சச்சார் அறிக்கையின் அடிப்படையில் நல்லதொரு முயற்சி

உத்தரப்பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை, அகிலேஷ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவியாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அவர்களின் திருமணத்திற்காக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். முஸ்லிம்களின் மையவாடிகளுக்கு (கபரஸ்தான்களுக்கு) காம்ப வுண்ட் சுவர் கட்டிக் கொடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவை முடிவை கடுமையாக எதிர்த்துள்ள சங்பரிவார அமைப்பான பாரதீய ஜனதா யுவமோர்ச்சா மாநிலத் தலைவர் திரிவேதி, அனைத்து சமுதாயப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முலாயம்சிங் யாதவ், முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையை அறிய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார் அளித்த ஆய்வறிக்கையில், முஸ்லிம்கள் தலித்துகளைவிட மோசமான நிலையில் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகளில் பின்தங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவே முதல்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். நாங்கள் வெளியிட்ட சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளோம். இதனால்தான் முஸ்லிம்களில் பெரும்பாலோர் முதன்முறையாக சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
மிக விரைவில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும். மற்ற அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மையவாடி, தர்கா நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்போம் என குறிப்பிட்டுள்ளார்.
முலாயம்சிங் யாதவின் நடவடிக்கைகள் உ.பி. முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் நடத்தும் பாஜக மற்றும் சங்பரிவார அமைப்புகள் முஸ்லிம்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை எதிர்ப்பது வாடிக்கைதான். ஏற்கனவே உ.பி. முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் 47 அமைச்சர்களில் 10 பேர் முஸ்லிம்கள். உ.பி. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு 21 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளார் முலாயம் சிங். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு 224 சட்டமன்ற உறுப்பினர்களில் 43 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது