர்கள்
சுடப்பட்டதால் இத்தாலி கப்பல் கேப்டனை கைது செய்பவர்கள், கப்பலை
சிறைபிடிப்பவர்கள் இராமேசுவரம் மீனவர்கள் சுடப்படும் பொழுது எப்படி
நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.
26. இப்போது சமீபத்தில் விபத்து நட்டஈடு சட்டமெல்லாம் நிறைவேற்றினார்களே! அதில் கூட நியாயம் கிடைக்காதா?
அந்த
சட்டமே அவர்களாகப் போட்ட சட்டமில்லை. வெளிநாட்டு
நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதற்காக அரசு
நிறைவேற்றிய சட்டம். இதன் மூலம் இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு 2500
கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும்
அதிகபட்சமாக 2500 கோடியைக் கொடுத்துவிட்டு அந்த வெளிநாட்டு நிறுவனங்கள்
ஒதுக்கிக் கொள்ளும். மீதியை நாம்தான் சுமக்க வேண்டும்.
கூடங்குளம்
அணுஉலை விசயத்திலோ இன்னும் கொடுமை. விபத்து நடந்தால் அந்த இரசிய நிறுவனம்
எந்தப் பொறுப்பும் ஏற்காது. எல்லாம் இந்திய அரசுதான் ஏற்கவேண்டும் என்ற
ஒப்பந்தம் உள்ளது.
அது சரி! விபத்தே நடக்காது என்றால் நட்ட ஈடு சட்டம் எதற்கு என்பதுதான் விளங்கவில்லை.
27. இப்படியெல்லாம் பயந்தால் வரலாறு படைக்க முடியுமா? நாடு முன்னேறுவது எப்படி?
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. கண்டிப்பாக
பெரு விபத்துக்கள் நடக்கும், பேரழிவுகள் ஏற்படும் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வது முட்டாள்தனம்.
நாட்டு
முன்னேற்றத்திற்கு மின்சாரம் அவசியம். இதில் மாற்றுக்
கருத்துக்கு இடமில்லை. ஆனால் மின்சாரம் தயாரிக்க பல நல்ல வழிகள் உள்ள போது
அணு உலை மூலமாகத்தான் மின்சாரம் தயாரிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு
நாட்டு முன்னேற்றம் காரணம் அல்ல.
28. அப்படியானால் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க என்னதான் வழி என்று கேட்கிறார்களே?
அன்னியச்
சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்,
அவர்களுக்கான தடையற்ற மலிவு விலை மின்சாரம், உலக மயம் தோற்றுவிக்கும்
நுகர்பொருள் கலாச்சாரம், கேளிக்கை விடுதிகள், முழுக்கக் குளிரூட்டப்பட்ட
மால்கள், நகரிய வேடிக்கைகள் என்று பெரும்பான்மை மக்களாகிய நம்மைச்
சுரண்டும், புறந்தள்ளும் ஒரு பாதையை வளர்ச்சி என்று சொல்லிக்
கொண்டிருப்பவர்கள், அதற்கு மின் வினியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனையை
நம்மிடமே கேட்பது
அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என மாற்றுவழிகள் குறித்து நாம்
அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.
29. பிற வழிகளில் மின்சாரம் தயாரித்தால் அதிக
செலவாகும். அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே?
மின்சாரம்
தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிடவேண்டும். அணுஉலை
கட்டுவதற்கான செலவு,
அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும்
கணக்கில் கொள்ள வேண்டும். இந்த உலைக்காக அரசு வழக்கும் 200 விழுக்காடு
மானியத்தையும் கணக்கிட்டோமானால் அணு மின்சாரத்தின் விலை மிகவும் அதிகம்.
மேலும்
இந்த அணு உலைகள் மற்ற திட்டங்களைப் போல் காலங்காலமாக பலன்தரக் கூடியவை
அல்ல. இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை
மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்.
அணு
மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு
நாளைக்கு 32லட்சம் லிட்டர் உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப்
பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான்
கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான்
கொட்டப்படுகிறது. கடலில்
கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4
டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க
நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும்
சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக
ஆபத்தானது அணுக்கழிவுகள். அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறோம் என்பதை
அணுஉலை நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
30. அணுஉலையின் விஞ்ஞானி சிரிகுமார் பானர்ஜி பேசுகையில் அணுக்கழிவு சிறிய அளவில் தான் இருக்கும். அதை மறுசுழற்சி செய்து
ஆபத்தில்லாததாக மாற்றி எங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துக்கொள்வோம் என்று கூறினாரே?
இதுதான்
அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். அவர் சொன்ன சிறிய அளவு என்பது எவ்வளவு
தெரியுமா? சுமார் 30 முதல் 50 டன்கள். 30 ஆண்டுகளில் 1500 டன்கள் வரை இந்த
அணுக்கழிவுகள் உருவாகும். உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இந்த
அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இரகசியமாக வேற்று நாட்டு கடலுக்குள்ளும்,
மலைகளுக்குள்ளும் புதைத்து வருகிறார்கள்.
அணுக்கழிவுகளை
ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றை பெட்டகங்களில் இட்டு பூமிக்குள்
புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.
கூடங்குளம்
அணுஉலையின் கழிவுகள் முதலில் இரசியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று
கூறினார்கள். பின் கல்பாக்கம் எடுத்துச் செல்வோம் என்று கூறினார்கள்.
இப்போது கூடங்குளத்திலேயே புதைப்போம் என்கிறார்கள். மிகப்பெரிய
கதிரியக்கத்தை
உருவாக்கும் அணுக்கழிவுகளை நம் நிலத்தில் புதைத்து நஞ்சாக்குவதை நாம்
எப்படி அனுமதிப்பது. பானர்ஜி சொன்னது மாதிரி புளுட்டோனியத்தை ஒரு உருண்டை
உருட்டி அவர் வீட்டில் வரவேற்பறையில் வைக்கட்டும். பிறகு நாமே அணுஉலைகளை
வரவேற்போம்.
31. அப்படியானால் 13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலையை மூடுவதுதான் தீர்வா? இத்தனை கோடி ரூபாய்களை வீணாக்குவதா?
அணு
உலையை
அனல்மின் உலையாக மாற்றலாம். அணுவிற்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். அவ்வாறு மாற்றிய முன்னுதாரணங்கள் பல
வெளிநாட்டில் உண்டு. அப்படி முடியாவிட்டால் உலையை மூடுவதைத் தவிர வேறு
வழியில்லை.
ஏற்கனவே
ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 1,78,000 கோடி.
சேதுசமுத்திரத் திட்டத்தில் கடலில் தூர்வாரி பின் அதை மதவாத
சக்திகளுக்குப் பணிந்து பாதியிலேயே கைவிட்டதில் வீணானது பல ஆயிரம் கோடி.
காமன்வெல்த் விளையாட்டு அரங்கம் நிர்மாணித்ததில் செய்த ஊழல் பல ஆயிரம்
கோடி. இந்திய அரசியல்வாதிகள்
கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம்
கோடிகளை ஒப்பிடும்போது இது வெறும் கொசு.
32. நீங்கள் இந்த விபரங்களை அணுஉலை கட்டுமுன்னரே
வெளிப்படுத்தியிருக்கலாமே? கட்டும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?
கட்டும்வரை பேசாமல் இருந்ததாக அரசியல்வாதிகள் கூறுவது முழுப்பொய்.
ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை அல்லது நமக்குத் தெரியவில்லை என்பதற்காக போராட்டம் நடக்கவில்லை என்று கருதக்கூடாது.
1987லிருந்து
தொடர்ந்து போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
1987 செப்டம்பர் 22ல் இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1988ல் இந்தியாவுக்கு வந்த இரசிய அதிபர் கார்ப்பசேவுக்கு கருப்புக்கொடி
காட்டப்பட்டது. 1989-ல் நெல்லையில் ஒரு பெரிய பேரணி நடத்தப்பட்டது. 1989
மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பெரிய பேரணியில் ஜார்ஜ்
பெர்னாண்டஸ் கலந்து கொண்டார்.
1989 மே 1ம் தேதி தேசிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கன்னியாகுமரி பேரணியில் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
இந்த
கூடங்குளம் அணுஉலையின் அடிக்கல் நாட்டு விழா தொடர் எதிர்ப்பின் காரணமாக
மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன்,
கருணாநிதி ஆகியோர் அதில் கலந்து கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டம்
நடைபெற்றது.
ஒருமுறை
இசையமைப்பாளர் இளையராசா அணு உலை எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டபோது
உடனடியாக அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.
2002ல்
அணுஉலையை நிலவியல் ரீதியாக ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டு வழக்குத் தொடர்ந்த காந்தி கிராமப்
பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இப்படி
அரசின் கடுமையான அடக்குமுறைகளை மீறி தொடர்ந்து போராட்டம் நடந்து
கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழக்கம்போல் மக்கள் போராட்டங்களை
இருட்டடிப்புச் செய்கின்றன.
இடையில்
சோவியத் இரசியா உடைந்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு அணுஉலை கட்டும் பணி
நிறுத்தப்பட்டது. 2001-ல் இருந்துதான் மீண்டும் கட்டத்தொடங்கினார்கள்.
அணுமின் நிலையத்தைப் போலவே படிப்படியாக போராட்டமும் வளர்ந்து
நிற்கிறது. புகுசிமா விபத்திற்குப்பிறகு மக்களிடையே அணுஉலையின் நாசங்கள்
பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே இப்போராட்டங்கள் வலுப்பெற்றன.
33.
அந்நிய நாட்டில் சதி காரணமாக
நீங்கள் அணுஉலையை எதிர்ப்பதாகவும், உங்களுக்கு வெளிநாட்டுப் பணம்
வருவதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மன்மோகன்சிங்கும்
குற்றம் சாட்டுகிறார்களே?
கூடங்குளம்
அணுஉலை
இரசிய தொழிற்நுட்பம் என்பதால் அமெரிக்க சதி பின்னணியில் இருப்பதாக குற்றம்
சுமத்துகிறார்கள். ஆனால், அமெரிக்க தொழிற்நுட்பத்துடன் நடக்கும்
தாராப்பூர் அணு உலையையும் எதிர்த்து இதே போன்று போராட்டங்கள் நடக்கிறதே.
அங்கு எந்த நாட்டு சதி பின்னணியில் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால்
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமாரை அமெரிக்கக்
கைக்கூலி என்றே விமர்சிக்கிறார்கள். ஆனால் இதே போன்று மேற்கு வங்கத்தில்
ஹரிப்பூரில் ஒரு அணுஉலையை மூடினாரே அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
அவர் பின்னால் எந்த அந்நிய நாடு உள்ளது? அவர் எந்த நாட்டு கைக்கூலி?
அவர் எந்த நாட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதை மூடினார்.
கூடங்குளம்
மட்டுமல்ல, மகராசுடிராவின் ஜெய்தாபூரிலும் ஏன் ஆந்திரா, கர்நாடகாவிலும்
அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றனவே. அங்கு எந்த அன்னிய சதி
உள்ளது. தைரியமிருந்தால் இதே காங்கிரசுக் கட்சி தான் ஆட்சி செய்யும்
கேரளாவில் வேண்டுமனால் ஒரு அணுஉலை
திறந்து பார்க்கட்டுமே.
வெறும்
காசுக்காக வேலை செய்வது அரசியல் வாதிகளின் பாணி. ஆனால் மக்களுக்காக
உழைக்கும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மூன்றாந்தர அரசியல் பாணியில்
இழிவுபடுத்திப் பேசுவதும் மன்மோகன், நாராயணசாமியின் அரசியல்.
இவ்வளவுக்கும் மன்மோகன், நாராயணசாமியின் கைகளில் அதிகாரம் உள்ளது. ஆட்சி உள்ளது. காவல்துறை உள்ளது. ஏதாவது தவறு
நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். அதை விட்டு மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவது மிகவும் கேவலமான ஒரு செயல்.
34. சில தொண்டு நிறுவனங்கள் தான் இந்தப் போராட்டத்தை
நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார்களே?
மக்கள்
பங்களிப்பு இல்லாமல் வெறும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே ஒரு போராட்டத்தை
நடத்திவிடமுடியாது. அல்லது காசு கொடுத்து மட்டும் ஒரு
எழுச்சியை உருவாக்கிவிட முடியாது. 100 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்தப்
போராட்டத்தை மக்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் யாராலும் நடத்திவிட முடியாது.
மேலும் நியாயமான மக்கள் போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாதா
என்ன?
35. கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆனால் வெளி மாவட்ட மக்களோ அணு உலையை ஆதரிக்கிறார்களே?
உண்மைகளை
அறிந்த, அறிவியலை அறிந்த எல்லோருமே அணு உலையை எதிர்க்கத்தான்
செய்கிறார்கள். மத்திய அரசு, காங்கிரசு கட்சி, பிஜேபி, இந்து முன்னணி
போன்ற சிலர் தம் கட்சிக்காரர்களை விட்டு ஆதரவுப் போராட்டம்
நடத்துகிறார்கள். உண்மைகளை அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளா வண்ணம்
தடுக்கிறார்கள். மின்வெட்டை அதிகப்படுத்தி, கூடங்குளம் அணு உலை
வந்தால்தான் மின்வெட்டுத்
தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில்
மின்வெட்டுப்பிரச்சினை வேறு, அணுஉலைப் பிரச்சினை வேறு. இரண்டையும்
தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடாது. மின் பற்றாக்குறைக்கு அணு உலை தீர்வு
ஆகாது. தவறான மின் பகிர்மானக் கொள்கையாலும், தனியாருக்கு தடையற்ற
மின்சாரம் வழங்கப்பட்டதாலும் தான் மின்தடைப் பிரச்சினையேயொழிய அணுஉலை
திறக்கப்படாமலிருப்பது அதற்குக் காரணம் அல்ல.
மின்சாரம் தயாரிப்பதற்கு பல மாற்று வழிகள் இருந்தாலும் அணு உலை மூலமாகத்தான் நாங்கள் மின்சாரம் தயாரிப்போம். அதற்கு
ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மின்தடைதான் என்று மிரட்டுவது அரசின் பிடிவாதத்தைக் காட்டுகிறது.
மக்கள் கேட்பது எங்களின் பிணக்குவியலிலிருந்துதான் மின்சாரம் பெறப்பட வேண்டுமா?
எங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா? என்பதுதான்.
நீங்கள் எக்கேடும் கெட்டுப்போங்கள், எங்களுக்குத்தேவை 2 விளக்கு, ஒரு
மின்விசிறி என்று பதிலளித்தால் அது சுயநலத்தின் உச்சம்.
36. மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் அரசு ஏன் அணுஉலை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது?
அதில்தான்
அவர்கள் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது. இந்த அணுஉலை
மட்டுமல்ல. இது போன்று 80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு.
இதில் கைமாறும் இந்திய பணம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 8 லட்சம் கோடி.
இப்போது தெரிகிறதா இந்த அரசியல்வாதிகள் ஏன் இதில் வெகு
ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது. நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி
அந்நிய நாட்டினருக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில்
கட்டுகிறார்கள். இதுதான் இவர்களின் தேசபக்தியின் கதை. அணுஉலை
மூடப்பட்டால் அணு
வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் இழப்பேயொழிய மக்களுக்கு அல்ல.
இரசிய, அமெரிக்க தனியார் முதலாளிகளின் இலாபம் முக்கியமா அல்லது மக்களின் உயிரும், சந்ததியின்
எதிர்காலமும் முக்கியமா.
37. இது கிறித்தவ மக்களின் போராட்டம் என்றும், சர்ச் பாதிரியார்கள் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்களே?
அந்தப்பகுதி
கிராமங்கள் பெரும்பாலும் மீனவ கிராமங்கள். அங்கு அதிக எண்ணிக்கையில்
கிறித்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள்
கிறித்தவர்களாயிருப்பதால் தம் வாழ்வை அழிக்கும் அணு உலையை எதிர்த்துப்
போராடக் கூடாது என்கிறீர்களா?
கிறித்தவப்
பாதிரியார்கள் பின்னணியில் இல்லை. நேரடியாகவே மக்கள் போராட்டங்களில்
பங்கேற்கிறார்கள். அதிலென்ன தவறு. இன்னும் கணிசமான அளவில்
இந்துக்களும், இசுலாமியாகளும் ஏன் கேரள மீனவ மக்கள் கூட இப்போராட்டத்தில்
இருக்கிறார்கள்.
38. இந்து முன்னணி, பிஜேபி ஆகியோர் அணு உலையை ஆதரிப்பதன் மர்மம் இதுதானா?
சரியாகப்
புரிந்து கொண்டீர்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ராமர்பாலம் கடலுக்குள்
இருப்பதாகக் கூறி நிறுத்திய கட்சி பிஜேபி. அவர்களுக்கு அணுஉலையைத் திறக்கச்
சொல்லிக் கேட்பதற்கு என்ன தார்மீக
உரிமை இருக்கிறது.
39. அணு உலையை உடனே திறக்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே?
ஆமாம்.
இந்த நாட்டை ஏறத்தாழ 50 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சி செய்த கட்சி
காங்கிரசுதான். இத்தனை ஆண்டுகளில் காங்கிரசு, மக்களுக்கான ஒரு
போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா? சத்தியமூர்த்தி பவனில் வேட்டி கிழிய
சண்டையிடுவதைத் தவிர வேறென்ன
செய்திருக்கிறார்கள் தமிழக காங்கிரசார். மக்களைப்பற்றி இப்போதென்ன புதிதாக
அக்கறை!
40. சி.பி.எம் முதலான கட்சிகள் கூட அணுஉலையை ஆதரிக்கின்றனவே?
ஈழப்பிரச்சினை
நடந்தபோது சி.பி.எம். என்ன செய்தது என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான்.
ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சி.பி.எம்.மின் புத்ததேவ் பட்டாச்சார்யா
நந்திகிராம், சிங்கூரில் முதலாளி டாடாவிற்கு அனுசரணையாக
மக்களை எப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்பதெல்லாம் நாடறிந்த
செய்தி. சி.பி.எம். கட்சி மார்க்சியக் கொள்கைக்கு ஒரு தேசிய அவமானம்.
41. அணு உலை எதிர்ப்பாளர்கள்
தேசத்துரோகிகள். நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு தடை செய்பவர்கள் என்று சொல்கிறார்களே?
இந்த
நாட்டை கொள்ளையடித்து, சுரண்டி, இயற்கை வளத்தை
வெளிநாட்டினருக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து அதில் கமிசன், லஞ்சம்
பெற்று, அந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணமாகப்
பதுக்கி வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகள், தங்களின்
வாழ்வாதாரத்திற்காகவும், தம் சந்ததியரின் நலம் காக்கவும், தம் சொந்த
நிலத்தைக் காக்கவும் போராடும் மக்களைப் பார்த்து தேசத் துரோகிகள் என்று
சொல்வது மகா
அயோக்கியத்தனம்.
அரசியல்வாதிகளில்
யோக்கியர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும்
தெரிந்ததே. நாட்டின் நீர்வளத்தை கொக்கோகோலா, பெப்சி நிறுவனத்திற்கு
விற்றவர்கள், அரசு நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்கள்,
சுதேசி உள்நாட்டு நிறுவனங்களை கொன்றவர்கள், மான்சான்டோ விதைகளை அனுமதித்து
நிலத்தை மலடாக்கியவர்கள் தான் இந்த புதிய உலகப் பொருளாதார மேதைகள்.
இவர்கள் நாட்டின் தொழில்வளத்தைப் பற்றி கவலைப்படுவதாக கூறுவது, ஆடு
நனைகிறதே என்று அழுத ஓநாயின் கதைதான்.
ஏற்கனவே
1,82,000 மெகாவாட் தயாரிக்கப்படும் இந்த நாட்டில் 42% கிராமங்களுக்க மின்
இணைப்பு இல்லை. சென்னையின் வெறும் 500 நிறுவனங்கள் மட்டுமே தமிழக மின்
உபயோகத்தின் 40%-ஐ செலவு செய்கின்றன. சிறு குறு தொழில்கள்,
விவசாயத்திற்கு 8 மணி நேர மின் வெட்டு. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தடையற்ற மின்சாரம். இதுதான் இந்தியாவின் தொழிற்கொள்கை.
42. இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்?
மக்கள்
விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அது
அராஜகம். சென்ற தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற இயற்கையை வரும் தலைமுறைக்கு
பாதுகாப்பாக விட்டுச் செல்ல
வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு. இயற்கையை நஞ்சாக்க யாருக்கும்
உரிமை இல்லை. மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அல்ல.
மக்களுக்காகத்தான் எல்லாமே, அவர்களை அழித்து அல்ல.
மக்களின்
நியாயமான சந்தேகங்களுக்கு அரசுகள் பதில் சொல்லட்டும். ஒரு திறந்த
விவாதத்திற்கு அரசுகள் வரட்டும். அதை விட்டுவிட்டு வெளிநாட்டு பணம்
என்றும், தேசத் துரோகம் என்றும், அந்நிய சதி என்றும் மூன்றாந்தரக்
குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மக்கள் பக்கமிருக்கும் நேர்மையை
கொச்சைப்படுத்துவதாகும்.
மின்சாரத்
தேவைக்கும் அணுஉலைக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் வேறுவேறு
பிரச்சினைகள். மக்களுக்கு இதைத் தெளிவாக்க வேண்டியது நம் கடமை.
மின்
தடையை நீக்கக் கோரி மக்களோடு இணைந்து நாமும் போராடுவோம். ஆனால் அதற்காக
கொலைகார அணுஉலையை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் மக்கள் நடமாட்டம்
இல்லாத ராஜஸ்தான் பாலைவனங்களில் அவர்களது அணு சோதனைகளை நடத்திக்கொள்ளட்டும்
அல்லது பாதுகாப்பானது என்ற தைரியமான
நம்பிக்கை இருந்தால் டெல்லியில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளட்டும்.
பதிவு செய்தவர் Ameer
on 12:42 PM. தலைப்பு
கேள்வி பதில்,
செய்திகள்
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன